வெகுண்டெழுந்த மும்பை; தொடர் தோல்வியில் பஞ்சாப்; தத்தளிக்கும் டாப்-4 கனவு - நடந்த...
தூத்துக்குடி மாவட்டம், அரசர்குளம் ஸ்ரீகள்ளவாண்டவர்: பிரச்னைகள் தீர்க்கும் வேட்டைப் பானை வேண்டுதல்!
ராமாயணத்தோடு தொடர்புடைய தலங்கள் பல தமிழகத்தில் உள்ளன. அவற்றில் மிகவும் முக்கியமான தலம் ஒன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது.
ராமாயணத்தில் முக்கியமான நிகழ்வு வாலி வதம். வாலியிடமிருந்து தன் மனைவியை மீட்பதற்காக அத்திரிமலையில் ஓய்விலிருந்த ராமரிடம் சரணடைந்தான் சுக்ரீவன் என்கிறது தலவரலாறு.
வாலி வதத்துடன் தொடர்புடைய அத்தலத்தில் ஸ்ரீராமர் சுக்ரீவனுக்கு அபயம் அளித்தார். அதேவேளையில் வாலி வாங்கியிருந்த வரத்தையும் நினைவுகூர்ந்தார். வாலியை எதிர்த்து எதிரில் யார் நின்றாலும், எதிரில் நிற்பவரது சக்தியில் பாதி வாலிக்கு வந்துவிடும். அப்படிப்பட்ட வல்லமை கொண்ட வாலியை மறைந்து இருந்துதான் தாக்க வேண்டும் என்று தீர்மானம் செய்தார்.

`மணக்கரை’ என்னும் பகுதியில் சுக்ரீவனை வாலியோடு போர் செய்ய அனுப்புகிறார் ராமன். வாலி சுக்ரீவ யுத்தம் தொடங்கியது. அப்போது ஸ்ரீராமன் மறைந்து நின்று தாக்க, ராமபானம் தாக்கப்பட்டுக் கீழே விழுந்தான் வாலி.
வேதனையில் தவித்தவன் கோபத்தில், ``மறைந்திருந்து என்னைத் தாக்கி விட்டாயே கள்ள ராமா... கள்ள ஆண்டவனே...” எனச் சொல்லி ராமனிடம் நீதி கேட்டான். அப்படி வாலி விழுந்து உயிர் துறந்த இடம் மணக்கரை என்கிறார்கள் இந்த ஊர் மக்கள். இந்த இடம் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ளது.
வாலி, `கள்ள ஆண்டவரே' என்று அழைத்ததால் இங்கே ராமரைக் கள்ள ஆண்டவர் என்றே அழைத்தனர் பக்தர்கள். அதுவே மருவி, `கள்ளவாண்டர்' என்றானது. இங்கு கள்ளவாண்டருக்கும், கிருஷ்ணருக்கும், சிவனுக்கும், அனுமனுக்கும் பீடங்கள் எழுப்பப் பட்டு வழிபடப்பட்டனர்.
பிற்காலத்தில் இங்கிருந்து பிடிமண் எடுத்துச் சென்று முத்தாலங்குறிச்சி, நடுவக்குறிச்சி, ஆறாம் பண்ணை, ஆதிச்சநல்லூர், கருங்குளம், அரசர்குளம், வல்லக்குளம், தீராத்திகுளம், ஸ்ரீபராசங்குநல்லூர், ஸ்ரீராமன்குளம் போன்ற பல ஊர்களிலும் கள்ளவாண்ட சுவாமி கோயில்கள் கட்டப்பட்டன.
ஆனால் ஆதிக் கோயில் மணக்கரைக் கோயில்தான். இந்தப் பகுதியில் பலருக்கும் கள்ளவாண்டர், கள்ளராமர் என்ற பெயர்கள் வைக்கப் படுகின்றன.
தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் அருகில் உள்ள அரசர்குளம் கிராம ஆலயத்தில்தான் சித்திரை மாதம் கோலாகலமாகத் திருவிழா கொண்டாடப்படுகிறது. அந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுதான் வேட்டைப் பானை வைபவம். பெரிய மண் பானைகளை வைத்து பனை ஓலைகளால் தீ மூட்டி பச்சரிசி போட்டு கஞ்சி காய்ச்சினார்கள்.

