மாணவர் தலைவர் டு கேரள முதல்வர்... டெல்லி தலைமையால் தவிர்க்கவே முடியாத இந்த வி.டி...
மகாராஷ்டிரா: எரிபொருள் செலவைக் குறைக்கச் சொன்ன பிரதமர்; தலைமை செயலகத்திற்கு பைக்கில் வரும் முதல்வர்
பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்கள் தங்கம் வாங்குவதைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதோடு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்படியும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் படியும், வீட்டில் இருந்தே பணியாற்றும்படியும் கூறி இருக்கிறார்.
அவரது கோரிக்கையை ஏற்று மத்திய அமைச்சர்கள் தங்களது செலவுகளைக் கட்டுப்படுத்த ஆரம்பித்துள்ளனர். சிலர் கார்களை தவிர்த்து வருகின்றனர். அதோடு பாதுகாப்புக்கு வருபவர்களின் எண்ணிக்கையையும் குறைத்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது அரசு இல்லத்தில் இருந்து தலைமை செயலகத்திற்கு ராயல் என்பீல்டு புல்லட்டில் வந்தார். அவருடன் மற்றொரு மாநில அமைச்சர் ஆசிஷ் ஷெலார் பின்னால் இருந்து வந்தார்.
அவர்கள் பயணம் செய்த பைக் மும்பை போலீஸாருக்குச் சொந்தமானது ஆகும். முதல்வர் பைக்கில் சென்றபோது அவருக்குப் பாதுகாப்பாக மேலும் 4 பைக்கில் பாதுகாப்பு அதிகாரிகள் அவரைப் பின் தொடர்ந்து சென்றனர்.

அதோடு பட்னாவிஸ் தனது பாதுகாப்பையும் குறைத்துக்கொண்டுள்ளார். தனது சக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் பொதுபோக்குவரத்தில் பயணம் செய்யும்படியும், வாரத்தில் ஒரு நாளாவது மெட்ரோ ரயில் போன்றவற்றில் பயணம் செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து பட்னாவிஸ் அளித்த பேட்டியில், ''நாம் இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்ளும்போது, அது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. புதன்கிழமை முதல், எங்களது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளோம், அதை மேலும் குறைக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் வலியுறுத்தியுள்ளேன்.
அனைத்து வெளிநாட்டுப் பயணங்களையும் நாங்கள் தடை செய்துள்ளோம், எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் பெட்ரோல்/டீசலைச் சேமிப்போம். அடுத்த ஆறு மாதங்களுக்கு, வெள்ளிக்கிழமை சத்தாராவில் (Satara) நடக்கும் ஒரு நிகழ்ச்சியைத் தவிர, அரசு எந்த ஒரு பெரிய நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்யாது.
அது ஏற்கனவே திட்டமிடப்பட்டு, அதற்கான பணமும் செலவிடப்பட்டுவிட்டது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின் கீழ் சுமார் 25-30 லட்சம் குடும்பங்களின் கணக்குகளுக்கு நேரடியாக ரூ.10,000 கோடி நிதி மாற்றப்படும். எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் பணத்தைச் சேமிக்க முயற்சிப்போம்'' என்று தெரிவித்தார்.
முதல்வர் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் பயணிப்பது ஒரு வழக்கமான நடைமுறையாக இருக்குமா என்று மூத்த அரசு அதிகாரியிடம் கேட்டதற்கு, ''முதல்வர் ஒவ்வொரு முறையும் பைக்கில் செல்லும்போதோ அல்லது பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்போதோ, அவருடைய பாதுகாப்பு விவரங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முதல்வரின் பாதுகாப்பு மிக முக்கியமானது, எனவே இது ஒரு வழக்கமான நடைமுறையாக இருக்கும் என்று கூற முடியாது'' என்று தெரிவித்தார்.

















