செய்திகள் :

தேனீக்களின் தோழி... கிராமத்து பெண்களின் வழிகாட்டி! இயற்கையோடு இணைந்த ஒரு பயணம்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

ஒரு டீஸ்பூன் தேனை சுவைக்கும் போது உங்களுக்கு என்ன தோன்றும்....? அனேகமாக அதன் சுவையை தாண்டி வேறு எதுவும் நினைவுக்கு வருவதில்லை.

ஒரு டீஸ்பூன் தேன் தயாரிக்க, ஆயிரக்கணக்கான பூக்களை தேடி, சுமார் 55 ஆயிரம் கிலோமீட்டர் வரை பறக்கிறது ஒரு தேனீ. இது பூமியை ஒரு முறை சுற்றி வரும் தூரத்தை விட அதிகம்...

ஒரு தேனீயை நாமெல்லாம் சாதாரண பூச்சி என்று தான் பார்க்கிறோம்.

ஆனால் உண்மையில், மனிதர்கள் உயிருடன் வாழ இந்த பூமியில் தினமும் அமைதியாக வேலை செய்து கொண்டிருக்கும் மிகப்பெரிய தொழிலாளிகள் தேனீக்கள் தான்...

உலகத்தில் இருக்கும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேனீ இனங்கள் இல்லையென்றால், மகரந்தச் சேர்க்கை பாதிக்கப்படும்.

மகரந்தச் சேர்க்கை பாதித்தால் விவசாயம் பாதிக்கும்.

விவசாயம் பாதித்தால்… மனித வாழ்க்கையே கேள்விக்குறியாகும்.

தேனீக்கள் அழிந்தால், மனிதர்களின் எதிர்காலமும் ஆபத்தில் தான் இருக்கும் என்பது அறிவியல் ஆய்வாளர்களின் எச்சரிக்கை...

இது இயற்கைக்கும் மனித வாழ்வியலுக்கும் இடையே இருக்கும் உறவை பேசுகிறது. இந்த உறவின் அடிப்படையில்தான் தேன் உற்பத்தியும் நடக்கிறது. இது மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலாகவும் மாறி இருக்கிறது. உலக அளவில் தேன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியாவில் ஒரு லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனாலும் இந்தத் துறையில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் அதிக அளவில் சாதிக்க முடிவதில்லை என்கிற ஆதங்கம் இருக்கிறது. அந்த ஆதங்கத்தை அப்புறப்படுத்த சில பெண் தொழில் முனைவோர்களும் முனைந்து கொண்டிருக்கிறார்கள்அவர்களில் ஒருவர் தான் வித்யஸ்ரீ...

நாமக்கல் மாவட்டம் கோழிக்கால்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த இவர் தேன் உற்பத்தியில் சத்தம் இல்லாமல் சாதனை படைத்து வருகிறார். ஒரு தேன் கூட்டத்தில் ராணி தேனீதான் மையம். அப்படித்தான் தனது சமூகத்தின் மையமாக மாறி இருக்கிறார் வித் ஸ்ரீ... ஆம் !இவரும் ஒரு குயின் பீ தான்....

“கொரோனா உலகத்தை நிறுத்தியது… ஆனால் என் கனவை இல்லை!” என்று தான் இந்தத் துறை,க்கு வந்த காலகட்டத்தை பதிவு செய்கிறார் வித்யஸ்ரீ...

சாதாரண நடுத்தர குடும்பம்.

சாதாரண கல்லூரி வாழ்க்கை.

ஆனால் சாதாரண கனவுகள் இல்லை.

இளங்கலை வரலாறு படிக்க கல்லூரியில் சேர்ந்த நேரத்தில் தான் உலகையே முடக்கிய கொரோனா வந்தது.

எல்லோரும் “அடுத்து என்ன ஆகுமோ?” என்று பயந்துகொண்டிருந்த நேரத்தில், வித்ய ஸ்ரீ ஒரு விஷயத்தை கவனித்தார்.

உலகமே நின்றாலும்…

இயற்கை மட்டும் நின்றுவிடவில்லை.

மரங்கள் பூத்துக்கொண்டே இருந்தன.

தேனீக்கள் பறந்துக்கொண்டே இருந்தன.

விவசாயம் இயங்கிக்கொண்டே இருந்தது.

அதுதான் அவரது வாழ்க்கையை மாற்றிய தருணம்.

