விசிலடிக்காத 8 மாவட்டங்கள் `டு' 10 ஆண்டுகளுக்கு பின் சட்டசபை செல்லும் கட்சி - 2...
'மஞ்சும்மல் பாய்ஸ்' சிதம்பரத்துடன் கைகோர்த்த டொவினோ, சூர்யா பட இயக்குநர் - 'பாலன் த பாய்' அப்டேட்
அடுத்த அதிரடிக்கு ரெடியாகிவிட்டார் 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தின் இயக்குநர் சிதம்பரம். அடுத்து புதுமுகங்கள் நடிப்பில் 'பாலன் த பாய்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். சர்வதேச அளவில் இப்படத்திற்கு கவனம் கிடைக்க, கேன்ஸ் திரைப்பட விழாவில் Marché du Filmல் இம்மாதம் 14ம் தேதி சிறப்பு திரையிடல் நடைபெறுகிறது. இதன் மூலம் சர்வதேச திரைப்பட ரசிகர்கள், நிபுணர்களின் கவனத்தை ஈர்க்க உள்ளது.
79வது கேன்ஸ் திரைப்பட விழா வருகிற 12ம் தேதி முதல் இம்மாதம் 23ம் தேதி வரை நடக்கிறது. இதில் `பாலன் த பாய்' படத்தின் திரையிடல் நடக்க உள்ளது. சர்வதேச மார்க்கெட்டிங்கை கருத்தில் கொண்டு கேன்ஸில் திரையிடுகின்றன. இதற்காக படக்குழு கேன்ஸ் விழாவிற்கு பறக்கவிருக்கிறது.
மலையாளத்தில் மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவாகி 200 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபீஸ் வசூலைக் குவித்த படம் 'மஞ்சும்மல் பாய்ஸ்'. கொடைக்கானல் குணா குகையில் சிக்கியவரை மீட்கும் நண்பர்களின் உண்மைக் கதையைத் திரைப்படமாக எடுத்து பாலிவுட்வரை திரும்பிப்பார்க்க வைத்திருந்தார் படத்தின் இயக்குநரான சிதம்பரம். 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தை அடுத்து இப்போது 'பாலன் த பாய்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார் சிதம்பரம். படத்தின் திரைக்கதையை 'ஆவேசம்' ஜித்து மாதவன் எழுதியுள்ளார். ஜித்து இப்போது சூர்யா, நஸ்ரியா நடிக்கும் 'சூர்யா 47' படத்தை இயக்கி வருகிறார்.

இந்த 'பாலன்'னை தமிழில் விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தைத் தயாரித்து வரும் கே.வி.என் நிறுவனமும், தெஸ்பியன் ஃபிலிம்ஸும் இணைந்து தயாரித்துள்ளது. இந்தாண்டின் தொடக்கத்தில் (ஜனவரி) 'பாலன் த பாய்' படத்தின் பூஜை எளிமையான முறையில் தொடங்கியதுடன், அதே வேகத்தில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. 'மஞ்சம்மல் பாய்ஸ்' போலவே இப்படமும் காமெடி திரில்லராகும். அதைப் போல இயக்குநர் சிதம்பரம், தனது இரண்டாவது படத்தின் டைட்டிலிலும் 'பாய்'யை இடம்பெற செய்திருக்கிறார்.

ஒரு அம்மாவுக்கும் பையனுக்கும் இடையே நடக்கும் விஷயங்கள்தான் படத்தின் கதை என்றும் சிறுவன் கதாபாத்திரம் ரொம்பவே பேசப்படும் என்கிறார்கள். புதுமுகங்கள்தான் இதிலும் கதை மாந்தர்களாக வருகின்றனர். முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் டொவினோ தாமஸ் நடித்திருக்கிறார். டொவினோ இப்போது பசில் ஜோசப்புடன் நடித்திருக்கும் 'அதிரடி' வரும் 14ம் தேதி திரைக்கு வருகிறது.
'பாலன் த பாய்' படத்தில் நடித்திருக்கும் புதுமுகங்கள் அனைவரையுமே ஆடிஷன் வைத்துத் தேர்வு செய்துள்ளனர். திருவனந்தபுரம், ஆலப்புழா, வயநாடு என கேரளாவின் பல இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் வயநாட்டில் மட்டும் 60 நாட்களுக்கு மேல் நடந்துள்ளதாம். இந்தப் படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறது 'ஜனநாயகன்' படத்தை தயாரித்திருக்கும் கே.வி.என் நிறுவனம்.
தொழில்நுட்ப டீமில் 'மஞ்சும்மல் பாய்ஸ்' ஷைஜூ காலித் ஒளிப்பதிப்பும், சுஷின் ஷியாம் இசையையும், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பும் பேசப்படும் என்கிறார்கள். படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சைலஜா தேசாய் ஃபென், ``நான் கடந்த 2022-இல் கேன்ஸ் விழாவுக்கு வந்தபோது, அடுத்த முறை ஒரு சிறந்த படத்துடன் வரவேண்டும் என எனக்குள் உறுதி எடுத்தேன். அந்த கனவு இப்போது நனவாகப்போகிறது'' என்கிறார்.

படம் குறித்து இயக்குநர் சிதம்பரம்,"நாம் அறியாமலேயே சுமந்து கொண்டிருக்கும் சுமைகள் மற்றும் நாம் சேர வேண்டிய இடத்தை நோக்கிய தேடல் தான் இப்படம். உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாதவர்களுக்காகவும், அடையாளம், உயிர்வாழ்வதற்கான போராட்டம் மற்றும் தாய்-சேய் இடையிலான பிணைப்பு ஆகியவற்றை மையமாக கொண்ட உலகளாவிய கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகி இருக்கிறது.'' என்கிறார் இயக்குநர் சிதம்பரம்.



















