`பணவரவை ஈர்க்கும் 11 எளிய பரிகாரங்கள்!' - இன்று வரலட்சுமி விரத நாளில் தொடங்குவது...
நெல்லை: 4 சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் - மதபோதகருக்கு மரண தண்டனை!
நெல்லை மாவட்டம் மேலஇலந்தக்குளத்தைச் சேர்ந்தவர் ஆபிரகாம். கிறிஸ்துவ மத போதகர். 47 வயதான இவர் தேவர்குளம் காவல் எல்லைக்கு உள்பட்ட மேல இலந்தைக்குளம் பகுதியில் சபை நடத்தி மதபோதகம் செய்து வந்துள்ளார். இந்த சபைக்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிரார்த்தனைக்காக வருவது வழக்கம்.
அத்துடன், சபையில் உள்ளவர்களை மதபோதகத்துக்காக வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். அதன்படி,் கடந்த 2022-ம் ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் உள்பட நான்கு சிறுமிகளை பெற்றோர் சம்மதத்துடன் வெளியூருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

வெளியூரில் தங்கியிருந்தபோது, போதகர் ஆபிரகாம் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அத்துடன், இது பற்றி பெற்றோர் அல்லது கிராமத்தினர் யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளார்.
போதகரின் அத்துமீறிய செயலால் அச்சம் அடைந்த சிறுமிகள், இது பற்றி பெற்றோரிடம் நடந்தவைகளைத் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் இது பற்றி தேவைகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது பற்றி விசாரித்த போலீஸார், போதகர் ஆபிரகாம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ததுடன், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போதகர் ஆபிரகாம் மீதான குற்ற்ச்சாட்டு தொடர்பான வழக்கின் விசாரணை, மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. காவல்துறையினர் தங்களது விசாரணையின் போது, குற்றச்சாட்டுகள் குறித்த வலுவான ஆதாரங்களைத் தெரிவித்தனர்.
அத்துடன், அரசு வழக்கறிஞரான உஷா தன் வாதத்தை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து, விசாரணையின் முடிவில் ஆபிரகாம் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது. குற்றம் நிரூபணமானதால் போதகர் ஆபிரகாமுக்கு போக்சோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், அவரால் பாலியல் தொல்லைக்கு உள்ளான நான்கு சிறுமிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் வீதம், மொத்தம் ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசிற்கு உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பு விவரங்களை நீதிபதி வாசித்ததும் நீதிமன்ற அறையிலேயே ஆபிரகாம் மயங்கி விழுந்ததார். அதைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மதபோதகருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். தே.மு.தி.க தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், "போக்சோ வழக்குகளில் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். மரண தண்டனை விதிக்கப்பட்டால் தான் இத்தகைய கொடூரக் குற்றங்கள் குறையும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில், தூக்கு தண்டணை விதிக்கப்படுவது இது 4-வது முறையாகும்.

