“எல்லாரும் தொழில் நிறுவனங்கள்ல வேலை தேடிக்கிட்டிருந்த நேரத்துல, நான் இயற்கையோட சேர்ந்து வேலை செய்யணும்னு முடிவு பண்ணேன்,” என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார் வித்ய ஸ்ரீ.

அந்த முடிவுதான்… இன்று அவரை “குயின் பீ” ஆக மாற்றியிருக்கிறது.

“பொண்ணுங்க போய் தேனீ வளர்க்கிறதா?”

ஒரு பெண் சாலையில் தனியாக நடந்து சென்றாலே கேள்வி கேட்கும் சமூகம் இது.

அப்படியிருக்க… ஆயிரக்கணக்கான தேனீக்களோடு வேலை செய்யப் போகிறேன் என்றால்.... வீட்டிலிருந்தே எதிர்ப்பு வந்தது.

“முதல்ல படிப்பு முடி.”

“இது பெண்களுக்கு சரியான வேலை இல்லை.”

“தேனீ கொட்டினா எப்படி வலிக்கும் தெரியுமா?” என்கிற கேள்விக் கணைகள் கொடுக்குகள் கொண்ட தேனீக்களைப் போலவே சுற்றி வந்தன.

ஆனால் வித்ய ஸ்ரீயின் பதில் தீர்க்கமாக இருந்தது.

“ஆறு மாதம் டைம் குடுங்க… என்னால சாதிக்க முடியலன்னா நான் திரும்பிப் போய்ப் படிக்கிறேன்.”

இந்த பதிலின் அழுத்தம்

ஒரு தலைமுறையின் தன்னம்பிக்கையை பிரதிபலித்தது.

வித்ய ஸ்ரீ தனது தொழிலை ஆரம்பித்தது வெறும் 15 தேனீ பெட்டிகளுடன் தான்.

ஆனால் அந்த பெட்டிகளுக்குள் இருந்தது தேன் மட்டுமல்ல..…ஒரு பிரம்மாண்ட உலகை படைக்கும் அவரது கனவுகளும் தான்...

தொடக்கத்தில் தினமும் பயம்.

தேனீக்கள் கொட்டும் வலி.

வீட்டாரின் சந்தேகம்.

சுற்றத்தாரின் கிண்டல்.

ஆனால் ஒவ்வொரு கொட்டுதலும் அவரை பலமாக்கியது.

“முதல்ல ரொம்ப பயமா இருந்துச்சு. தேனீ கொட்டினா அழுவேன். ஆனா ஒரு கட்டத்துக்கு அப்புறம் அது கொசு கடிக்கிற மாதிரி தான் தோணுச்சு,” என்று சிரிக்கிறார் வித்யஸ்ரீ..

இன்று அந்த பெண்…

ஆயிரக்கணக்கான தேனீக்களை கையில் எடுத்துக்கொண்டு சாதாரணமாக பேசுகிறார்.

இவர் வெறும் தேன் விற்கும் வணிகத்தை மட்டும் நினைக்கவில்லை.

மக்களுக்கும் இந்த உலகத்தை அறிமுகப்படுத்த நினைத்திருக்கிறார்.

அதற்காக சமூக ஊடகங்களில் வீடியோக்கள் வெளியிட ஆரம்பித்தார்.

தேனீ எப்படி வேலை செய்கிறது?

தேன் எப்படி எடுக்கப்படுகிறது?

ஒரு பண்ணை எப்படி பராமரிக்கப்படுகிறது?

இப்படி அவர் பகிர்ந்த ஒவ்வொரு வீடியோவும் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. அவற்றிற்கு இணையாக

அவரது தொழிலும் வளர ஆரம்பித்தது. மாதத்திற்கு 20 கிலோ தேன் தயாரித்த நிலைமையிலிருந்து… இன்று 100 கிலோ வரை இந்தியாவின் பல பகுதிகளுக்கு அனுப்பும் அளவிற்கு தொழிலில் வளர்ச்சி அடைந்திருக்கிறார். தேன் விற்பனையில் மட்டுமல்லாமல்

தேனீ வளர்ப்பு பெட்டிகள், தேன் சார்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், பயிற்சி வகுப்புகள்… இப்படி பல வழிகளிலும் வருமானத்தை உருவாக்கியிருக்கிறார்.

இன்று பல இளைஞர்கள், பெண்கள் கூட தேனீ வளர்ப்பில் ஆர்வம் காட்டி அவரிடம் பயிற்சி பெற வருகிறார்கள்.அவரது பண்ணை இன்று

ஒரு இயற்கை ஸ்டார்ட்அப் பள்ளியாகவும் மாறி இருக்கிறது.

