தவெக: ``ஆளுநரின் நடவடிக்கை மாநில உரிமைகளுக்கு எதிரானது; இதைச் செய்யலாம்..!"- துர...
தூத்துக்குடி: பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு; தப்ப முயன்ற ரெளடியைச் சுட்டுப் பிடித்த போலீஸார்!
தூத்துக்குடி, மினி சகாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மரிய அந்தோணி. இவர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் கொள்ளை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. ஒரு சரித்திரப் பதிவேட்டின் பிரபல ரெளடியான இவரை சில வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் கடந்த சில நாள்களாக தனிப்படை போலீஸார் அவரை தேடி வந்துள்ளனர்.

இந்த நிலையில், குரும்பூர் அருகேயுள்ள சோனகன்விளை- காணியாளன்புதூரில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் பேரில் அங்கு சென்ற தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜ பிரபு தலைமையிலான போலீஸார், ரெளடி மரிய அந்தோணியை கைதுசெய்ய முயன்றனர். அப்போது, அவர் தன்னிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியால் உதவி ஆய்வாளர் ராஜ பிரபுவை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றுள்ளார்.
இதனையடுத்து, உதவி ஆய்வாளர் ராஜ பிரபு தனது துப்பாக்கியால் மரிய அந்தோணியை எச்சரித்தும் கேட்காததால் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார். இதில், மரிய அந்தோணியின் வலது மார்பிற்கும் வயிற்றுக்கும் இடையில் குண்டு பாய்ந்தது. காயமடைந்த உதவி ஆய்வாளர் ராஜ பிரபு மற்றும் ரெளடி அந்தோணி ஆகிய இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு, முதற்கட்டமாக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்துத் திருச்செந்தூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




















