திருநெல்வேலி: சுட்டிக்காட்டிய விகடன்; புத்துயிர் பெறும் ஆதிதிராவிடர் சமுதாய நலக...
Drishyam 3 Review: ஓவர்டோஸா, சுவாரஸ்ய த்ரில்லரா? மீண்டும் வெல்கிறதா மோகன்லால் - ஜீத்து ஜோசப் காம்போ?
வருண் பிரபாகரன் (ரோஷன் பஷீர்) காணாமல் போன வழக்கில், ஜார்ஜ் குட்டி (மோகன்லால்) மற்றும் அவரின் குடும்பத்தார் மீது வருணின் தாய் கீதா பிரபாகரன் (ஆஷா ஷரத்) மற்றும் போலீஸார் குற்றச்சாட்டு வைக்க, அவற்றுக்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
அதோடு சகாதேவன் (கலாபவன் ஷஜான்) உள்ளிட்ட போலீஸாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு 'த்ரிஷ்யம்' முதல் பாகம் முடியும். இரண்டாம் பாகம், மீண்டும் அவ்வழக்கை ஐ.ஜி தாமஸ் (முரளி கோபி) கையில் எடுக்க, அதிலிருந்தும் தன் குடும்பத்தை ஜார்ஜ் குட்டி காப்பாற்றுவதாக முடியும்.

இந்த மூன்றாம் பாகத்தில், தன் மூத்த மகள் அஞ்சுவுக்கு (அனிஷா ஹாசன்) திருமணம் செய்து வைக்கும் முடிவிலிருக்கிறார் ஜார்ஜ் குட்டி.
இந்நிலையில், இரண்டு பாகங்களிலும் உள்ள பழைய பகைகள் ஒவ்வொன்றாக எழுந்து வந்து, மீண்டும் வருண் பிரபாகரன் வழக்கைக் கையிலெடுத்து, அஞ்சுவை நெருங்க, அவற்றை ஜார்ஜ் குட்டி சமாளித்து, தன் குடும்பத்தைக் காப்பாற்றினாரா, அவ்வழக்கு என்ன ஆனது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது ஜீத்து ஜோசப் இயக்கியிருக்கும் இந்த 'த்ரிஷ்யம் 3' மலையாளத் திரைப்படம்.
தன் குடும்பத்திற்காக எதையும் செய்யும் தைரியம், பல ஆண்டுகளாக நெஞ்சுக்குள் குமையும் குற்றவுணர்வு, மகள் மீதான பாசம், ஆபத்தான தருணங்களில் பதற்றம், எப்போதும் இருக்கும் சமயோஜிதம், பணக்காரருக்கான உடல்மொழி, கொஞ்சமே கொஞ்சம் ஆக்ஷன் என இப்பாகத்தில் வேறொரு பரிணாமத்தில் அல்லல்படும் ஜார்க் குட்டியாக முண்டை இறுக்கிக் கட்டி கைதட்டல் வாங்கியிருக்கிறார் மோகன்லால்.
பயமும், பயம் நிமித்தமுமாக வழக்கமான கதாபாத்திரத்தில் மீனா, பதற்றத்திலேயே இருக்கும் மூத்த மகளாக அனிதா ஹாசன், ஆங்காங்கே 'தக் மொமண்ட்' செய்யும் இளைய மகளாக எஸ்தர் அனில் எனக் குடும்பத்தாரின் நடிப்பில் குறைகளில்லை. உருட்டல், மிரட்டலைத் தங்கள் ஸ்டைலில் முரளி கோபி, சித்திக், கலாபவன் ஷஜான் ஆகியோர் செய்திருக்கின்றனர்.

