'ஆயிரம் கோடிக்கணக்கில் இந்தியாவில் இருந்து வெளியேறும் பணம்' இந்திய ரூபாய் மதிப்ப...
பாலினப் பாகுபாட்டால் புறக்கணிக்கப்பட்ட மரபியல் அறிஞர் - X-Y குரோமோசோம் கண்டுப்பிடிப்பின் கதை
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
நெட்டி மரியா ஸ்டீவன்ஸ், 1861- ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி, அமெரிக்காவின் வெர்மான்ட்டிலுள்ள கேவென்டிஷ் என்ற இடத்தில் ஜூலியா மற்றும் எஃப்ரைம் ஸ்டீவன்ஸ் தம்பதியருக்கு மகளாக பிறந்தார்.
1863-ஆம் ஆண்டு நெட்டியின் தாயார் மறைவுக்குப் பின் மறுமணம் செய்து கொண்ட அவரது தந்தை குடும்பத்தினரை மாசசூசெட்ஸிலுள்ள வெஸ்ட்ஃபோர்டில் குடியமர்த்தினார். அமெரிக்காவின் வெஸ்ட்ஃபோர்டு அகாடமியில் பயின்ற நெட்டி கிரேக்கம், லத்தீன் போன்ற மொழி பாடங்களில் சிறந்து விளங்கினார். தனது 19வது வயதில் நல்ல மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றார்.

பட்டப்படிப்புக்குப் பின், நெட்டி நியூ ஹாம்ப்ஷயர் லெபனான் நகரில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி ஆசிரியரானார். தனது கல்வியைத் தொடரவேண்டும் என்ற நோக்கில் ஆசிரியப் பணி மூலம் சம்பாதிக்கும் பணத்தைச் சேமித்தார். தேவையான பணம் சேர்ந்தவுடன் உயர் கல்வி பயில்வார். கல்விக்கு பின் வேலை, வேலைக்குப் பின் கல்வி என அவரது வாழ்க்கை பயணம் தொடர்ந்தது. முதலில், அவர் ஆசிரியர்களுக்கான கல்லூரியான வெஸ்ட்ஃபீல்ட் நார்மல் பள்ளியில் சேர்ந்தார்.
1885-ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் மற்றும் மரபியல் குறித்த தனது ஆராய்ச்சி பணியை நெட்டி செய்ய துவங்கினார். உயிரினங்களின் வடிவங்களைப் பற்றிய உருவவியல் மற்றும் தாவர, விலங்கு செல்களின் அமைப்பு, செயல்பாட்டைப் பற்றிய உயிரணுவியல் போன்ற ஆய்வுகளில் கவனம் செலுத்த துவங்கினார். 1900-ஆம் ஆண்டிக்குள் தனது இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். பிசிருயிர் (சிலியேட்டு) எனப்படும் ஒற்றை செல் விலங்குகளின் வாழ்க்கைச் சுழற்சியை மையமாக கொண்டு அவரது முதுகலை பட்ட ஆய்வு அமைந்திருந்தது.
தாமஸ் ஹன்ட் மோர்கனின் வழிகாட்டுதலில் பென்சில்வேனியாவில் உள்ள பிரைன் மாவர் கல்லூரியில் நெட்டி தனது முனைவர் பட்ட ஆய்வை தொடங்கினார். 1901-ஆம் ஆண்டு, பிரைன் மாவர் நகர மேயரின் ஐரோப்பிய ஆய்வு உதவித்தொகை மூலம் ஜெர்மனியில் உள்ள நேபிள்ஸ் விலங்கியல் நிலையம் மற்றும் வுர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை ஆகியவற்றில் நெட்டி ஆராய்ச்சி மேற்கொண்டார். 1903-ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்ற நெட்டியின் முனைவர் பட்ட ஆய்வு, பல்வேறு வகையான பிசிருயிர்களின் நுண்ணுடற்கூறியல் மற்றும் மீளுருவாக்க முறைகளை விவரித்தது.

புதிய முன்னேற்றங்களுடன் மரபியல் துறை பிரபலமடைந்து வந்த காலத்தில் நெட்டி தனது ஆராய்ச்சியைத் தொடங்கினார். நெட்டிக்கு முன்பே அவருடன் படித்த தியோடர் போவரி உட்பட சில விஞ்ஞானிகள் கிரிகோர் மெண்டலின் மரபு குறித்த அடிப்படை ஆராய்ச்சியை குரோமோசோம்களுடன் தொடர்புபடுத்தியிருந்தனர். இருப்பினும், அக்காலத்தில் பல உயிரியலாளர்கள் பாலின நிர்ணயத்திற்கோ அல்லது மரபுக்கோ குரோமோசோம்கள் மட்டுமே அடிப்படையாக இருக்க முடியும் என்று நம்பவில்லை.
1900-ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில்தான் பாலினம் மரபணுக்களால் தீர்மானிக்கப்படுகிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். முனைவர் பட்டம் பெற்ற பின், வாஷிங்டனில் உள்ள கார்னகி ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவியாளராக இருந்தபோது, இரண்டு பாகங்களாக விந்தணு உருவாக்கம் பற்றிய ஆய்வுகள் மேற்கொண்ட நெட்டி 1905-ஆம் ஆண்டு, பாலினத்தின் மரபணு அடிப்படைக்கான உறுதியான ஆதாரத்தை முதன்முதலில் வழங்கினார்.

