10 வயதில் பிரிட்டன் பயணம், 23 வயதில் மேயர்: சரித்திரம் படைத்த இந்திய வம்சாவளி இள...
வாழ்க்கையின் இரண்டாம் பாதியில் சமூகப் பங்களிப்பு: குழப்பங்களைத் தீர்க்கும் 5 எளிய வழிமுறைகள்!
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
நம்மில் பலருக்கும் ஒரு 40 அல்லது 50 வயது ஆன பிறகு என்றைக்காவது ஒரு நாள் நாம் சமூகத்திற்கு நம்மால் முடிந்த அளவிற்கு கடமை ஆற்ற மற்றும் ஏதாவது பங்களிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஆனால் அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதில் குழப்பம் இருக்கும். சமூகப்பங்களிப்பிற்குண்டான வழி முறை நம்மில் பலருக்கும் தெளிவாகத் தெரியுமா என்பது சந்தேகமே! இந்தக்கட்டுரையின் நோக்கம் இதை தெளிவு படுத்துவது தான்.
சமூகப்பங்களிப்பு என்றால் என்ன? அதற்குண்டான வழிமுறைகள் என்ன? நமக்கேற்ற வழிமுறையை நாம் எவ்வாறு தேர்ந்தெடுப்பது? இவை மூன்றும் மிக முக்கியமான கேள்விகள். இது குறித்து நாம் சிறிது விவாதிக்கலாம்.

சமூகப்பங்களிப்பு மற்றும் அதற்குண்டான வழிமுறைகள்
நாம் நமது வாழ்க்கையை நடத்துவதற்கு நமது குடும்பத்தைத் தாண்டி சமூகம் மிகப்பெரிய பங்கை அளிக்கிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது. அவ்வாறு இருக்க நாம் வாழ்க்கையில் பொருளாதாரத்தில் ஒரு நிலையை அடைந்தவுடன் ஒரு சிறிய அளவிற்கேனும் அந்தப்பங்களிப்பை திருப்பிச்செலுத்த முயற்சி செய்ய வேண்டும். இதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இவற்றை நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தானமளித்தல் (Charity)
இது காலம் காலமாக பலராலும் பின் பற்றப்படும் வழி. தேவைப்படுவோருக்கு பணமாகவோ, பொருளாகவோ உதவி செய்தல். நம்மில் பெரும்பாலோர் இதை செய்து வருகிறோம். இது மிகவும் சுலபமான ஒரு வழி. தானம் தேவைப்படுவோரை தேர்ந்தெடுத்து தானமளிப்பது மிகவும் முக்கியம். மற்றப்படி இதற்கு சிந்தனைத்திறனோ நேரமோ அதிகம் தேவைப்படாது. கொடுப்பதற்கு மனம் மட்டும் இருந்தால் போதும்.
தன்னார்வத்தொண்டு புரிதல் (Volunteering)
இது நேரத்தை அடிப்படையாகக்கொண்ட வழிமுறை. நமது விடுமுறை நாட்களில் நமது வீட்டிற்கு அருகாமையில் உள்ள ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்தில் நாம் சேவை செய்யலாம். ஒரு வாரத்திற்கு நான்கு முதல் ஆறு மணி நேரம் சேவை செய்தால் உபயோகமாக இருக்கும். நேரம் இருப்பவர்கள் அதிக நேரம் சேவை செய்யலாம். பணம் இருப்பவர்கள் இல்லாதவர்கள் என அனைவருக்கும் பொதுவான வழிமுறை இது.

