பழனி அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு; ஆசிரியரை சஸ்பெண்ட் செய்யக் கோரி...
தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு - சிறுகதை
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
வீட்டுக்குள்ளிருந்து வெளியில் வந்த சீரங்கம்மா "நாலு மணி அப்பவே அடிச்சருச்சு,இந்த இளமதியை இன்னமும் காணமே,மழை வேற வருமாட்ட இருக்குது,எங்க பராக்கு பார்த்துட்டு நிக்குதோ? பள்ளிக்கொடத்து பைக்கட்டை பஸ் ஸ்டாண்டுல வச்சிட்டு காப்பிகடை சாந்தாமணி கூட பாண்டியாட்டம்
ஆடுதோ என்னமோ "என்று புலம்பிய படியே ரோட்டுக்கு வந்தாள்.
" ஏம்ப்பா பழனிச்சாமி! பள்ளிக்கொடத்து குழந்தைக எல்லாம் போய்ட்டாங்களா, எங்க பேத்தி இளமதி இன்னங்காணமே தம்பி ! உங்கூட்டு புள்ளைங்க எல்லாம் வந்துட்டாங்களா ,என்று விசனத்துடன் கேட்டாள்..
"அட ஆத்தா இப்பத்தான் ஒவ்வொருத்தரா போயிட்டு இருக்காங்க உம் பேத்தி இனிமே தான் வரும்.. இடுப்புல இருக்கிற குழந்தை கிட்ட இருந்து காட்டுக்கு போக தயாரா இருக்கிற கெழடு கட்டைக வரை எல்லார்கிட்டயும் உம் பேத்தி சிநேகமாச்சே.... படிச்ச பாடத்துல இருந்து நாட்டு நடப்பு வரை பேசிட்டு வரவேண்டாமா. நீ போ ஆத்தா வந்தா விளையாட விடாம வரச்சொல்றேன்,..(அவர் கடை கிட்டதான் பஸ் ஸ்டாண்டும் மைதானமும் இருந்தது)அதா வருது பாரு பையை ஆட்டிட்டு, சீக்கிரம் கூட்டிட்டுபோ இல்லீன்னா மளிகை பண்டத்துக்கு விலைப்பட்டியல் போட ஆரம்பிச்சுடும்", என்றார் பழனிச்சாமி.

"போதுந்தம்பி!புள்ள மேல கண்ணு போடாத..போயி திருஷ்டி சுத்திப்போடணும்",என்ற சீரங்கம்மா பேத்தி பக்கம் திரும்பி 'கொண்டா சாமி அந்த புஸ்தக மூட்டையை" என்று வாங்கிக் கொண்டு முன்னால் போனார்.
வீட்டுக்குள் வந்ததும் "அந்த யூனிபாரத்துணியை கழட்டி வச்சிட்டு வா தங்கம்! நரிப்பயறு லட்டும் கோதுமை சிப்ஸும் இருக்கு சாப்பிடு. வயிறு பசிச்சா சோள அம்பிலி(ஒருவகை சோளக்கூழ்) குடி. அப்புறமா ரெண்டு பேரும் மில்லுக்காட்டுலே சாணி எடுக்கப் போலாம்,"என்றார்.
"ஓஹோ இதுக்குத்தான் இத்தனை நேரம் எதிர்பார்த்து நின்னயாக்கும் , நான் வரலை, நீ வேணுமின்னா போயிட்டு வா," என்றாள் இளமதி..
" சாமி சாமி! எந்தங்கமல்லோ, கொஞ்சம் வா சாமி கூட, வரமாட்டேன்னு சொல்லாத. காத்தால மில்லுக்காட்டுக்கு மேக்கெ வெளிய போறப்ப பார்த்தேன்... மாடு கன்னுக நெறைய மேஞ்சிட்டு இருந்தது.சாணி நிறைய இருக்கும்,ஆத்தா கண்ணுக்கு சாணி தெரியாது கண்ணூ. நீ வந்து காட்டு, நானு எடுத்து கூடையிலேபோட்டுக்கறேன். என்னைய பெத்த ராசாத்தியல்ல! வா மயிலு ஒரு எட்டு போயிட்டு வந்துரலாம் "
ஆத்தாவை பார்க்க பாவமா இருந்தது இளமதிக்கு." சரிசரி வா போலாம் "என்று சும்மாட்டுத்துண்டுடன்முன்னால நடக்க மூங்கில் கூடையுடன் பின்னால நடந்தாள் ஆத்தா.