மாவுப்புழுக்களில் அவர் மேற்கொண்டு சோதனைகளில் ஆண்புழுக்கள் பெரிய எக்ஸ் (X) அல்லது சிறிய ஒய் (Y) குரோமோசோம் கொண்ட விந்தணுக்களை உற்பத்தி செய்வதையும், பெண் மாவுப்புழுக்கள் பெரிய எக்ஸ் குரோமோசோம்களைக் கொண்ட முட்டைகளை மட்டுமே உற்பத்தி செய்வதையும் கண்டறிந்தார். இதன் மூலம் தந்தைவழி குரோமோசோம்களே பாலின நிர்ணயத்திற்குக் காரணம் என்று நெட்டி முடிவு செய்தார்.
மரபியல் மற்றும் விலங்கியல் துறைகளில் புதுமைகளைப் புகுத்திய நெட்டி விந்தணு உருவாக்கம் குறித்த ஆராய்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தினார். இனப்பெருக்கம் செய்யும் அனைத்து பாலூட்டிகளிலும் காணப்படும் அத்தியாவசியமற்ற குரோமோசோம்களான பி (B) குரோமோசோம்களை முதன்முதலில் கண்டுபிடித்தவராக கருதப்படும் நெட்டி இந்த குரோமோசோம்களுக்கும் பாலின குரோமோசோம்களுக்கும் இடையேயான தொடர்பை குறிப்பிட்டுள்ளார்.
பாலின குரோமோசோம்கள் குறித்த நெட்டியின் ஆய்வு வெளியான அதே 1905 ஆம் ஆண்டில், அதே தலைப்பில் நெட்டியின் ஆராய்ச்சியை தவறாக புரிந்து கொண்ட பேராசிரியர் எட்மண்ட் பீச்சர் வில்சனின் ஆய்வு கட்டுரையும் வெளியிடப்பட்டது. எனினும், Y குரோமோசோம் தான் பாலினத்தைத் தீர்மானிக்கிறது என உறுதியாகக் சுட்டிக்காட்டிய முதல் நபர் நெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
தனது வாழ்க்கை முழுவதும் ஆராய்ச்சி பணியை தொடர்ந்து மேற்கொண்ட நெட்டி, ஹெட்டிரோ குரோமோசோம்களை முதன்முதலில் அடையாளம் கண்டார். இதன் மூலம், பாலின குரோமோசோம்களைக் கண்டுபிடித்தவர் என்ற தனது அங்கீகாரத்தை மேலும் உறுதிப்படுத்தினார். ஆராய்ச்சியின் தீவிரமும், பாலின குரோமோசோம்கள் பற்றி அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற உறுதியும் நெட்டியின் ஆழ்ந்த அறிவுக்கு காரணங்களாக இருந்தன.
1912-ஆம் ஆண்டில், பிரின் மாவரில் ஆராய்ச்சிப் பேராசிரியர் பதவியைப் பெற்ற நெட்டி அப்பணியில் சேர்வதற்கு முன்பே தனது ஐம்பதாவது வயதில் மார்பகப் புற்றுநோயால் இறந்தார். பாலின கோட்பாடுகளுக்கு வலு சேர்த்த நெட்டி அக்காலத்தில் நிலவிய பாலின பாகுபாடுகளால் மற்ற பெண் அறிவியலாளர்கள் போலவே வரலாற்றிலிருந்து முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டார். 1906-ஆம் ஆண்டு, வில்சன், தாமஸ் ஹன்ட் மோர்கன் ஆகியோர் பாலின நிர்ணயம் குறித்த தங்கள் கோட்பாடுகளைப் பற்றிப் பேசுவதற்கு ஒரு மாநாட்டிற்கு அழைக்கப்பட்டனர்.
நெட்டியின் குரோமோசோம் வழி மரபுக் கோட்பாடு நிரூபிக்கப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகே ஏற்றுக்கொள்ளப்பட்டபோதிலும், நெட்டியின் ஆராய்ச்சிப் பணிக்காக அவரது முனைவர் பட்ட மேற்பார்வையாளரான தாமஸ் ஹன்ட் பாராட்டப்பட்டார். "மரபுவழியில் குரோமோசோமின் பங்கு குறித்த கண்டுபிடிப்புகளுக்காக" ஹன்ட்டிற்கு 1933-ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1910-ஆம் ஆண்டில், அங்கீகரிக்கப்பட்ட பதினெட்டு பெண்களில் ஒருவராக, ஸ்டீவன்ஸ் முதல் 1000 "அறிவியல் மேதைகள்" பட்டியலில் சேர்க்கப்பட்டார். தனது பதினோரு ஆண்டு கால ஆராய்ச்சிப் பணியில் 38 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். நெட்டியின் ஆராய்ச்சி பணி இல்லாமல் போயிருந்தால், டர்னர் மற்றும் டவுன் சிண்ட்ரோம்கள் குறித்த ஆராய்ச்சிகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் முடங்கி இருக்கும். அமெரிக்க தேசிய மகளிர் புகழரங்கத்திலும், வெஸ்ட்ஃபீல்ட் மாநிலப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் நெட்டி மரியா ஸ்டீவன்ஸ் அறிவியல் மற்றும் புத்தாக்க மையத்திலும் தற்போது நெட்டி அங்கீகரிக்கப்பட்டுள்ளார்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.



