தேனீக்களை விட ஆபத்தானது… சமூகத்தின் பார்வைதான் என்று சொல்கிறார் வித்ய ஸ்ரீ.

“பெண்கள் வெளியூருக்கு பயணம் செய்யக்கூடாது… இந்த வேலை அவர்களால முடியாது… இப்படிப்பட்ட எண்ணங்கள் தான் பெரிய தடைகள்.” என்கிறார்.

ஆனால் அவர் அந்த எல்லைகளை உடைத்துவிட்டார்.

இன்று தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு தனியாக பயணம் செய்கிறார்.

பண்ணைகளை பராமரிக்கிறார்.

பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார்.மற்ற பெண்களுக்கும் வேலை வாய்ப்பு கொடுக்கிறார்.

இவரிடம் பணி புரியும் பெண்களில் ஒருவர் நித்யா... பிகாம் பட்டதாரியான இவருக்கும் தொழில் முனைவோராக விருப்பம் இருக்கிறது. ஆனால் குடும்ப பொருளாதார சூழல், இட வசதி போன்றவை அதற்கு இடம் கொடுக்கவில்லை என்கிறார்.

இது போன்ற கிராமப்புற பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு உதவி செய்ய “National Beekeeping & Honey Mission” போன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஆனால் நடைமுறையில் இவை எந்த அளவுக்கு உதவியாக இருக்கின்றன என்பதை அறிய மார்த்தாண்டம் த

தேனி வளர்ப்போர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் திரு.சாத்ராக்கை தொடர்பு கொண்டோம். தேனி வளர்ப்பில் பெண்களுக்கு நிறைய சிரமங்கள் இருப்பதாக கூறிய அவர், ஐந்து விழுக்காட்டிற்கும் குறைவான பெண்கள் தான் இந்த தொழிலில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் கிராமத் தொழில் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்சிகளும் விழிப்புணர்வுகளும் ஆரம்ப காலகட்டங்களில் கொடுக்கப்பட்டு வந்ததாகவும் ஆனால் தற்போது அவை கணிசமாக குறைந்து விட்டதாகவும் தெரிவித்தார். பெண்கள் இந்த தொழிலில் ஈடுபடும் தங்களது கணவன்களுக்கு உதவி செய்யும் வகையிலேயே அறியப்படுகிறார்கள் என்றும் தொழில் முனைவோர்களாக அதிக அளவில் உருவாகவில்லை என்றும் அவர் கவலையோடு பேசினார். போதுமான பயிற்சியும் வழிகாட்டுதலும் இருந்தால் தேனி வளர்ப்பில் பெண்களால் சாதிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது போன்ற நடைமுறை சிக்கல்கள் பெண்களின் பங்களிப்பை கடினமாக்குவதை ஒத்துக் கொள்ளத் தேவையில்லை. அதே நேரம்

வித்யஸ்ரீ போன்ற பெண்கள்தான் இந்தியாவின் வேளாண் மற்றும் உணவு அமைப்புகளின் மைய சக்தியாக இருக்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது. இது பற்றி எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் ஆர். ரெங்க லட்சுமி பல்வேறு தகவல்களை கூறுகிறார். இவர் நீண்ட காலமாக விவசாயிகள் குறித்த ஆய்வை மேற்கொண்டு வருகிறார். டாக்டர் ரங்கலட்சுமி கூறும்போது,"" தேனீ வளர்ப்பு இன்று பெண்கள் பங்கெடுப்புக்கான விவசாயத்தில் முக்கியமான வாழ்வாதார வாய்ப்பாக மாறியுள்ளது. இந்தத் துறை தற்போது உலகளவில் அதிக கவனம் பெறுவதுடன், ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ள 2026 சர்வதேச பெண் விவசாயிகள் ஆண்டு என்கிற உள்ளடக்கத்திலும் இணைந்து நிற்கிறது.

இன்று வேளாண் தொழிலாளர் படையில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள். மேலும், வேளாண் பணிகளில் சுமார் 80 சதவீத பொறுப்புகளையும் பெண்களே மேற்கொள்கிறார்கள்,"" என்கிறார்.

அதே நேரம் பெண்களுக்கு இருக்கும் சவால்களையும் அவர் ஒதுக்கிவிடவில்லை.