முழு நேரப் பணி / சமூக சேவை (Full-time professional social work)
இது நேரம் மற்றும் தகுதியை அடிப்படையாகக்கொண்ட வழி. முழு நேரப்பணி ஆற்றுவதற்கு மிகுந்த மன வலிமை தேவை. அது மட்டுமல்லாமல் இதற்கு தகுதி மற்றும் திறமை தேவை. சமூகப்பணி ஆற்றுவதற்குண்டான கல்வி முறைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இப்பொழுது நம் நாட்டில் உள்ளன.
TATA Institute of Social Sciences, Azim Premji University, மற்றும் Madras School of Social Work போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சமூக சேவையில் பட்டப்படிப்பு (இளங்கலை மற்றும் முதுகலை) படித்து அதற்குண்டான நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று முழு நேரப்பணியாக வாழ்க்கையைத் தொடரலாம். ஆர்வமுள்ளவர்கள் முனைவர் பட்டமும் பெற்று ஆராய்ச்சியாளராகப் பணியாற்றலாம். இந்த வழிமுறை வாழ்க்கையை மிகவும் திருப்திகரமாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்தத்துறையில் இப்பொழுதெல்லாம் நிறைய வேலை வாய்ப்புகளும் அதற்குண்டான வருமானமும் உள்ளது. ஆகவே இதை 'கரும்பு தின்னக்கூலி பெறுவது’ போன்ற வழிமுறையாகக் கருதலாம். சமூகத்துறையில் முழு நேரப்பணி ஆற்ற விரும்புவோருக்கு மனமும் மூளையும் இணைந்து செயல் படுவது மிகவும் முக்கியம். அப்பொழுது தான் வெற்றி காண முடியும்.
சமூக தொழில் முனைவோர் (Social entrepreneur)
இது சமுகப்பயனை முதன்மையாகக்கருதி ஒரு தொழிலைத் தொடங்கி நடத்துவது. பணமும் ,மனமும் மூளையும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தொழிலில் வெற்றி காண முடியும். நமது நாட்டிற்கு சமூகத்தொழில் புரிவோர் பலர் தேவைப்படுகிறார்கள். ஏனென்றல் இது வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமின்றி முக்கியமாக சமூகப்பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும்.

கொடையாளி (Philanthropist)
நமது நாட்டின் பல பணக்காரர்கள் தான் சம்பாதித்த பணத்தில் ஒரு பெரும் பகுதியை சமூகத்திற்கு உபயோகமான முறையில் செலவிடுவதற்காக நேரிடையாகவோ அல்லது ஒரு நிறுவனத்தைத் தொடங்கியோ நடத்தி வருகிறார்கள். இவர்கள் நிச்சயம் கொடையாளிகளாகக் கருதப்படுவார்கள். திரு. நாராயணமூர்த்தி, திரு. ப்ரேம்ஜி, திரு. ஷிவ் நாடார், திரு. ரத்தன் டாடா, திரு. N.S. ராகவன் போன்றோர் நற்பணிகளை தங்கள் நிறுவனங்கள் மூலம் நடத்தி வருகிறார்கள். நான் கர்ணனை நேரில் பார்த்ததில்லை. ஆனால் இது போன்ற கொடையாளிகளுடன் அவர்கள் நிறுவனத்தில் பணி புரியும் அறிய வாய்ப்பைப்பெற்றேன். பணம் குடும்பத்தின் தேவைக்கு அதிகமாக உள்ள அனைவரும் கருத வேண்டிய வழிமுறை இது.
“பரோபகாரம் இதம் சரீரம்”. என்பது சமஸ்கிருத மொழியில் அமைந்த ஒரு நீதி வாக்கியம். இதன் பொருள்: "பிறருக்கு உதவி செய்வதற்காகவே இந்த உடல் (சரீரம்) கொடுக்கப்பட்டுள்ளது" என்பதாகும். இது சுயநலமில்லாத சேவை மனப்பான்மையை வலியுறுத்துகிறது.
நாம் மேலே கொடுக்கப்பட்டுள்ள ஐந்து வழிமுறைகளில் (நிலைகளில்) நமது தகுதிக்கேற்றவாறு சரியானதை தேர்ந்தெடுத்து நமது பங்களிப்பை ஆற்றுவோமாக !
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.




















