செய்திகள் :

தேர்தல் 2026 : `குற்றப்பத்திரிக்கை' வியூகம் - மாநிலத் தேர்தல்களில் பாஜகவின் திட்டம் மலருமா?

post image

தமிழ்நாடு, அஸ்ஸாம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் என 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் தனக்கான ஒரு பிரசார வியூகத்தை வகுக்கும். அதன் அடிப்படையில் பா.ஜ.க-வின் தேர்தல் வியூகம் ஒன்று பேசுபொருளாகியிருக்கிறது. மேற்கு வங்கத்தில் மார்ச் 28 அன்று மத்திய அமைச்சர் அமித் ஷாவால் வெளியிடப்பட்ட 35 பக்க குற்றப்பத்திரிகை, வெறும் தேர்தல் கையேடு அல்ல. அது ஒரு சட்டப்பூர்வமான குற்றச்சாட்டுப் பத்திரம் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

அமித் ஷா
அமித் ஷா

அதில், கடந்த 15 ஆண்டுகளில் 25 லட்சம் போலி வேலை அட்டைகள் (MGNREGA), 10,000 கோடி ரூபாய் ரேஷன் ஊழல் மற்றும் எல்லை தாண்டிய கடத்தல்கள் நடந்திருப்பதாக பா.ஜ.க கூறுகிறது. குறிப்பாக, சிண்டிகேட் ராஜ்ஜியம் மற்றும் கட்-மணி கலாச்சாரம் மேற்கு வங்கத்தின் அடையாளமாக மாறிவிட்டதாகக் குற்றம் சாட்டுகிறது. எல்லையில் 600 கி.மீ தூரம் வேலி அமைக்க நிலம் தராமல், ஊடுருவல்காரர்களுக்குத் திரிணாமுல் அரசு துணை போவதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறது.

இதற்கு பதிலளித்திருக்கும் விதமாக மம்தா பானர்ஜி, ``எல்லையைப் பாதுகாப்பது மத்திய அரசின் (BSF) பொறுப்பு. அதில் தோல்வியடைந்துவிட்டு மாநில அரசு மீது பழி போடுவது வேடிக்கை. வங்காளிகளுக்கும் வங்கதேசத்தினருக்கும் இடையிலான கோட்டை அழித்து, அஸ்ஸாம் மாடல் தடுப்பு முகாம்களை வங்காளத்திற்குள் கொண்டு வர பா.ஜ.க முயல்கிறது." என நீண்ட விளக்கமளித்திருந்தார்.

அதேப் போல தமிழ்நாடு வந்திருந்த பியூஷ் கோயல் `தி.மு.க-வுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை' என்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், திமுக அரசின் மீதான ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை மையப்படுத்தியிருந்தது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

கேரளாவிலும் இந்த வியூகத்தை செயல்படுத்துகிறது. எனவே, தேர்தல் நெருங்கும் வேலையில் பா.ஜ.க முன்னெடுக்கும் இந்த பிரசார யுக்தி கை கொடுக்குமா? இத்தகைய வியூகம் எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்' என்பது குறித்து மூத்த ஊடகவியலாளர் நாதனிடம் பேசினோம். அவர், இந்த விவகாரம் குறித்து விரிவாகப் பேசினார். அந்த உரையாடலின் சுருக்கம் இதோ...

``பாஜகவின் இந்த 'குற்றப்பத்திரிகை' அரசியலை ஆய்வு செய்யும்போது சில முக்கியமான உண்மைகளைப் புரிந்துகொள்ள முடியும். பா.ஜ.க 2014, 2019 மற்றும் 2024 ஆகிய மூன்று பொதுத் தேர்தல்களிலும் எதிர்க்கட்சிகள் மீது ஒரு தவறான சித்திரத்தை உருவாக்குவதையே பிரதான உத்தியாகக் கொண்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு எதிராகவும், தமிழ்நாட்டில் தி.மு.க-விற்கு எதிராகவும் அவர்கள் வெளியிடும் 'குற்றப்பத்திரிகை' என்பது வெறும் தேர்தல் அறிக்கை அல்ல.

