மகாராஷ்டிரா: "இவர்களுக்கு யாரும் இல்லை" - குழந்தைகளை பஸ்ஸில் அமரவைத்துவிட்டு காத...
தென்காசி மாவட்டம் சிவசைலம் ஸ்ரீசிவசைலநாதர்: விரைவில் திருமணம் நடக்க மஞ்சள் இடிக்கும் பிரார்த்தனை!
தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள பஞ்சகுரோதத் தலங்கள் மிகவும் பழைமையானவை. பாபநாசம், ஆழ்வார்குறிச்சி, சிவசைலம், கடையம், திருப்புடைமருதூர் ஆகிய தலங்களில் சிவசைலத்துக்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு.
ஈசனின் சுயம்பு லிங்கத்தைத் தரிசனம் செய்ய விரும்பினார் அத்ரி. அகத்தியர் வழிகாட்ட மேற்கு மலைத்தொடரிலுள்ள திரிகூடப் பர்வதத்தில் தன் மனைவி அனுசுயாதேவி, மகன் தத்தாத்ரேயர், சீடர் கோரட்சகர் ஆகியோருடன் வந்து தவம் செய்தார் அத்ரி.
ஒரு பெளர்ணமி நாளில் பூஜைக்கான கடம்ப மலர்களைப் பறிக்க வனத்துக்குச் சென்றார்கள் அத்ரியின் சீடர்கள். வனத்தில் ஒரு பாறையின் அருகில் கடம்ப மரத்தின் அடியில், பசுக்கள் தாமாகவே பால் சுரந்துகொண்டிருப்பதைக் கண்டு திகைத்தனர்.
அருகில் சென்றபோது அங்கே சிறிய சிவலிங்கத்தைக் கண்டனர். அதனால் சிலிர்ப்படைந்தவர்கள், கையில் பறித்து வைத்திருந்த கடம்ப மலர்களை லிங்கத்தின்மீது தூவி வழிபட்டார்கள்.
பின்னர் அத்ரி மகரிஷியிடம் ஓடோடிச் சென்று விஷயத்தைச் சொன்னார்கள். சீடர்கள் சொன்ன இடத்துக்கு மனைவியுடன் சென்ற அத்ரி மகரிஷி, அங்கே சுயம்புலிங்கத்தைத் தரிசித்துப் பேரானந்தம் அடைந்தார்.

“எம்பெருமானே அகத்தியருக்குப் பொதிகை மலையில் திருமணக் கோல காட்சி அளித்தது போல, எங்களுக்கும் தங்களின் மணக் கோலத்தைக் காட்டியருளவேண்டும்'' என்று பிரார்த்தித்தார்.
சிவனார் அவர்களுக்குத் தன் மணக்கோலத்தைக் காட்டியருளினார். பெரிதும் மகிழ்ந்த அத்ரி, ``எங்களுக்குக் கிடைத்த இந்தப் பாக்கியம் இங்கு உம்மைத் தேடி வரும் பக்தர்களுக்கும் கிடைக்கவேண்டும்'' என்று வேண்டிக் கொண்டார். பகவானும் அதற்கு இசைந்தார்.
அப்போது அந்தப் பகுதியை ஆண்டு வந்தவர் சுதர்சன பாண்டியன் கனவில் தோன்றிய ஈசன், ``சிவசைலத்தில் சுயம்புவாகத் தோன்றியுள்ள எனக்கு ஆலயம் எழுப்பி வணங்கி வா. உனக்குக் குழந்தைப்பேறு கிடைக்கும்'' எனக் கூறி மறைந்தார் ஈசன்.
தூக்கம் கலைந்து திடுக்கிட்டு எழுந்த மன்னர், அடுத்த நாளே ஆலயம் எழுப்பும் திருப்பணியைத் தொடங்கினார்.
அதேபோன்று சிவாசார்யர் ஒருவரின் கனவில் தோன்றிய ஈசன், `இவ்வூரில் வடக்குத் தெரு கிணற்றில் அம்பிகையின் சிலை உள்ளது. அதைக் கண்டெடுத்து சிவசைலத்திலுள்ள என் தலத்தில் பிரதிஷ்டை செய்' எனச் சொல்லி மறைந்தார்.
