அன்று கட்சிக்குள் வெடித்த பூகம்பம்; டெல்லி நெருக்கம்! - உயர்கல்வி துறை அமைச்சர் ...
Parimala & Co: "அவரைவிட ரெண்டு மடங்கு அதிக சம்பளம் கேட்டேன்; அப்போ ஓடியவன்..." - மிஷ்கின் ஃபன் டாக்
'தலைவன் தலைவி' திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் 'பரிமளா & கோ' திரைப்படம் இம்மாதம் 28-ம் தேதி திரைக்கு வருகிறது. ஜெயராம், ஊர்வசி, 'லப்பர் பந்து' சஞ்சனா, அனந்திகா, மிஷ்கின், சாண்டி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு திரைப்படம் தொடர்பாக பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.

மேடையில் பேசிய இயக்குநர் மிஷ்கின், ``அழகான கிராமங்களையும், ஊர்களையும் விட்டுப் பிழைப்பைத் தேடி இந்தச் சென்னை என்னும் நரகத்திற்கு வந்து, தங்களின் இதயத்தை அடகு வைத்த எத்தனையோ மனிதர்களில் நானும் பாண்டிராஜனும் ஒன்று.
அவனுடைய இளமைக்காலம் மிகவும் கொடுமையானது என்பதை நான் புரிந்துகொண்டேன். பாண்டிராஜ் ஒரு வாரியர். தமிழ் சினிமாவில் வறுமையிலிருந்து வந்து, கஷ்டப்பட்டு முன்னேறத் துடிப்பவர்களை இந்தச் சமூகம் தொடர்ந்து கேலி செய்துகொண்டே இருக்கும்.

ஆனால், எவன் ஒருவன் வறுமையிலும் அந்த வறுமையைப் பெருமையாக நினைத்து உழைத்து, சினிமா போன்ற பெரும் கனவுகளை விற்கும் ஒரு இடத்தில் தன் நினைவுகளை விற்கிறானோ, அவனால் மட்டும்தான் ஒரு பெரிய இயக்குநராக முடியும்.
அந்த வகையில், தன் நினைவுகளை விற்றவன்தான் இந்த பாண்டிராஜ். பொதுவாகவே, ஒவ்வொரு இயக்குநரிடமும் இருக்கும் ஏதேனும் ஒரு முக்கியமான தனித்துவத்தை நான் கவனிப்பது வழக்கம்.
ஒரு நாள் என் அலுவலகத்திற்கு வந்து அவன் 'தலைவன் தலைவி' படத்தின் கதையைக் கூறினான். அந்தத் திரைப்படத்தில் நான் ஒரு மேனேஜராகப் பணியாற்றினேன். அதாவது, அவனுக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே ஒரு சிறிய மேனேஜர் போல வேலை பார்த்தேன். அதன் பிறகு, படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
அப்போது நான் அவனிடம், 'சரி, தலைவன் உறுதியாகிவிட்டது; தலைவி யார்?' என்று கேட்டேன். அதற்கு அவன், 'தலைவி கதாபாத்திரத்திற்கு ஒரு புதிய, அழகான பெண்ணைத் தேர்வு செய்யலாம் சார்' என்றான்.
உடனே நான், 'டேய்... கதையின்படி தலைவனைத் தேர்வு செய்துவிட்டாய் என்றால், அதற்கு இணையாக ஒருவரைப் போட வேண்டும்' என்று கூறி, நித்யா மேனனின் பெயரைப் பரிந்துரைத்தேன்.

ஆனால், நித்யா மேனன் தரப்பில் சம்பள விஷயத்தில் ஒரு பெரிய வெடிகுண்டைப் போட்டார்கள். தயாரிப்பாளர்கள் நாம் திட்டமிட்ட பட்ஜெட்டை விட அது மிகவும் அதிகம் எனக் கூறினர். அப்போது நான் அவர்களிடம், 'அவர் ஒரு மிகச்சிறந்த நடிகை. பட்ஜெட்டைக் கணக்கு பார்க்காமல் அவருடைய திறமைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்' என்று அறிவுறுத்தினேன்.
அதன்பின், ஒரு மாதம் வரை பேசி இறுதியில் நித்யா மேனனை கமிட் செய்தார்கள். மீண்டும் பாண்டிராஜ், என்னை அந்தப் படத்தில் நித்யா மேனனின் அப்பாவாக நடிக்கக் கேட்டான். 'சரி. அவளைவிட இரண்டு மடங்கு அதிக சம்பளம் வேண்டும்' என்றேன். அப்போது ஓடியவன், இப்போது இந்தப் படத்திற்குதான் கதைச் சொல்ல வந்தான்." என்றார்.



