மில்கேட்டுக்குள் நுழைந்ததும் "வாடியம்மா, சின்னப்பன் மகளே! வாயாடி..... ஆத்தாளை வயசான காலத்துல உட்கார விட மாட்டியே ?! சாணி எடுக்க வந்தியா? போறப்ப பாதி சாணிய எனக்கு கந்தாயமா(வரி) குடுத்துட்டுப் போகணும் சரியா?" என்று வம்புக்கு இழுத்தார் வாட்ச்மேன் வாசுதேவன்.
"கிஸ்கனக்கிடி கொய்யாப்பழம், கோயமுத்தூர் நவாப்பழம் ! சாணி வேணுமின்னா உங்க பொண்ணு மீனாட்சி சுந்தரியை( சீனியர்) வந்து எடுக்கசொல்லுங்க, நான் ஒண்ணும் தரமாட்டேன், "என்று பழிப்பு காட்டினாள் இளமதி .
"இந்தா!இங்கென்ன மாமா கூட வாக்குவாதம்?உங்கிட்ட மாமா எதுவும் கேக்க மாட்டாங்க ,சும்மா தமாசுக்கு சீண்டிப்பார்க்குறாரு. சரி கண்ணு இன்னைக்கு கிளாஸ்ல படிச்ச பாட்டு ஏதாச்சும் எங்களுக்கு சொல்லிட்டு நீ போ தங்கம்( அவரது மகனும் இளமதி வகுப்பு தான்) என்று சொன்ன இன்னொரு வாட்ச்மேன் சென்னியப்பனுடன் சேர்ந்து தலையசைத்தார் வாசுதேவன்.
உடனே குக்ஷியான இளமதி தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு என்ற பாடலை ராகம் போட்டு பாடினாள். வாசுதேவனும் சென்னியப்பனும் சந்தோக்ஷமாக ரசித்தனர். ஆத்தாவுக்கு நேரமாகுதே என்று கவலையாக இருந்தாலும் பேத்தியை பார்க்க பெருமையாக இருந்தது.
" மடி முட்டிக்......இளமதி பாடலை முடிக்கவிடாமல் கேட்டுக்கு முன் ரோட்டில் பெரிய சத்தம் கேட்டது. வேலைமுடிந்து பஸ்ஸுக்கு வந்து கொண்டிருந்தவர்கள் வேகமாக ரோட்டுக்கு ஓடினார்கள். பெரிய ஆக்ஸிடெண்ட் என்பது மட்டும் எல்லாருடைய மனதுக்கும் பட்டது. சாணிக்கூடையையும் வாட்டர் கேனையும் வீசிவிட்டு ஆத்தாவும் பேத்தியும் ஓடினார்கள். பேத்திய விட ஆத்தா வேகமா ஓடினார்.

கூடியிருந்த கூட்டத்துக்கு ரெண்டு பக்கமும் பஸ்கள் வரிசைகட்டி நின்றன. LCC முன்னால் ஒரு லாரி குறுக்காக நின்றிருந்தது.. பயந்த குரல்கள் எழுப்பிய கூச்சல் எல்லாரிடமும் பதட்டத்தை உண்டாக்கியது. முண்டியடித்து கூட்டத்துக்குள் புகுந்த இளமதியின் கண்களில் பட்டது அந்த வெள்ளைப்பசு தான்.அடுத்து பக்கத்தில் கொஞ்சம் தள்ளி தன்னுடன் படிக்கும் பால கிருஷ்ணனின் ஆத்தா நினைவின்றி கிடந்ததுதெரிந்தது...
அவர் அருகில் கீழே விழுந்த புல்லுக்கட்டில் சிக்கிய காலுடன் ரமேக்ஷின் பொங்கலூரம்மா பாட்டி பிரமை பிடித்த மாதிரி நின்று கொண்டிருந்தார்.வலது பக்கம் மாராப்பு போட்டிருக்கும் அவரது சேலையில் நிறைய ரத்தம் தெறித்திருந்தது.கீழே அடிபட்டு கிடந்த வெள்ளைப்பசுவின் அடியிலும் அருகிலும் இரத்தமும் பாலும் கலந்து ஓடியது.... அருகிலேயே செவலை கன்னுக்குட்டி மாட்டின் மூக்கணாங்கயிறை நக்கியபடி இருந்தது....