ஊடகவியலாளர் நாதன்
ஊடகவியலாளர் நாதன்

அது ஒரு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் குற்றச்சாட்டுகளைப் போன்ற தோற்றத்தை உருவாக்கி, மக்களை நீதிபதிகளாக உருவகப்படுத்துகிறது. இதன் மூலம் 'அந்த அரசு ஊழல் நிறைந்தது, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது' என்ற பிம்பத்தை ஊடக பலத்தோடு மக்களிடம் கொண்டு செல்கிறார்கள்.

2014-க்கு முன்னதாக 2ஜி ஊழல் விவகாரத்தை ஒரு லட்சத்து எழுபத்தையாயிரம் கோடி ஊழல் எனப் பெரிதுபடுத்தி, தி.மு.க மற்றும் காங்கிரஸ் மீது ஒரு கறையை உருவாக்கினார்கள். ஆனால், நீண்ட விசாரணைக்குப் பிறகு சிபிஐ நீதிமன்றம், 'போதிய ஆதாரங்கள் இல்லை' என அனைவரையும் விடுதலை செய்தது. இதேபோல், பீகாரில் இந்துத்துவ அரசியலைத் தீவிரமாக எதிர்த்த சமூக நீதித் தலைவர் லல்லு பிரசாத் யாதவை முடக்க, கால்நடை தீவன ஊழல் வழக்கை ஆயுதமாகப் பயன்படுத்தினார்கள். உண்மையில் அந்த ஊழலை விசாரிக்க உத்தரவிட்டதே அவர்தான் என்றாலும், அவரை அரசியல் ரீதியாகக் கார்னர் செய்ய அந்த வழக்கு பயன்படுத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக பா.ஜ.க கூறும் குற்றச்சாட்டு எதார்த்தத்திற்குப் புறம்பானது. மணிப்பூர் போன்ற இனக்கலவரங்களோ, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு போன்ற மோசமான சம்பவங்களோ இந்த ஆட்சியில் நடக்கவில்லை. கள்ளக்குறிச்சி கலவரத்தின் போது கூட காவல்துறை மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு நிலைமையைக் கையாண்டது.

ஆனால், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் கன்வார் யாத்திரையின் போது முஸ்லிம் கடைகளை அடையாளப்படுத்தச் சொல்வது போன்ற நடவடிக்கைகள் தான் அவர்களின் 'சட்டம் ஒழுங்கு' அரசியலாக இருக்கிறது.

ராப்ரி தேவி - லாலு பிரசாத் யாதவ் - தேஜஸ்வி யாதவ்
ராப்ரி தேவி - லாலு பிரசாத் யாதவ் - தேஜஸ்வி யாதவ்

தமிழ்நாட்டில் 43% பெண்கள் பணிக்குச் செல்கிறார்கள், இரவு நேரங்களிலும் அவர்கள் சுதந்திரமாக நடமாடுவதே இங்கு சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதற்கான சான்று. பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பேசும் பா.ஜ.க, தன் சொந்தக் கட்சி நிர்வாகிகள் மீதான புகார்களில் மெத்தனமாகவே உள்ளது. மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டிய பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதோ அல்லது உன்னாவ் வழக்கில் சம்பந்தப்பட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ மீதோ எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மிகத் தாமதமானவை. குஜராத்தில் பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலை செய்து அவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்றது பா.ஜ.க அரசு.

ஆனால், தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உதாரணமாக அண்ணா பல்கலைக் கழக வழக்கில் ஞானசேகரன், பொள்ளாச்சி வழக்கு போன்றவற்றில் உடனடியாகக் கைது செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

போதைப்பொருள் புழக்கம் என்பது இந்தியா முழுவதும் உள்ள ஒரு சவால். பஞ்சாப் மற்றும் டெல்லியில் இதன் பாதிப்பு மிக அதிகம். அதானியின் துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட பல லட்சம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் மாயமானது குறித்து சிஏஜி கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால், இதுவரை பா.ஜ.க அரசு எந்த பதிலும் சொல்லவில்லை.

குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு
குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு

தேர்தல் பத்திரங்கள் மூலம் நிறுவனங்களை மிரட்டி நிதி திரட்டியது உச்ச நீதிமன்றத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது. தமிழ்நாட்டில் அண்ணாமலை மீதே ஊழல் புகார்களை அவர் கட்சி ஆட்களே முன்வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், திமுக போன்ற மாநிலக் கட்சிகள் மீதும், தலைவர்கள் மீதும் உருவாக்கப்பட்ட 'ஊழல் பிம்பம்' பா.ஜ.க-விற்குப் பெரிய அரசியல் லாபத்தைத் தந்தது.

அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ-யை வைத்து எதிர்க்கட்சித் தலைவர்களை முடக்குவது பா.ஜ.க-வின் பாணி. உதாரணமாக, செந்தில் பாலாஜி வழக்கில் சொல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் ஊழலை விட, பா.ஜ.க-வின் 'தேர்தல் பத்திரங்கள்' மூலம் பெறப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் பெரிய ஊழல் அல்லவா?

பீகாரில் அத்வானியின் ரத யாத்திரையைத் தடுத்த லல்லு பிரசாத் யாதவ் மீது தீவன ஊழல் வழக்கை ஏவி, அவரது அரசியல் வாழ்க்கையைச் சிதைத்ததைப் போலவே, தற்போதும் சமூக நீதி பேசும் தலைவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள்

முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் பா.ஜ.க-வின் இத்தகைய 'நரேட்டிவ்'கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், தமிழகத்தில் ஓரளவு சுதந்திரமான ஊடக விவாதங்கள் இருப்பதால், ஒருதலைப்பட்சமான குற்றச்சாட்டுகள் இங்கு எடுபடுவது கடினம். குறிப்பாக, தி.மு.க அரசின் 'விடியல் பயணம்' போன்ற திட்டங்கள் பெண்களிடையே ஏற்படுத்தியுள்ள நேரடித் தாக்கத்தை இத்தகைய தரவுகள் மூலம் முறியடிக்க முடியுமா என்பதும் கேள்விக்குறியே. எனவே, பா.ஜ.க-வின் இந்த வியூகம் தமிழ்நாட்டில் பலனளிப்பது சிரமம்தான்." என்றார்.

மயிலாடுதுறை: `எப்போ இடிஞ்சு விழும்னு தெரியலை' - அச்சுறுத்தும் பாலம்... மக்களின் திக்... திக் பயணம்!

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயில் ஒன்றியத்திற்கு உட்பட்ட எரவாஞ்சேரி கிராமத்தில் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவ்வூரையும் இலுப்பூரையும் இணைப்பதற்கு 90-களில் வீரசோழ... மேலும் பார்க்க

"ஜனநாயகன் படத்தை வெளியிட விடாம கூட்டு சூழ்ச்சி பண்ணிட்டாங்க.!" - திருச்சியில் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அந்தவகையில் மார்ச் 30 ஆம் தேதி பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இ... மேலும் பார்க்க

`ஏமாத்திட்டீங்களே' செந்தில் பாலாஜியிடம் புலம்பிய MLA டு `எனக்கே கொடுங்க' கேட்கும் அமைச்சர் | கழுகார்

செந்தில் பாலாஜியிடம் புலம்பிய எம்.எல்.ஏ!"என்னை ஏமாத்திட்டீங்களே..."கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி எம்.எல்.ஏ சிவகாமசுந்தரிக்கு வரும் தேர்தலில் அதே தொகுதியைப் பெற்றுத் தருவதாக உத்தரவாதம் அளித்திருந்தாராம்... மேலும் பார்க்க

ஈரோடு: முதல்வர் ஸ்டாலின் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் | Photo Album

ஈரோடு முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்ஈரோடு முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்ஈரோடு முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்ஈரோடு முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்ஈரோடு முதல்வர் ஸ்டாலின் தேர்தல் ... மேலும் பார்க்க

'சார் ஒரு 5 நிமிசம் புட்டேஜ் வேணும்;இன்னொரு தடவை.!' - சீட்டுக்காக சத்யமூர்த்தி பவனில் கதர்களின் ரகளை

காங்கிரஸையும் கோஷ்டி மோதலையும் பிரிக்கவே முடியாது. திமுகவிடம் தொகுதிகளை இறுதி செய்ய வேண்டி டெல்லிக்கு அடிக்கடி பறந்து வந்த செல்வப்பெருந்தகை இப்போது வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய டெல்லிக்கு பறந்தபடி இ... மேலும் பார்க்க