சிவாசார்யரும் மக்களும் கிணற்றில் அம்பிகையைக் கண்டெடுத்து சிவசைலம் கொண்டுவந்தனர். திருக்கோயில் எழுப்பப்பட்டதிலிருந்து மன்னர், தினமும் ஆலயத்துக்கு வந்து சுவாமி, அம்பாளை தரிசனம் செய்துவிட்டுச் செல்வதும், தரிசனத்துக்குப் பிறகு ஸ்வாமி, அம்பாளுக்குச் சூட்டப்பட்ட மலர்களை மன்னனுக்குச் சிவாசார் யார் பிரசாதமாக வழங்குவதும் வழக்கமாக நடந்து வந்தது.
ஒருநாள்... ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், மன்னர் வருவதற்குத் தாமதமானது.
`இனி மன்னர் வரமாட்டார்' என நினைத்து, அவருக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த மலர்களை நாட்டியமாடும் தேவதாசிப் பெண்ணிடம் கொடுத்தார் சிவாசார்யர். அந்தப் பெண்ணும், பயபக்தியுடன் வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டு தலையில் சூடிக்கொண்டாள்.

அடுத்த சில நிமிடங்களில் மன்னன் கோயிலின் அருகில் வந்துகொண்டிருப்பதாகத் தகவல் வர, திகைத்துப்போன சிவாசார்யர் அந்தப் பெண்ணி டம் கொடுத்த மலர்களை வாங்கித் தன் வசம் வைத்துக்கொண்டார். ஸ்வாமி தரிசனத்துக்குப் பிறகு வழக்கம்போல மன்னரிடம் மலர்களைப் பவ்யமாகக் கொடுத்தார் சிவாசார்யர். மன்னன் அவற்றைப் பெற்று கண்களில் ஒற்றிக்கொள்ள போனபோது, நீளமான தலைமுடி ஒன்று இருந்தது.
“சுவாமிக்குச் சூடிய மாலையில் தலைமுடி எப்படி வந்தது” என மன்னன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழித்த சிவாசார்யர், பின்னர் ஒருவாறு சுதாரித்துக்கொண்டு, “மன்னா.. சுவாமிக்கு நீண்ட சடைகள் இருப்பதால், அதிலிருந்து ஒட்டிக்கொண்ட முடியாக இருக்கும்” என்று சிவசைலநாதர்மீது பாரத்தைப் போட்டு ஒரு பொய்யைச் சொன்னார்.
மன்னர் வியந்தார். ``இத்தனை நாளும் கோயிலுக்கு வந்து செல்கிறேன். ஒருநாள்கூட சுவாமிக்குச் சடை இருப்பதை நான் பார்த்ததில்லையே... லிங்கத்துக்குச் சடை இருக்கிறதா, இல்லையா என்பதை எனக்குக் காட்ட முடியுமா...” எனக் கேட்டான்.
“மன்னா, சுவாமி சந்நிதியின் பின்புறச் சுவரில் மூன்று துளைகள் அமைக்கவேண்டும். அவற்றின் வழியாக சுவாமிக்குச் சடை இருப்பதைக் காணலாம்” என்றார் சிவாசார்யர்.
“நாளையே துளையிட்டுப் பார்க்கிறேன்” எனக் கூறிச் சென்றான் மன்னன்.
சிவாசார்யர் கலங்கினார். “ஈசனே... என்னை மன்னித்துக் காப்பாற்றிட வேண்டும்” என்று இறைவனிடம் மண்டியிட்டு வேண்டிக்கொண்டர். அப்போது, `நாளை கற்பூர ஆரத்தியின்போது சடாமுடியுடன் காட்சியளிப்பேன்' என அசரீரி ஒலித்தது.
மறுநாள் மன்னரின் ஆணைப்படி சுவரில் மூன்று துவாரங்கள் இடப்பட்டன. துவாரங்களின் வழியே மன்னர் கவனித்தார்.

கருவறைக்குள் சிவாசார்யர் கற்பூர ஆரத்தி காட்டும்போது லிங்கத்தின் பின்புறம் நீண்ட சடைமுடியுடனும், அதில் மலர்கள் சூடியிருப்பதுபோலவும் சிவசைலநாதர் காட்சியளிக்க, திகைப்புடனும் சிலிர்ப்புடனும் வணங்கிய மன்னர், சிவாசார்யரிடம் மன்னிப்பு கேட்டார்.
இப்போதும் கருவறைக்குப் பின்புறம் மூன்று துவாரங்கள் உள்ளன. அபிஷேகத்தின்போது அந்தத் துவாரங்களின் வழியாக தரிசித்தால், லிங்கத்தின் பின்பகுதியில் முடிபோன்ற கோடுகள் இருப்பதைக் காணலாம்.
ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் திகழும் இந்த ஆலயத்தில், ஸ்வாமியும் அம்பாளும் மேற்கு நோக்கித் தனித்தனிச் சந்நிதிகளில் காட்சியளிக்கிறார்கள். இங்குள்ள ஈசன், அத்ரி முனிவர் வழிபட்டதால் ‘அத்திரீசுவரர்’ என்றும் மன்னனுக்குச் சடையுடன் காட்சியளித்ததால் `சடையப்பர்’, ‘சடைமுடி நாதர்’ என்றும் அழைக்கப்படுகிறார். அம்பாள் பரம கல்யாணி நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார்.
கிழக்கு நோக்கி ஸ்ரீசைல விநாயகர், வலதுபுறம் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் சந்நிதிகளும், இடதுபுறம் வள்ளி தெய்வானையுடன் சுப்பிர மணியரும் அருள்பாலிக்கிறார்கள். சிவன் சந்நிதியின் இடப்புறம் தட்சிணாமூர்த்தியும், அம்பாள் சந்நிதியின் வலதுபுறம் சப்த கன்னியர் களும், சுற்றுப்பிராகாரத்தில் 63 நாயன்மார்களும் உள்ளனர். கொடிமரத்தின் முன்பு, முன் காலை ஊன்றி எழும் நிலையில் காட்சியளிக்கிறார் நந்திகேஸ்வரர்.
`மன்னனுக்குக் குழந்தைப்பேறு வழங்கிய தலம் என்பதால் இங்கு வந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அம்பாளின் திருப்பெயர் பரமகல்யாணி. ஆகவே, திருமணத்தடைநீங்க இந்த அம்மனை வணங்குவது விசேஷம்.
இங்கு ஸ்வாமி, அம்பாளுக்கு 11 வகை திரவியங் களால் அபிஷேகம் செய்து, சிவசைலநாதருக்கு வெள்ளை வஸ்திரமும், அம்பாளுக்கு மஞ்சள் அல்லது சிவப்பு நிறப் பட்டும் சாத்தி, பிச்சி அல்லது மல்லிகைப் பூமாலை சூட்டி சர்க்கரைப்பொங்கல் சமர்ப்பித்து வழிபட்டால் வேண்டும் வரம் கிடைக்கும்' என்கிறார்கள் பக்தர்கள்.
அம்பாள் சந்நிதிக்கு நேர் எதிரில் உள்ள உரலில், திருமணமாகாத பெண்கள் ஒரு கைப்பிடி விரலி மஞ்சளைப் போட்டு இடித்து அதில் ஒரு துளியை நெற்றியில் பூசிக்கொள்கிறார்கள். திருமணமான பெண்கள் மஞ்சள் இடிக்காமல் உரலில் உள்ள மஞ்சள்தூளை எடுத்துப் பூசிக்கொள்கிறார்கள். இதன் பலனாக கன்னிப்பெண்களுக்கு விரைவில் கல்யாணம் கூடிவரும், சுமங்கலிகளுக்கு மாங்கல்ய பலம் வாய்க்கும் என்பது நம்பிக்கை.
இந்த வழிபாட்டையொட்டி வழங்கப்படும், ‘மஞ்சள் இடித்தால் மாங்கல்யம் கிடைக்கும்’ எனும் சொலவடை இந்தப் பகுதியில் பிரசித்தம்.
விவசாயிகள் மாடு, டிராக்டர் போன்றவை வாங்கினால் இத்தல நந்திகேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து உளுந்து நைவேத்தியம் படைத்து வழிபடுகிறார்கள். இதனால் அந்தக் கால்நடைகளை எந்தப் பிணியும் அண்டாது. வாகனங்கள் எவ்வித விபத்திலும் சிக்காமலும், அடிக்கடி பழுதாகாமலும் திகழும் என்பது நம்பிக்கை. மேலும், `இத்தலத்தில் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேக வைபவம் செய்வதும் சிறப்பு' என்கிறார்கள் பக்தர்கள்.
நெல்லைச் சீமைக்குச் செல்லும் அன்பர்கள் அவசியம் இந்தத் தலத்துக்கும் சென்று வழிபட்டு வாருங்கள்; உங்கள் வாழ்க்கை செழிக்கும்.





















