கோவையில் டாஸ்மாக் மூடலால் கல்லா கட்டும் FL 2 பார்! - சட்ட சிக்கலை தவிர்க்க நூதன ...
மருத்துவர் டு மந்திரியான ராஜீவ் - மீண்டும் முக்கியத்துவம் பெறும் திருவாடானை தொகுதி!
ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் ஆகிய 3 தொகுதிகளில் தி.மு.க வென்றது. எஞ்சிய திருவாடானை தொகுதியில் முதல் முறையாக தமிழக வெற்றிக் கழக வேட்பாளரான வி.கே.ராஜீவ் வெற்றி பெற்றுள்ளார். ராஜீவ், நீண்ட பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமியின் மகன் கருமாணிக்கத்தை 2513 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று எம்.எல்.ஏ ஆனார்.
ராமநாதபுரத்தை சேர்ந்த மத்திய மாநில அரசு முதல் நிலை ஒப்பந்த நிறுவனமான வேலுமாணிக்கம் குழுமத்தின் பங்குதாரரான கதிரேசன் - விமலசுந்தரி தம்பதியரின் மகன் வி.கே.ராஜீவ். மருத்துவரான ராஜீவ், தமிழக வெற்றிக் கழகத்தின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளராக உள்ளார். இவருக்கு லாவண்யா என்ற மனைவியும், கிரிதின் அபிநவ் என்ற மகனும் உள்ளனர்.


சுதந்திர போராட்டத்தில் முதன்மையாக இடம்பிடித்த தியாகிகள் நிறைந்த தொகுதியாக திருவாடானை இருந்ததால் சுதந்திரத்திற்கு பின் நடந்த தேர்தல்கள் பெரும்பாலானவற்றில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே வெற்றி பெற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியம் கொன்ட கரியமாணிக்கம் அம்பலம், அவரது மகன் கே.ஆர்.ராமசாமி, இவரை தொடர்ந்து ராமசாமியின் மகன் கருமாணிக்கம் என பாரம்பரியமாக எம்.எல்.ஏ பதவி வகித்து வந்துள்ளனர்.
இந்நிலையில்தான் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கடும் போட்டிக்கு மத்தியில் காங்கிரஸ் வேட்பாளர் கருமாணிக்கத்தை வென்று முதல் முறையாக எம்.எல்.ஏ ஆனார் த.வெ.க-வின் ராஜீவ். இதனை தொடர்ந்து இன்று விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையில் மருத்துவரான ராஜீவ் அமைச்சராகி உள்ளார். இவருக்கு சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 75 கால வரலாற்றில் திருவாடானை தொகுதியில் 2006-ம் ஆண்டு வென்ற தி.மு.க-வின் சுப.தங்கவேலனுக்கு பின் மருத்துவர் ராஜீவ் மந்திரியானதன் மூலம் திருவாடானை தொகுதி மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.











