செய்திகள் :

திருநெல்வேலி மாவட்டம் கருங்காடு பரவா எல்லைநாதர் : ஆட்டுத்தலையுடன் நந்தி அருளும் தலம்; ஏன் தெரியுமா?

post image

ஒருமுறை திருநெல்வேலியை ஒட்டிய கிராமங்களில் கடும் வறட்சி நிலவியது. அதன் காரணம் அறிந்துகொள்ள மக்கள் கோரக்க சித்தரைச் சரணடைந்தனர். அவரும் தன் ஞானதிருஷ்டியால் ஒரு மாபெரும் உண்மையைக் கண்டடைந்தார்.

சிவபெருமான் மீது கோபம் கொண்டான் தட்சன். அவரை அழைக்காமலும் அவருக்கு உரிய அவிர்பாகத்தை அளிக்காமலும் மாபெரும் யாகம் நடத்தினான். அதனால் கடும் சீற்றத்துக்கு ஆளான சிவபெருமான் தட்சனையும் யாகத்தையும் அழித்தார்.

யாகத்தில் கலந்துகொண்டோரும் தண்டனைக்கு ஆளானார்கள். அக்னி பகவானும் அவருடைய ஆட்டு வாகனமும்கூட தண்டனையிலிருந்து தப்ப இயலவில்லை.

கருங்காடு பரவா எல்லைநாதர் கோயில்
கருங்காடு பரவா எல்லைநாதர் கோயில்

தட்ச யாகம் அழிந்தும் சினம் தணியாத ஈஸ்வரன், பரதக் கண்டத்தின் தென்பகுதியில் - நெல்லைச் சீமையில் தாமிரபரணிக் கரையில் உள்ள மேலநத்தம் எனும் தலத்தை அடைந்து உக்கிரத்துடன் அமர்ந்தார்.

அவருடைய உக்கிர வெம்மை தாமிரபரணியின் மறுகரையில் உள்ள கருங்காடு வரை வீசியது. ஆகவேதான் மேலநத்தம், கரிக்காதோப்பு, கருங்காடு, கரிசூழ்ந்தமங்கலம் முதலான கிராமங்களில் வறட்சியும் பஞ்சமும் ஏற்பட்டன.

இதை அறிந்த சித்தர் அவரைச் சாந்தப்படுத்த முயன்றார். மேலநத்தத்துக்கு நேர் எதிரேயுள்ள கருப்பந்துறையில், கிழக்கு முகமாக ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். அந்த இறைவன் `அழியாபதி ஈஸ்வரர்’ என்று திருப்பெயர் கொண்டார்.

அதேபோல், சித்தர்கள் அனைவரும் பெளர்ணமி தினத்தில் ஒன்றுகூடி மேலநத்தம் அக்னீஸ்வரருக்கும் அபிஷேக ஆராதனைகளுடன் பூஜைகள் நடத்தினர். அக்னீஸ்வரர் சாந்தமானார். இன்றும் அனைவருக்கும் அனைத்து நன்மைகளையும் வழங்கும் சுவாமியாய் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

அக்னிதேவன் இங்கு வந்து வழிபட்டு விமோசனம் பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது. இதையொட்டி, மேலநத்தம் தலத்தில் அக்னி பகவானின் வாகனமான ஆட்டுத் தலையுடன் காட்சி தருகிறாராம் நந்தி பகவான்.

கருங்காடு பரவா எல்லைநாதர் கோயில்
கருங்காடு பரவா எல்லைநாதர் கோயில்

இங்ஙனம், சிவபெருமானின் உக்கிரத்தைத் தணிக்கும் வகையிலான முயற்சியில் இறங்கிய சித்தர்களும் முனிவர்களும் கருங்காடு கிராமத்திலும் ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார்கள்.

வெம்மையைப் பரவ விடாமல் தடுக்கும் வேண்டுதலோடு எழுந்தருள் செய்யப்பட்ட அந்த சுவாமி, `பரவா எல்லை நாதர்’ என்று திருநாமம் கொண்டார்.

தற்போதும் இவர் வெம்மை - வறட்சியை மட்டுமல்ல, பெருந்தொற்று போன்ற கொடும் பிணிகளும் அதிகம் பரவாமல் அருள்செய்து வருகிறார் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் பக்தர்கள்.

இந்தக் கோயிலில் லிங்க வடிவில் கோரக்கரும் தனிச் சந்நிதி கொண்டுள்ளார். இவரை வணங்கி வழிபட்டால் சகல இன்னல்களிலிருந்தும் நம்மைப் பாதுகாப்பார். தாமிரபரணியின் நீர்ப்போக்கு இவ்வூர் எல்லையில் சிறப்புடன் அமைந்துள்ளது.

இவ்வூரில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாயும் தாமிரபரணி நதி, இவ்வூரின் முடிவில் இடப்பக்கம் திசைமாறி தெற்கு வடக்காகப் பாய்கிறாள்.

