கொல்கத்தா: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை திறக்க முயற்சி?திரிணாமுல் காங்கிரஸ...
திரிஷ்யம் 3: "மோகன்லாலால் மட்டுமே முடியும். என்னால் முடியாது என்றார் வெங்கி மாமா" - எஸ்தர் அனில்
மலையாளத் திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றப்படம் 'திரிஷ்யம்'. முதல் இரண்டு பாகங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப்பெற்றதைத் தொடர்ந்து, மோகன்லால் மற்றும் இயக்குனர் ஜீத்து ஜோசப் மீண்டும் இணைந்து, மூன்றாவது பாகத்தையும் திரைப்படமாக உருவாக்கியிருக்கின்றனர். 'திரிஷ்யம் 3' படத்தின் டீஸர் நேற்று வெளியிடப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தில் மோகன்லாலுடன் மீனா, அன்சிபா ஹசன், எஸ்தர் அனில், ஆஷா சரத், சித்திக், கலபவன் ஷாஜோன் எனப் நட்சத்திரப் பட்டாளமே மீண்டும் இணைந்துள்ளது. இந்தப் படம் மே 21 அன்று திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதிலிருந்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. இந்தப் படத்தின் இந்திப் பதிப்பு அக்டோபர் 2 அன்று வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
'திரிஷ்யம்' படத்தின் மூலக்கதை அதன் தனித்துவமான திரைக்கதைக்காகப் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் அஜய் தேவ்கன், தமிழில் கமல்ஹாசன், தெலுங்கில் வெங்கடேஷ் என முன்னணி நடிகர்கள் அந்தந்த மொழிகளில் நடித்தனர். ஒவ்வொரு ரீமேக்கும் அந்தந்த மொழி ரசிகர்களுக்கு ஏற்பத் தனித்துவமான பாணியில் அமைந்திருந்தாலும், மூலப்படமான மலையாளப் பதிப்பில் மோகன்லால் வெளிப்படுத்திய சில நுணுக்கமான உணர்வுகள் இன்றும் பல பார்வையாளர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
இப்படத்தில் மோகன்லாலின் மகளாக நடித்த நடிகை எஸ்தர் அனில், சமீபத்தில் 'Ginger Media' நிறுவனத்திற்கு பேட்டியளித்திருந்தார். அதில், சுவாரசியமான தகவலைப் பகிர்ந்திருந்தார். முதல் பாகத்தில் இடம்பெற்ற ஒரு மறக்க முடியாத காவல் நிலையக் காட்சி குறித்துப் பேசிய அவர், ``விசாரணையின் போது சகாதேவன் கதாபாத்திரம் ஜார்ஜ்குட்டியை (மோகன்லால்) எட்டி உதைக்கும். அப்போது தனது மனைவி மற்றும் குழந்தைகள் துயரத்துடன் நிற்பதைப் பார்த்து, மோகன்லால் அவர்களைத் திரும்பிப் பார்த்து 'எல்லாம் சரியாகிவிடும்' என்பது போல ஒரு மெல்லிய புன்னகையைச் சிந்துவார்.
அந்த ஒரு நொடி காட்சி மிகவும் உணர்வுபூர்வமானது. அந்தக் காட்சியைத் தெலுங்கு ரீமேக்கில் படமாக்கும்போது, இயக்குநர் ஸ்ரீப்ரியா அம்மா, அதேபோல அடி வாங்கிய பிறகு திரும்பிப் பார்த்துப் புன்னகைக்க வேண்டும் என் நடிகர் வெங்கடேஷிடம் கூறினார். ஆனால் அதற்கு வெங்கி மாமா, `அம்மா, என்னால் அப்படி நடிக்க முடியாது... அது மோகன்லால் சாரால் மட்டுமே முடியும்' என்று வெளிப்படையாகக் கூறினார்." என்றார்.
திரிஷ்யம் 3-ம் பாகம் வெளியாகவுள்ள நிலையில், இந்தப் பேட்டின் குறிப்பிட்ட இந்தப் பகுதி சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது. 2026-ம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக 'திரிஷ்யம் 3' உருவெடுத்துள்ளது.


















