திருநெல்வேலி: சுட்டிக்காட்டிய விகடன்; புத்துயிர் பெறும் ஆதிதிராவிடர் சமுதாய நலக...
அரக்கோணம் நகர்மன்ற கவுன்சிலர் டு தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சர்! - யார் இந்த காந்திராஜ்?
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஒரே தனித்தொகுதி அரக்கோணம். இந்தத் தொகுதியைக் கடந்த மூன்று சட்டமன்றத் தேர்தல்களாக அ.தி.மு.க தக்கவைத்துக்கொண்டிருந்தது. இந்த முறை அ.தி.மு.க-வை மூன்றாவது இடத்துக்குத் தள்ளி தொகுதியைக் கைப்பற்றியது தமிழக வெற்றிக் கழகம். தொகுதியின் எம்.எல்.ஏ-வாக வெற்றி வாகைச் சூடினார் த.வெ.க-வின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளரான வ.காந்திராஜ். இன்றைய தினம், அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட காந்திராஜிக்கு `தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை’ இலாகா ஒதுக்கப்பட்டிருக்கிறது.
யார் இந்த காந்திராஜ்?
அரக்கோணம் கிருபில்ஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த காந்திராஜிக்கு வயது 52. பனிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு, ஐ.டி.ஐ எலெக்ட்ரீசியன் பட்டியப்படிப்புப் படித்திருக்கிறார். இவரின் மனைவி தேவி, மகன் விஜய் ஆனந்த், மகள் ரித்திகா. எரிவாயு விநியோகம், கட்டுமான ஒப்பந்தம், ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறார் காந்திராஜ். 2018-க்குப் பிறகுதான் விஜய் மக்கள் இயக்கத்தில் தலைகாட்டுகிறார். 2019-ல், `தொகுதி பொறுப்பாளர்’ என்ற இயக்கப் பதவி அவருக்குக் கிடைத்தது.

ஒருங்கிணைந்த வேலூர் வருவாய் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது, விஜய் மக்கள் இயக்கத்தில் மாவட்டத் தலைவருக்கு அடுத்தபடியாக ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பொறுப்பையும் பெற்றார் காந்திராஜ். அதைத்தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, அரக்கோணம் நகராட்சிக்குஉட்பட்ட 35-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். அங்கு மொத்தமுள்ள 36 கவுன்சிலர்களில், விஜய்யின் ஆதரவுபெற்ற கவுன்சிலராக நகர்மன்றத்துக்குள் அடியெடுத்துவைத்தார் காந்திராஜ்.
மக்கள் பிரதிநிதியாகவும் வலம்வந்துக்கொண்டிருந்த காந்திராஜிக்கு, தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டபோது அரக்கோணம், சோளிங்கர் ஆகிய இருத்தொகுதிகளையும் உள்ளடக்கிய ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளராகும் வாய்ப்பை வழங்கினார் த.வெ.க தலைவரும் முதலமைச்சருமான விஜய்.
தொடர்ந்து, அரக்கோணம் தனித்தொகுதியில் த.வெ.க கட்டமைப்பை வலுப்படுத்தி கட்சிப் பணிகளிலும் தீவிர கவனம் செலுத்தி வந்தார். இதனால், தேர்தல் டிக்கெட் அவருக்கு வழங்கப்பட்டது. காந்திராஜ் வெற்றியும் பெற்று, இப்போது அமைச்சரவையிலும் இடம்பிடித்திருக்கிறார்.

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளில், மாவட்டத் தலைநகரை உள்ளடக்கிய ராணிப்பேட்டை தொகுதி மட்டுமே இதுவரை ஸ்டார் தொகுதியாகப் பார்க்கப்பட்டுவந்தது. கடந்த தி.மு.க ஆட்சியிலும், ராணிபேட்டை தொகுதியில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட தி.மு.க மாவட்டச் செயலாளர் ஆர்.காந்திக்கே அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. கடந்தகால ஆட்சியாளர்களிடம் அரக்கோணம் தொகுதி ஒரு பாராமுகமாகவே இருந்து வந்தது. இந்த புறக்கணிப்பை உணர்ந்தே அரக்கோணம் தனித்தொகுதிக்கும் முக்கிய அந்தஸ்தை வழங்கியிருக்கிறார் முதலமைச்சர் விஜய் என்கிறார்கள் த.வெ.க வட்டாரத்தினர்.











