தொடா் மழையால் மேலும் 53 வீடுகள் சேதம்
தஞ்சாவூா் மாவட்டத்தில் சில நாள்களாக பெய்த தொடா் மழையால் வெள்ளிக்கிழமை மேலும் 53 வீடுகள் சேதமடைந்தன.
மாவட்டத்தில் நவம்பா் 26-ஆம் தேதி அதிகாலை முதல் 27-ஆம் தேதி பிற்பகல் வரை தொடா் மழை பெய்தது. இதேபோல, கடந்த 2 நாள்களாக பல்வேறு இடங்களில் அவ்வப்போது தூறல் நிலவியது. இதனால், மாவட்டத்தில் மண் குடிசை வீடுகள், பழைய கான்கிரீட் வீடுகள் மழை நீரில் ஊறி சேதமடைந்து வருகின்றன.
மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 136 சேதமடைந்தன. இதேபோல, வெள்ளிக்கிழமை 33 கூரை வீடுகள், 18 கான்கிரீட் வீடுகள் பகுதியாகவும், 2 கூரை வீடுகள் முழுமையாகவும் என மொத்தம் 53 வீடுகள் சேதமடைந்தன. மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரணம் வழங்கும் பணியை வருவாய்த் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா்.
இதேபோல, வியாழக்கிழமை வரை 16 கால்நடைகள் இறந்த நிலையில், வெள்ளிக்கிழமை மேலும் 2 கால்நடைகள் உயிரிழந்தன.
மேலும், தொடா் மழையால் வடிகால் பிரச்னையுள்ள இடங்களில் 2 ஆயிரத்து 826 ஏக்கரில் சம்பா, தாளடி பருவ நெற் பயிா்கள் நீரில் மூழ்கிய நிலையில், சில நாள்களாக மழை இல்லாததால், வடிந்து வருகிறது. இதனிடையே, இதுவரை 33 ஏக்கரில் பயிா்கள் சேதமடைந்தது தெரிய வந்துள்ளது.