தினேஷ் பிரபாகர், சாந்தி மாயாதேவி, கௌரவத் தோற்றத்தில் பிஜு மேனன் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.
ஆர்ப்பாட்டமில்லாத த்ரில்லர், ஆங்காங்கே தலைதூக்கும் ஆக்ஷன் போன்றவற்றுக்கு ஒளிப்பதிவாளர் சதீஷ் க்ரூப், படத்தொகுப்பாளர் வி.எஸ். விநாயக் கூட்டணி தேவையானதை மட்டும் செய்திருக்கிறது. பரபரப்பிற்கும் இறுக்கத்திற்கும் அனில் ஜான்சனின் பின்னணி இசை கைகொடுத்திருக்கிறது.
பல ஆண்டுகள் ஆகியும் அச்சம்பத்திலிருந்து மீளாமல் பதற்றம், பயம் என உழன்றுகொண்டிருக்கிறது ஜார்ஜ் குட்டியின் குடும்பம். அதேநேரம், வளர்ந்த பிள்ளைகள், பெருகிய பொருளாதாரம், ஜார்ஜ் குட்டியின் கனவான சினிமா வெளியாவது என அடுத்தடுத்த நிகழ்வுகளை விவரித்தபடியே தொடங்குகிறது திரைக்கதை.
முந்தைய பாகங்களில் வரும் கதாபாத்திரங்களுடனான ஜார்ஜ் குட்டி குடும்பத்தின் உறவு இப்போது எப்படி இருக்கிறது என்பதை விளக்கி கதையை நகர்த்தும் திரைக்கதை, புதிய கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்தியபடியே நகர்கிறது. சின்ன சின்ன புதிய பிரச்னைகள், அதனால் ஏற்படும் குழப்பம், மர்மமான முடிச்சுகள் என மிக நிதானமாகச் சுவாரஸ்யத்தைக் கட்டமைக்கிறது திரையோட்டம்.

ஒருகட்டத்தில் சுவாரஸ்யம் சிறிது சிறிதாக இறங்கத்தொடங்கும்போது, பழைய பகைகளையும், பழைய பிரச்னைகளையும் இழுத்து வந்து, மையக்கதையைத் தொடுகிறது இடைவேளைக் காட்சி.
இரண்டாம் பாதி தொடங்கிப் பல காட்சிகள் ஓடியும், முதற்பாதியின் தொடர்ச்சியையே இழுத்திருக்கிறது திரைக்கதை. ஆங்காங்கே பரபரவென நகர முயன்றாலும், பலமான இழுவை நம் பொறுமையைச் சோதிக்கவே செய்கிறது. இவற்றுக்கிடையில், ஜார்ஜ் குட்டியின் மனப்போராட்டம், தற்போதைய சட்டச் சிக்கல்கள் போன்றவை ஓரளவிற்கு ஆறுதல் தந்து, திரைக்கதையை இறுக்கமாக்குகின்றன.
முதல் பாகத்தின் புள்ளிகளை இரண்டாம் பாதியில் இணைப்பது, நுணுக்கமான தகவல்களை இணைக்கும் சாமர்த்தியம், ஜார்ஜ் குட்டி எடுக்கும் முடிவுகளுக்குப் பின்னால் உள்ள அழுத்தமான காரணங்கள் போன்றவை 'த்ரிஷ்யம்' படத்தொடரின் ரசிக்கும்படியான துருப்புச்சீட்டுகள்!
ஆனால், முந்தைய பாகங்களுடன் ஒப்பிடுகையில் அவை மிகக்குறைவாகவே இப்பாகத்தில் இருப்பது பெரிய மைனஸ். ஒருகட்டத்தில், எதார்த்தத்திலிருந்து விலகி, லாஜிக்கே இல்லாமல் மாஸ் சினிமா பாணியில் இறுதிக்காட்சியை நோக்கி ஓடத்தொடங்குகிறது திரைக்கதை. பரபரப்பான திருப்பங்கள் ஓரளவிற்கு மட்டுமே சுவாரஸ்யத்தைத் தக்க வைக்கின்றன.

இறுதிக்காட்சியில் ஜார்ஜ் குட்டியின் மனப்போராட்டம், அதனால் அவர் எடுக்கும் அழுத்தமான முடிவு, அதற்கான தார்மீக காரணங்களும் மட்டுமே ரசிக்க வைக்கின்றன.
முந்தைய பாகங்களிலிருக்கும் அழுத்தமும், ஆழமும், எதார்த்தமும் மிஸ் ஆனாலும், ஒரு த்ரில்லர் சினிமாவாக பாஸ் மட்டும் ஆகிறது 'த்ரிஷ்யம் 3' திரைப்படம். இதோட நிறுத்திப்போமே ஜீத்து சேட்டா?!
