இவ்வூரைச் சுற்றி ஏறக்குறைய ஓர் ஆரம் போன்று இந்த நதி பாய்வது விசேஷ அம்சமாகும். தன்னுடைய தீரத்தில் வேறெந்த தலத்திலும் இப்படியான விசேஷ அமைப்புடன் தாமிரபரணி பாயவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருங்காடு பரவா எல்லைநாதர் கோயில்
கருங்காடு பரவா எல்லைநாதர் கோயில்

இதன் கரையில் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது அருள்மிகு பரவா எல்லைநாதரின் ஆலயம். ஒரு காலத்தில் பிரமாண்டமாகத் திகழ்ந்த இந்த ஆலயம், வெள்ளப் பெருக்கில் சிதைந்து போனதாம்.

பிற்காலத்தில் உள்ளூர் சிவனடியார்கள் ஒன்றிணைந்து தற்போதுள்ள கோயிலைப் பராமரித்து வழிபாடுகள், விழா வைபவங்களைச் சிறப்புற நடத்தி வருகிறார்கள்.

இங்கு வந்து வேண்டிக்கொண்டால் விரைவில் திருமண வரம் கைகூடும் என்கிறார்கள்.

காசிக்கு நிகரான தலம் இது எனப் போற்றும் அன்பர்கள், இவ்வூர் இறைவனை காசி விஸ்வநாதர் என்றும் அம்பாளை விசாலாக்ஷி என்றும் அழைத்து வழிபடுகிறார்கள். ஆக, காசிப் புண்ணியம் அருளும் தலமாகவும் விளங்குகிறது இவ்வூர்.

வறுமையில் வாடும் அன்பர்கள் இங்கு வந்து இந்த வழிபட்டால், விரைவில் வறுமை நீங்கும்; இல்லத்தில் செல்வம் செழிக்கும். விவசாயத்தில் நட்டம் ஏற்படுபவர்கள் எங்கள் ஈசனை வழிபட்டால் பாதிப்புகள் நீங்கி நல்ல மகசூல் பெறலாம்.

பிணிகள் தீரவும் அருள்புரியும் மகேசன் இவர் என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் நட்சத்திரகிரி சுயம்பு முருகன் - நாகதோஷம் தீர்க்கும் தலம்!

குன்றுதோறும் கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமான், சுயம்பு வடிவ லிங்கத் திருமேனியராய் அருளும் தலம்தான் நட்சத்திரகிரி. இத்தலத்தின் சிறப்பு கார்த்திகைப் பெண்களும் 27 நட்சத்திரங்களும் தினமும் இங்கு வந்த... மேலும் பார்க்க

நாகப்பட்டினம் மாவட்டம் திருவிடைக்கழி முருகன் திருக்கோயில் - வினைகள் விலகும்... திருமணம் கைகூடும்!

சந்தத் தமிழ்க் கொண்டல் அருணகிரிநாத சுவாமிகள், திருப்புகழ் பாடல்களால் போற்றிப்பரவிய முருகப்பெருமானின் திருத்தலங்கள் ஏராளம். அவற்றில் மிகவும் முக்கியமானது திருவிடைக்கழி. பிறவிப்பேறு பெற, வாழ்வில் உயர்நி... மேலும் பார்க்க

செங்கல்பட்டு மாவட்டம் மேல்கோட்டையூர் ஸ்ரீமேகநாதசுவாமி: நாகதோஷம் தீர்க்கும் வாசுகி நர்த்தனர் சந்நிதி!

பெரும்பாலும் ஆலயங்களில் கருவறையில் ஈசன் லிங்க மூர்த்தமாக கிழக்கு நோக்கி எழுந்தருளியிருப்பார். சில தலங்களில் மேற்கு நோக்கியும் ஈசன் அருள்பாலிப்பதுண்டு. அப்படி மேற்கு நோக்கிய ஈசனைத் தரிசனம் செய்தால் ஆயி... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டம், அரசர்குளம் ஸ்ரீகள்ளவாண்டவர்: பிரச்னைகள் தீர்க்கும் வேட்டைப் பானை வேண்டுதல்!

ராமாயணத்தோடு தொடர்புடைய தலங்கள் பல தமிழகத்தில் உள்ளன. அவற்றில் மிகவும் முக்கியமான தலம் ஒன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. ராமாயணத்தில் முக்கியமான நிகழ்வு வாலி வதம். வாலியிடமிருந்து தன் மனைவியை மீ... மேலும் பார்க்க

கரூர் மாவட்டம் ஐயர்மலை ரத்தின கிரீஸ்வரர் கோயில்: குலதெய்வம் தெரியாதவர்கள் இவரை வணங்கலாம்!

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டத்தில் அமைந்திருக்கிறது ஐயர்மலை. இங்குதான் ஈசன் ரத்தினகிரீஸ்வரராக சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு அம்மனுக்கு சுரும்பார்குழலி என்பது திருநாமம். தேவாரப் பாடல்பெ... மேலும் பார்க்க

வெள்ளியங்கிரி மலையேற இன்று முதல் தடை! – காரணம் என்ன?

தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை, கோவை அருகேயுள்ள பூண்டி பகுதியில் அமைந்துள்ளது. பூண்டி அடிவாரத்தில் இருந்து, மலை மீது அமைந்துள்ள சுயம்புலிங்கத்தை தரிசிக்க 5.5 கி.மீ தூரம் மலைப்பாதையில் ... மேலும் பார்க்க