"" காலநிலை மாற்றம், சந்தை நிலைமைகளின் நிச்சயமின்மை, நிலம் மற்றும் பிற உற்பத்தி வளங்களை அணுகுவதில் உள்ள ஆழமான சமூக மற்றும் பொருளாதார சமத்துவமின்மை போன்றவை பெண் விவசாயிகளின் முக்கிய பிரச்சனைகளாக உள்ளன. இருப்பினும், பல பெண்கள் தளர்ந்து விடாமல், புதிய வழிகளைத் தேடி தங்களை மாற்றிக் கொண்டு முன்னேறி வருகின்றனர். பல்வேறு விவசாய முறைகளிலும், வேளாண் சூழல்களிலும் பெண்கள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன் கொண்ட புதிய விவசாய நடைமுறைகளை முயற்சித்து வருகின்றனர். புதிய வருமான வாய்ப்புகளை உருவாக்குகின்றனர், புதிய திறன்களை கற்றுக்கொள்கிறார்கள், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சந்தைகளை அடைகிறார்கள், "" என்று கூறுகிறார்.

டாக்டர் ரெங்கலட்சுமியின் கருத்துப்படி, வேளாண்மை என்பது விவசாயம் மட்டும் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதனுடன் தொடர்புடைய பல துணைத் தொழில்கள் சேர்ந்து தான் பெரிய வேளாண்–உணவு அமைப்பை உருவாக்குகின்றன. மீனவர்கள், தேனீ வளர்ப்பாளர்கள், கால்நடை மேய்ப்போர், வனத் தொழிலாளர்கள், உணவு பதப்படுத்துநர்கள் பல்வேறு உட்பிரிவுகளை சேர்ந்தவர்களும் ஒட்டுமொத்த வேளாண்மை மையத்துக்குள் அடங்குகிறார்கள். இந்த அடிப்படையில் தான் தேனி வளர்ப்பு உலகளாவிய கவனம் பெற்ற வேளாண் பிரிவாக வளர்ந்து வருகிறது. அனைத்து துறைகளிலும் தடைகளை உடைத்து சாதித்து வரும் பெண்கள் இந்தத் துறையிலும் வேகமாக முன்னேறுகிறார்கள். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு தான் வித்யஸ்ரீ...

“தேனீக்கள் இல்லாம போனா மனிதர்களுக்கும் ஆபத்து. அதனால இந்த இனத்தை காப்பாத்தணும். இன்னும் நிறைய பேர் இந்த தொழிலுக்கு வரணும். அதற்கான ஒரு காரணமா நான் இருக்கணும்.”

வித்ய ஸ்ரீயின் வார்த்தைகளில் ஒரு வியாபாரியின் ஆசையை விட… ஒரு இயற்கை காதலியின் ஆர்வம் அதிகமாக தெரிகிறது.

தேனீக்கள் பூக்களை உயிர்ப்பிக்கின்றன.

இப்படிப்பட்ட பெண்கள் சமூகத்தை உயிர்ப்பிக்கின்றனர்.

இன்னும் நிறைய வித்யஸ்ரீக்கள் தேனி கூட்டங்களைப் போல பெருகட்டும்...

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

அயோத்திதாசர் - ஆதித் தமிழரின் சாதியற்ற தேசக் கனவு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Booker Prize 2026: இரு பெண்கள் இடையிலான காதலைப் பேசும் `தைவான் டிராவலாக்' (Taiwan Travelogue) நூல்!

இலக்கிய உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்று புக்கர். 2026-ம் ஆண்டிற்கான `சர்வதேச புக்கர் பரிசு' தைவானிய எழுத்தாளர் யாங் ஷுவாங்-சி (Yang Shuāng-zǐ) எழுதிய `தைவான் டிராவலாக்' (Taiwan Travelogue) நாவலுக்க... மேலும் பார்க்க

வாழ்க்கையின் இரண்டாம் பாதியில் சமூகப் பங்களிப்பு: குழப்பங்களைத் தீர்க்கும் 5 எளிய வழிமுறைகள்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

மூன்றாவது குழந்தையும் முப்பதாயிரமும்! - மக்கள் தொகை மாற்றத்தின் எதார்த்தம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பாலினப் பாகுபாட்டால் புறக்கணிக்கப்பட்ட மரபியல் அறிஞர் - X-Y குரோமோசோம் கண்டுப்பிடிப்பின் கதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

உயிர்களிடத்து அன்பு வேண்டும்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க