TVK Minister: மொபைல் கடை உரிமையாளர் டு போக்குவரத்துத்துறை அமைச்சர்! - யார் இந்த ...
பெரியார் பெருந்தொண்டர் 'விடுதலை' சம்பந்தம் மனைவி கமலா காலமானார்!
பெரியார் பெருந்தொண்டரும் திராவிட இயக்கத் தீரருமான 'விடுதலை' என்.எஸ்.சம்பந்தத்தின் மனைவி கமலா அம்மையார் இன்று காலமானார். அவருக்கு வயது 97.
பெரியாருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருக்கும் நாகரசம்பட்டி கிராமத்திற்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. (இன்று அந்த ஊர் நாகோஜனஹள்ளி என்று அழைக்கப்படுகிறது). நாகரசம்பட்டி பெரியாருக்கு பிடிக்க முக்கியக் காரணம், அந்த ஊரில் இருந்த என்.எஸ்.சம்பந்தம்.
பெரியார் அறக்கட்டளையின் உறுப்பினர். விடுதலை இதழின் மேலாளர், திராவிடர் கழக மத்திய குழு உறுப்பினர். இதையெல்லாம் தாண்டி பெரியாருக்கு நிழலாக எப்போதும் இருந்தவர். குறிப்பாக பெரியார் உடல்நலம் பாதிக்கப்படும் காலங்களில் அவர்கூடவே இருந்து கவனித்தவர் சம்பந்தம்.
"பெரியாரைப் புரிந்து கொண்டவர்கள் இரண்டு வகையினர், பேச்சையும் எழுத்தையும் பார்த்துக் கேட்டுப் படித்துப் புரிந்து கொள்பவர் பலர். ஆனால் அவரது ஒவ்வோர் அங்க அசைவு அல்லது முக்கல் முனகல் போன்றவைகளுக்கும் பார்வைக்கும் பொருள் புரிந்து செயல்படுவோர் மிகமிகச் சிலர்; அந்த சிலரிலும் சிறப்பானவர் இந்தச் சம்பந்தம். அற்புதமான நினைவாற்றல் இவரது தனித்திறன். பெரியார் சம்பந்தப்பட்ட கழகக் காரியங்களில் இவரறியாதது ஏதுமில்லை . இன்றைக்கும் உட்கார்ந்த இடத்திலிருந்தே பல காரியங்களை இயக்கி வருகின்ற சூத்திரதாரி இவரென்பதை நெருங்கிப் பழகிய சிலர் நன்கறிவார்கள்" என்று இவரைப்பற்றிக் குறிப்பிடுகிறார் பெரியார் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கருணானந்தம்.
சம்பந்தமும் முன்னாள் அமைச்சர் ராஜாராமும் பள்ளிக்காலத் தோழர்கள், 13 வயதிலேயே அரைக்கால் சட்டையோடு சுயமரியாதைக் கொடி பிடித்தவர்கள் இவர்கள். தர்மபுரிக்கு வந்த பெரியாருக்கு 'நம் இயக்கக் குடும்பத்துப் பிள்ளை' என்று சம்பந்தத்தை அறிமுகம் செய்து வைத்தார் ராஜாராம். அந்த ஒரு நாளிலேயே பெரியாருக்கு சம்பந்தத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வந்துவிட்டது. 1948-ல் திருப்பத்தூருக்கு ஒரு கூட்டத்துக்கு வந்தார் பெரியார்.
எங்கள் ஊரிலும் ஒரு கூட்டத்தில் பேசவேண்டும் என்று வலியுறுத்தி பெரியாரை நாவரசம்பட்டிக்கு அழைத்துச் சென்றுவிட்டார் சம்பந்தம். அங்கு அந்தக் குடும்பத்தினர் காட்டிய பேரன்பிலும் உபசரிப்பிலும் நெகிழ்ந்து போனார் பெரியார். சம்பந்தத்தின் கொள்ளுத்தாத்தா நஞ்சப்பர் கட்டிய ஓட்டு வீடு. அந்த வீட்டையும் அந்த மனிதர்களையும் பெரியாருக்கு மிகவும் பிடித்துப் போனது.
அதன்பிறகு, சேலம், தர்மபுரி பக்கம் வந்தாலே நாகரசம்பட்டிக்கு வந்துவிடுவார் பெரியார். பத்துக்கும் மேற்பட்டோர் வாழ்ந்த அந்தக் கூரை வீட்டில் பெரியாருக்கும் ஒரு கட்டில் நிரந்தரமாக இருக்கும். இயல்பிலேயே பெரியார் பெருந்தொண்டர்களாக இருந்த குடும்பத்தினர், அவரை தங்கள் குடும்பத்தின் மூத்தவராகக் கருதி கொண்டாடினார்கள்.