கஞ்சி கொதித்ததும் சாமியாடி வந்து வேட்டைப்பானை போடும் நிகழ்வைத் தொடங்கிவைத்தார். சாமியாடிகள் ஒரு கட்டத்தில் கையையும் கொதிக்கும் கஞ்சிப் பானைக்குள் விட்டு கஞ்சியை அள்ளித் தலையில் ஊற்றிக் கொள்கிறார்கள்.
`எவராக இருந்தாலும் நேருக்கு நேர் நின்று போர் புரிந்து வெற்றி பெற வேண்டும் என்பதுதான் அறம். வாலியை மறைந்திருந்து கொன்றதற்குத் தண்டனையாக ஸ்ரீராமர் சுடுகஞ்சியை எடுத்துத் தன் மீது ஊற்றிக்கொள்கிறார்' என்கிறார்கள் ஊர்மக்கள்.
அதிசயமாக இதுவரை வேட்டைப்பானை போடும் சாமியாடிகள் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்பட்டதில்லை. இது ஸ்ரீராமரின் அருள்தான் என்றும் கூறுகிறார்கள்.
சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழும் மக்கள் கள்ளவாண்டரைத் தங்கள் வீட்டுக் காவல் தெய்வமாகவே பார்க்கிறார்கள். இங்கு வாழும் வீடுகளில் ஏதேனும் திருட்டு நடந்துவிட்டால் மூன்றே நாள்களில் திருடியவருக்குத் தாங்க முடியாத கஷ்டம் கொடுக்கப்பட்டு, திருடனை ஊருக்குக் காட்டிக் கொடுத்து விடுவாராம் கள்ளவாண்டர். அவர் ஆட்சி புரியும் கிராமங்களில் களவு என்ற பேச்சிற்கே இடமில்லை என்கிறார்கள். பக்தர்கள்.
கள்ளவாண்டருக்கு வேட்டைப்பானை போடுவதாக வேண்டிக் கொண்டால் விவசாயத்தில் அதிக மகசூல், கல்வியில் மேன்மை, வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தைப்பாக்கியம் ஆகிய வேண்டுதல்களை நிறைவேற்றித் தருவாராம் கள்ளவாண்டர்.

வேண்டுதல் நிறைவேறியதும் கோயில் சார்பில் `ஊர்ப் பானை' என 5 வேட்டைப்பானைகள் வைக்கப்படுகின்றன. தங்களின் வேண்டுதல்களுக்காக பக்தர்களும் அடுத்தடுத்து பானை வைப்பதால், ஒவ்வோர் ஆண்டும் பானைகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது.
எந்தப் பானைக்குள் சாமியாடி கையை விட்டுக் கஞ்சியை எடுக்கிறாரோ, அந்தப் பானைக்காரருக்கு செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வேட்டைப் பானை நிகழ்ச்சி முடிந்ததும் அந்தந்தப் பானைக்காரர்கள் பானையை வீட்டிற்கு எடுத்துச் சென்று மீதமுள்ள அரிசிக்கஞ்சியுடன் தேங்காய்த் துவையல் வைத்துச் சாப்பிடுகிறார்கள். பின்னர், பானையை நன்கு கழுவி அதனுள் விதைநெல் போட்டு பூஜையறையில் வைத்து விடுகிறார்கள்.
தினமும் பானைக்குப் பூ போடப்பட்டு கற்பூர ஆரத்தி காட்டி வழிபாடு செய்கிறார்கள். வேட்டைப்பானை வடிவில் கள்ளவாண்டரே வந்து தம் வீட்டில் வாசம் செய்வதாக நம்புகிறார்கள் பக்தர்கள்.
வாய்ப்பிருக்கும் அன்பர்கள் அரசர்குளம் சென்று கள்ளவாண்டரை வழிபட்டு வாருங்கள். வாழ்க்கை வளமாகும்.




















