``அனுதாப நாடகமா? நான் எளிமையானவன்; ஆனா ஏழை அல்ல.!" - செருப்பு அணியாத தவெக MLA சொ...
சொந்த வீடு: வங்கியில் கடன் வாங்கும் முன் இதைக் கவனிக்காவிட்டால் மிகவும் கஷ்டப்படுவீர்கள்!
வங்கியில் கடன் வாங்கி சொந்த வீடு கட்ட நினைக்கிறவர்கள் பல விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்றாலும், ஒரே ஒரு விஷயத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அது, எந்த வயதில் நாம் முழுமையாகக் கடனைக் கட்டி முடிப்போம் என்பது.
இன்றைய தேதியில் வீட்டுக் கடன் தருவதற்குப் பல வங்கிகள் தயாராக இருக்கின்றன. காரணம், முன்பு வீட்டுக்கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால், கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு வீட்டுக்கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் இழப்பு ஏற்படலாம் என்கிற அச்சம், வொர்க் ஃப்ரம் ஹோம் வசதி எனப் பல காரணங்களினால் வீட்டுக்கடன் மூலம் வீடு வாங்க நினைப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலையில், வீட்டுக்கடன் தருவதற்குப் பல கெடுபிடிகளை விதித்த அரசு வங்கிகள், இப்போது அந்த விதிமுறைகளை ஓரளவுக்குத் தளர்த்தி, வீட்டுக்கடனைத் தாராளமாகத் தர தயாராக உள்ளன.

மேலும், தற்போது வீட்டுக்கடன் தரும் தனியார் வங்கிகள், வீட்டுக்கடன் வசதி நிறுவனங்கள் என பல நிறுவனங்கள் வீட்டுக்கடன் தரத் தயாராக உள்ளன. எனவே, 1% - 2% வட்டி அதிகமாக செலுத்துவதற்குத் தயாராக இருக்கும்பட்சத்தில் வீட்டுக்கடன் வாங்குவது இன்றைக்குப் பெரிய பிரச்னை அல்ல என்கிற நிலைமையே இருக்கிறது.
கல்விக் கடன், பிசினஸ் கடன் என மற்ற கடன்களைத் தருவதைவிட வீட்டுக்கடன் தர வங்கிகள் தயாராக இருப்பதற்கு முக்கியமான காரணங்கள் இரண்டு. ஒன்று, இது நீண்ட காலக் கடன் என்பதால், வங்கிக்கு நீண்ட காலத்தில் வட்டி வருமானம் வந்துகொண்டே இருக்கும். இரண்டாவது, இது ஒரு அடமானக் கடன் என்பதால், வீட்டின் பத்திரம் வங்கியிடம் இருக்கும். வீட்டுக்கடனை ஒருவர் சரியாகக் கட்டாவிட்டால், வங்கியானது அந்த வீட்டை விற்றுவிட்டு, அதனுடைய அசலை வட்டியுடன் எடுத்துக்கொண்டுவிட்டு, மீதமுள்ள பணத்தைக் கடன்தாரரிடம் தந்துவிடும்!