1949-ல் நாகரசம்பட்டியில் பெரியார் தலைமையில் சம்பந்தம் - கமலா திருமணம் நடந்தது. கமலாவை தன் மகளாகவே கருதினார் பெரியார்.
சம்பந்தம்- கமலா தம்பதிக்கு நான்கு பெண் பிள்ளைகள். கலைச்செல்வி, தேன்மொழி, மணிமேகலை, மங்கையர்கரசி.
"சம்பந்தம் மீது பெரியாருக்கு பெரிய நம்பிக்கை. அதனால்தான் விடுதலையின் மேனேஜராக அவனை நியமித்தார். பெரியார் திடல் இடத்தை வாங்கிய பிறகும் கூட அதை வளப்படுத்துவதற்கு சில கட்டடங்களை எல்லாம் கட்டுவதற்கு சம்பந்தத்தையும் அவரது தம்பி ஏகாம்பரத்தையும் வைத்தே செய்தார். எமர்ஜென்ஸியின் போது சம்பந்தத்தை ஜெயிலில் போட்டுவிட்டார்கள். அது காலவரம்பற்ற சிறை. எப்போது விடுதலை என்றே தெரியாது. அவனுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு, அவனது மனைவி. அந்த அம்மையார் ரொம்பவே தைரியமாக இருந்தார்கள். அது பாராட்டப்பட வேண்டிய செயல். ஜெயிலில் அவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது, எழுந்து அமர முடியாத நிலை. மருத்துவர்கள் அவனுக்கு ஒரு பெல்ட் கொடுத்தார்கள். அதை அவனது மனைவி ஜெயிலில் கொண்டு போய் கொடுத்தார். ஆனால் ஜெயில் அதிகாரிகள் கொடுக்கவிடவில்லை" என்று 8.10.86-ல் பெரியார் திடலில் நடந்த சம்பந்தம்-கமலா மணிவிழாவில் பேசினார் முன்னாள் அமைச்சர் ராஜாராம்.
கமலா திருமணத்துக்குப் பிறகு திராவிடர் கழகத்தில் இணைந்து செயல்பட்டார். 1976-ல் சம்பந்தம் சிறையில் இருந்தபோது கமலா விடுதலை இதழின் மேலாளராக பொறுப்பேற்று பணியாற்றினார்.
பெரியார் மணியம்மையாரைத் திருமணம் செய்துகொண்ட போது கழகத்தின் முன்னணி தோழர்கள் பலர் பெரியாரிடமிருந்து விலகினர். அந்த நெருக்கடியான நேரத்தில் சம்பந்தம் பெரியாருக்கு பக்கபலமாக நின்றார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 31.08.1974-ல் வெள்ளி விழா கண்ட சம்பந்தம்-கமலா தம்பதிக்கு தன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி அளித்தார் மணியம்மையார்.
இறுதிவரை கொண்ட கொள்கையில் உறுதியோடு நின்ற சம்பந்தம் 01.02.1993 அன்று இயற்கையில் கலந்தார். அதன்பிறகு மகள்களின் பராமரிப்பில் இருந்தார் கமலா.
"சிலநாள்களுக்குமுன் எங்கள் அக்காவை அழைத்து, நான் காலமானால் எந்த சடங்கும் செய்யக்கூடாது என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறார். இறுதி நாள் வரையும்கூட முரசொலி வாசித்தார். சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வியடைந்ததை தாங்கமுடியாமல் கலங்கினார். 'உடம்பு நல்லாயிருந்தா அந்தத் தம்பியைப் பாத்து ஒரு வார்த்தை ஆறுதல் சொல்லியிருக்கலாம்' என்று வருந்தினார். அவருக்கிருந்த பெரிய வருத்தம், ஸ்டாலினைச் சந்தித்து இரண்டு வார்த்தை பேசமுடியாதது தான்..." என்கிறார்கள், மகள்கள் மங்கையர்கரசியும் மணிமேகலையும்.
கமலாவின் முகவரி : கதவு எண் 5, காவேரி அபார்ட்மெண்ட், பகவந்தம் தெரு, தி.நகர், சென்னை.













