திருநெல்வேலி: சுட்டிக்காட்டிய விகடன்; புத்துயிர் பெறும் ஆதிதிராவிடர் சமுதாய நலக...
"தாயாக இருக்கும் பெண்களுக்கு இது மிகவும் அவசியமானது!" - ஜோதிகா ஓப்பன் டாக்
இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்காவின் 'ஸ்பிரிட்' மற்றும் 'கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டாம் பாகம் ஆகியவற்றிலிருந்து நடிகை தீபிகா படுகோன் விலகியதைத் தொடர்ந்து, சினிமாவில் நடிகர்களுக்கான '8 மணி நேர வேலை ஷிப்ட்' குறித்து அதிகளவில் பேசப்பட்டது.
தீபிகா படுகோன் 8 மணி நேர வேலை நேரம் உள்ளிட்ட சில நிபந்தனைகளை விதித்ததாகவும், அது ஏற்கப்படாததால் அந்தப் படங்களிலிருந்து விலகியதாகவும் தகவல்கள் பேசப்பட்டன.

இது குறித்துப் பல திரையுலக பிரபலங்களும் அவரவர் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். தற்போது நடிகைகள் ஜோதிகாவும் சோனாக்ஷி சின்ஹாவும் அவர்களுடைய கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்.
ஜோதிகா மற்றும் சோனாக்ஷி சின்ஹா நடித்திருக்கும் 'சிஸ்டம்' வெப் சீரிஸின் புரோமோஷன் வேளையில், பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமாவிற்கும் இடையே இருக்கும் வித்தியாசங்கள் குறித்து ஜோதிகா பேசியிருக்கிறார்.
அதில் ஜோதிகா, "என்னுடைய முதல் இந்தித் திரைப்படம் வணிகரீதியாக வெற்றிபெறாத போது பாலிவுட் எனக்கான கதவுகளை மூடிவிட்டது. ஆனால், என்னுடைய முதல் தமிழ்த் திரைப்படம் சரியாகப் போகாதபோதும் கூட, என்னுடைய உழைப்பை மதித்து எனக்கு அடுத்தடுத்துப் பல வாய்ப்புகளை வழங்கினார்கள்.
இதுதான் இரு திரையுலகிற்கும் இடையே நான் கண்ட முக்கிய வித்தியாசம். இருப்பினும், இப்போது பாலிவுட்டில் 40 வயதைக் கடந்த பெண்களுக்காக எழுதப்படும் கதைக் களங்கள் ஆரோக்கியமான மாற்றத்தைக் காட்டுகின்றன." என்றவர், "தென்னிந்திய சினிமாவில் வேலை நேரம் மிகவும் சரியாகத் திட்டமிடப்படுகிறது.
அங்கு 99 சதவீத திரைப்படங்களின் படப்பிடிப்புகள் மாலை 6 மணிக்கெல்லாம் நிறைவடைந்துவிடும். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அல்லது காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அங்கு படப்பிடிப்புகள் நடக்கும்" எனக் கூறியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து நடிகை சோனாக்ஷி சின்ஹா, "நாம் ஏன் இதை இன்னும் ஒரு கேள்வியாகவே பார்த்துக் கொண்டிருக்கிறோம்? இங்குப் பல முன்னணி ஆண் நடிகர்கள் 8 மணி நேரத்திற்கு மேல் ஒரு நிமிடம் கூட வேலை செய்வதில்லை.
அவர்களுடைய ஷாட் முடிந்ததோ இல்லையோ, அவர்கள் தங்களின் காரில் ஏறி கிளம்பிவிடுகிறார்கள். அவர்களை இங்கு யாரும் கேள்வி கேட்பதில்லை.
சினிமாவில் ஒரு குறிப்பிட்ட நிலையை எட்டி, இவ்வளவு காலம் உழைத்த ஒரு நபர் 8 மணி நேர ஷிப்ட் கேட்பதில் எந்தத் தப்புமில்லை" என்றாரைத் தொடர்ந்து ஜோதிகா, "குறிப்பாக ஒரு தாயாக இருக்கும் பெண்களுக்கு இந்த வேலை நேரத் தளர்வு மிகவும் அவசியமானது" என்றார்.
















