செய்திகள் :

தொகுதி மறுவரையறை: ``ராகுல் காந்தி குறிப்பிட்ட அந்த 'எட்டப்பர்' விஜயா?" - திமுக எம்.பி தயாநிதிமாறன்

post image

தென் மண்டல நிர்வாகக்குழு கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலைமையில் கோவளத்தில் நேற்று நடந்தது. தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், ``மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தியதற்காக தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படக் கூடாது. தொகுதி மறுவரையறையில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவ சதவீதம் குறையாது என்பதற்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் கொடுக்கப்பட வேண்டும்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

தொகுதி மறுவறையறை நடத்தக்கூடாது என தவெக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில், தற்போது முதல்வர் விஜய் பின்வாங்கியிருப்பதாக கூறுவது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தி, விஜய்
ராகுல் காந்தி, விஜய்

இந்த நிலையில், எம்.பி.தயாநிதிமாறன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``கடந்த மாதம் தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து வந்த ஒரு கட்சியின் தலைவர், `தொகுதி மறுவரையறையை (Delimitation), குறிப்பாக Fair Delimitation-ஐ யார் ஆதரிக்கிறார்களோ அவர்கள் தமிழ்நாட்டின் விரோதிகள், எட்டப்பர்கள்' எனக் கூறிவிட்டுச் சென்றார். அதோடு, `நாடாளுமன்றத்தில் வரவிருக்கும் அந்த மசோதாவில் தி.மு.க-வின் நிலைப்பாடு என்ன?' என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

தொகுதி மறுவரையறையைப் பொறுத்தவரை தி.மு.க-வின் நிலைப்பாடு ஒன்றே ஒன்றுதான். தமிழ்நாட்டிற்கு எள்ளளவும் பாதிப்பு வரக்கூடாது. சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் தமிழ்நாட்டிற்கு இருக்கின்ற தற்போதைய 7.18% பிரதிநிதித்துவம் அப்படியே தொடர வேண்டும். இதற்காகக் கடந்த மார்ச் மாதமே தென்னக முதல்வர்களைத் தமிழ்நாட்டிற்கு அழைத்துச் சிறப்புக்கூட்டம் நடத்தித் தீர்மானம் நிறைவேற்றியவர் எங்கள் தலைவர். ஆனால், வரலாறு தெரியாமல், வடமாநிலத் தலைவரின் கைப்பாவையாக இயங்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர், அவசர அவசரமாக அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டினார்.

முதல்வர் விஜய்

அந்தக் கூட்டத்தின்போதே நாங்கள் `காவிரியில் தண்ணீர் வரவில்லை, மேகதாதுவில் அணை கட்ட முற்படுகிறார்கள். எனவே, முதலமைச்சர் விஜய் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும்' என வலியுறுத்தினோம். ஆனால், மேகதாது பற்றி எந்த முடிவும் எடுக்காமல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை மட்டும் வைத்து ஒரு தீர்மானத்தைப் போட்டார்கள்.

`தற்போதுள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளை அப்படியே 'ஃப்ரீஸ்' (Freeze) செய்ய வேண்டும், தொகுதி மறுவரையறை கூடாது' என்பதுதான் அந்தத் தீர்மானம். அதில் காவிரி நதிநீர் பற்றியோ, மேகதாது அணை குறித்தோ ஒரு வார்த்தைகூடப் பேசப்படவில்லை. தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்றத்திலும் தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

'சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறையே கூடாது' என ஏகமனதாகத் தீர்மானம் போட்ட முதல்வர் விஜய், மத்திய அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்த உடனே தனது நிலைப்பாட்டை மாற்றிவிட்டார். 'No Delimitation' என்ற நிலையிலிருந்து மாறி, இப்போது 'Fair Delimitation' வேண்டும் என்கிறார். காங்கிரஸ் பேச்சைக் கேட்டு நடந்துகொள்ளும் விஜய், அமித்ஷாவைப் பார்த்தவுடன் பயந்துவிட்டாரா அல்லது கூட்டணி மாறிவிட்டாரா?