வீட்டுக்கடன் என்பது இப்படி இருக்க, சிலர் தங்கள் வாழ்க்கையில் மிக மிகத் தாமதமாக வீடு வாங்கும் முடிவினை எடுக்கின்றனர். அதாவது, 45 வயதுக்குப் பிறகு வீடு வாங்குவதற்காக 50 லட்சம் ரூபாய், 60 லட்சம் ரூபாய் எனக் கடன் வாங்குகின்றனர். இவர்களால் கஷ்டப்பட்டாவது கடன் தொகையைக் கட்டிவிட முடியும் என்கிற நம்பிக்கை வங்கிக்கு இருக்கும்போது கடன்தாரர் கேட்கும் தொகையை வங்கிகள் தந்துவிடுகின்றன.
இப்படிக் கடன் வாங்கும்போது, வாங்கிய கடன் தொகை முழுவதையும் ஓய்வு பெறுவதற்குள், அதாவது 60 வயதுக்குள் செலுத்தி முடித்துவிடுகிறோமா என்பதைக் கட்டாயம் பார்க்க வேண்டும். கடன்தாரர் அரசு ஊழியராக இருக்கும்பட்சத்தில் அவர் ஓய்வு பெற்றபிறகு பென்ஷன் என்கிற வகையில் ஒரு தொகை கிடைக்கும். அந்த பென்ஷன் தொகையில் இருந்து, குறிப்பிட்ட தொகையை வீட்டுக்கடனாகக் கட்டிவிடுவார்கள் என்பதை எதிர்பார்த்து அவர்களுக்கான கடனை 65 முதல் 70 வயது வரை தருகின்றன.
வீட்டுக்கடனை முழுவதுமாகக் கட்டிமுடிக்க வங்கிகள் இந்த அளவுக்குக் காலநீட்டிப்பைத் தந்தால், கடன் வாங்குபவர்கள் அதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது. காரணம், 60 வயதில் ஒருவர் ஓய்வு பெற்றுவிட்டால், அவருடைய சம்பளம் பாதிக்கும் அதிகமாகக் குறைந்துவிடும். அந்த சம்பளத்தை வைத்து ஒருவர் அன்றாடச் செலவுகளை செய்து சமாளிப்பதற்கே சரியாக இருக்கும் என்கிற நிலையில், 60 வயதுக்குப் பிறகு வீட்டுக்கடனைத் திரும்பக் கட்ட சம்மதிப்பது சரியான விஷயமாக இருக்காது.
ஒருவேளை, 60 வயதுக்குப் பிறகு கடன்தாரரால் வீட்டுக்கடன் இ.எம்.ஐ தொகையைக் கட்டமுடியாமல் போனால், அந்த வீட்டை வேறு யாருக்காவது விற்றுவிட்டு, கடன் பணத்தை அசலும் வட்டியுமாக எடுத்துக்கொண்டுவிட்டு, மீதமுள்ள பணத்தைக் கடன்தாரருக்குத் தந்துவிடும்! கடன்தாரர் இத்தனை நாளும் கஷ்டப்பட்டு வீட்டுக்கடனைத் திரும்பக் கட்டிவந்தது வீட்டை விற்பதற்காக அல்ல. வீட்டைத் தொடர்ந்து வைத்திருக்கத்தான்.
ஆக, 45 அல்லது 50 வயதுக்குமேல் வீட்டுக்கடனாக பெரிய தொகையைக் கடனாக வாங்கக் கூடாது. எவ்வளவு பணத்தை வீட்டுக்கடனாக வாங்கினாலும் அதை 60 வயதுக்குள் அதாவது ஓய்வு பெறுவதற்குள் முழுவதுமாகத் திரும்பக் கட்டிமுடித்துவிட வேண்டும். 60 வயதுக்குள் கடன் தொகையைத் திரும்பக் கட்டுகிற மாதிரியான ஒரு கட்டாயத்துக்குள் இருக்கவே கூடாது.
வீட்டுக்கடன் தரும்போது வங்கிகள் இந்த விஷயத்தைக் கவனிக்கிறதோ இல்லையோ, கடன் வாங்குபவர்கள் இந்த விஷயத்தை நிச்சயம் கவனிக்க வேண்டும். அப்படி கவனிக்காமல், வீட்டுக்கடன் தரும்போது வேண்டாம் என்று ஏன் சொல்வானேன்? வீட்டுக்கடனை முழுவதுமாகத் திரும்பக் கட்டுவதைப் பிற்பாடு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்து வாங்குபவர்கள், பிற்பாடு மிகவும் கஷ்டப்படுவார்கள் என்பது நிச்சயம்! அந்தத் தவறை யாரும் செய்யக் கூடாது என்பதை வீட்டுக்கடன் வாங்குபவர்கள் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும்!

முதலீட்டு ஆலோசனை வேண்டுமா?
உங்கள் முதலீட்டை சரியானபடி அமைத்துக்கொள்ள 'லாபம்' மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனம் முதலீட்டு ஆலோசனை தருகிறது. உங்களுக்கும் முதலீட்டு ஆலோசனை வேண்டும் எனில், பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, உங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்...
https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri
லாபம் வாட்ஸ் அப் குரூப்பில் இணைய விருப்பமா? இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள்!
Labham Youtube Video: www.youtube.com/@labham_money
Labham Website: https://labham.money/tamil
