தென்னக முதல்வர்கள் கூட்டத்தில் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் காவிரி நதிநீர் பங்கீட்டில் "ஒத்துழைப்பு" என்ற புதிய வார்த்தையைக் கொண்டுவந்து, மேகதாது அணை கட்டத் தமிழ்நாட்டின் ஒத்துழைப்பு வேண்டும் என்றார். ஆனால், அங்கே இருந்த தமிழ்நாடு முதல்வர் விஜய் அதை எதிர்த்து ஒரு வார்த்தைகூடப் பேசாமல் அமைதி காத்தார்.

திமுக எம்.பி தயாநிதிமாறன்
திமுக எம்.பி தயாநிதிமாறன்

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி நடந்துகொள்ள வேண்டும் என்று இப்போது விஜய் பேசுகிறார். அதைத்தானே நாங்கள் முதலிலிருந்தே கூறினோம்? நாங்கள் அதைச் சொல்லி கர்நாடகா சென்று அங்குள்ள முதலமைச்சரைச் சந்திக்க வேண்டாம் எனக் கூறியபோது, "நான் சென்று பேசுவேன்" என்றீர்கள். அது தவறான முடிவு என்பதை இப்போது புரிந்துகொண்டீர்களா? தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த விவகாரங்களில் அனுபவம் வாய்ந்த தி.மு.க-வின் கருத்துகளை விஜய் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உங்களுடன் இருக்கும் தேசியக் கட்சித் தலைவர்களுக்குத் தமிழ்நாட்டு அரசியல் பற்றி எதுவும் தெரியாது. தவறான அறிவுரைகளைக் கொடுத்துத் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிப்பார்கள். இறுதியாக நாங்களும் கேட்கிறோம். 'No Delimitation' என்ற நிலையிலிருந்து மாறி 'Fair Delimitation' வேண்டும் எனப் பல்டி அடித்த எட்டப்பர் யார்? ராகுல் காந்தி குறிப்பிட்ட அந்த 'எட்டப்பர்' விஜயா? இதற்கு விஜய் பதில் சொல்வாரா அல்லது மாணிக்கம் தாகூர் கண்டிப்பாரா? காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸின் நிலைப்பாடு என்ன? மாநில உரிமைகளுக்காக தி.மு.க மட்டுமே தொடர்ந்து போராடி வருகிறது. பல்டி அடித்த விஜய்-யின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை அறியத் தமிழ்நாட்டு மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்." என்றார்.

’சொந்த கார் இல்லாத எம்.எல்.ஏ-க்களுக்கு மட்டுமே கார் வழங்கணும்’ – கார்த்தி சிதம்பரம்

கோவை விமான நிலையத்தில் சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கில் அரசு திட்டங்கள் செயல்படுவதை நிறுத்த ... மேலும் பார்க்க

ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்கும் ஏஐ தொழில்நுட்பம் – பின்பற்ற தயாரான பிற மாநிலங்கள்!

கோவையில் இருந்து கேரளாவிற்கு போத்தனூர், வாளையார் பகுதிகள் வழியாக இயக்கப்படும் ரயில்கள், மதுக்கரை வனப்பகுதி வழியாக செல்கின்றன. ரயில்கள் வந்து செல்வதற்கு வசதியாக ஏ, பி என இரண்டு ரயில் பாதைகள் அமைக்கப்பட... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை : ``தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானம் தான் காங்கிரஸின் நிலைபாடு.!" - ப.சிதம்பரம்

கடந்த 2011-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க பா.ஜ.க அரசு தீவிரம் காட்டி வருகிறது. கடந்த மார்ச் மாதம் தொகுதி மறுவரையறை மசோதாவை ... மேலும் பார்க்க

TN Assembly: "மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்"- எடப்பாடி பழனிசாமி | Live

"மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்"- எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 21) நிதிநிலை அறிக்கை, நீதி, சிறை, சட்டம், எரிசக்தி அறநிலையத்துறைக்கான மானிய கோரிக்கை மீதான விவாத... மேலும் பார்க்க

"சட்டமன்றத்தில் முதல் பேச்சை கன்னிப் பேச்சு என்று குறிப்பிடாதீர்கள்" - வானதி சீனிவாசனின் விளக்கம்

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் முதன்முதலாகப் பேசப்படும் பேச்சை ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடுவார்கள்.ஆனால், அப்படிக் குறிப்பிடாதீர்கள் என்றும், அதற்கான காரணத்தையும் விளக்குகிறார் பாஜக நிர்வாக... மேலும் பார்க்க