திடீரென "ஐயோ லட்சுமி " என்ற அழுகையுடன் சேர்ந்த பெருங் குரல் கேட்டது. 'தள்ளுங்க தள்ளுங்க கொஞ்சம் வழி விடுங்க' என்ற கூட்டத்தினர் குரல்களும் கலந்து கேட்டது.இளமதிக்கு மயக்கம் வருவதுபோலிருந்தது.... தனக்கு ரெண்டு பக்கமும் (அவர்கள்யாரென்றே தெரியாது) நின்றவர்களின் கைகளை இறுக்கமாகப்பிடித்துக் கொண்டாள்.அவர்களும் 'பயப்படாதே' என்பதுபோல் முதுகை தட்டிக்கொடுத்தனர். கூட்டத்தை விலக்கி விட்டு பாலகிருஷ்ணனின் அம்மா கதறியபடி ஓடிவந்தார்.

" ஐயோ லட்சுமி! எந்தெய்வமே !! என்னாச்சு உனக்கு? எப்பிடியம்மா நடந்தது ?எங்குடும்பத்தை காப்பாத்தின குலதெய்வம் நீ தானே !எங்க வீட்டு மகாலட்சுமி அம்மா !டேய் பாலா, ஈஸ்வரா,நடராசு, வெங்கிடு உங்களுக்கு எல்லாம் நான் குடுத்த பாலை விட நம்ம லட்சுமி குடுத்த பால் தாண்டா எச்சா(அதிகமா)இருக்கும். ஐயோ என்ற கோமாதா இனி நா என்ன செய்யப் போறேன்னு தெரியலையே?அவரது அழுகையின் உச்சகட்ட வீரிய சத்தம் கிழக்கே செம்மிபாளையம், மேற்கே காரணம்பேட்டை,தெற்கே ஆறாக்குளம்,வடக்கே கோடாங்கிபாளையம் வரைக்கும் கேட்கும் போல என கூடி நி நின்றோருக்கு வருத்தம் வந்தது. லட்சுமியின் தலையை மடிமேல் வைத்துக் கொண்டதால் ஏற்பட்ட இரத்தக்கறை அவரது
நீல வாயில்சேலை, வெள்ளை ரவிக்கையில்( மில் யூனிபார்ம்) நி நிறையவே படிந்தது. அவரது மகன்களும் தேம்பி தேம்பி அழுதனர். இதற்கிடையில்
பாலாவின் அப்பா தனது தாய் மற்றும் பொங்கலூரம்மா ஆகியோரை இ.எஸ்.ஐ... ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல மற்றவர்கள் உதவினார்கள்.
பசங்களோட அழுகையும் கன்றுக்குட்டியின் பரிதாபமான முகமும் இளமதியை என்னவோ செய்தது. இதற்கிடையில் பேத்தியை தேடி கண்டுபிடித்த சீரங்கம்மா ஆத்தா "பயப்படாம வா ,வீட்டுக்கு போலாம் "என்று அழைத்து சென்றார்.
"ஆத்தா! அப்ப நாம சாணி எடுக்க வேண்டாமா?"என இளமதி கேட்டாள்.
"ஒண்ணும் வேண்டா , வா,கூடையை எடுத்துட்டு வூட்டுக்கு போலாம். ".....இது ஆத்தாவின்பதில்.
"ஆத்தா! இன்னோரு
சந்தேகம் எனக்கு!......இளமதி
"பேசாம வரமாட்டியா? சரி சரி என்ன சந்தேகம்?.."...ஆத்தா
"இல்லே! பாலாவோட அம்மாவுக்கு யூனிபார்ம் சேலை ஜாக்கெட்டெல்லாம் லட்சுமி மாட்டோட இரத்தக்கறை ஆயிருச்சே! அது போயிடுமா? நாளைக்கு அவங்க எப்படி மில்லுக்கு யூனிபார்ம் கட்டிட்டு போவாங்க? "
ஆத்தாவுக்கு அழுவதா இல்லை பேத்தியை திட்டுவதா
எனத்தெரியவில்லை . "அதைப்பத்தி எல்லாம் நெனைச்சு நீ கவலைப்படாதே. அவங்ககிட்ட நிறைய சேலை இருக்கும். துணியில இருக்கற இரத்தக்கறையும் நல்லா
தொவைச்சா போயிரும், ஆனா அந்த அம்மிணி மனசுல பதிஞ்ச லட்சுமி மாட்டோட பால் கறை மட்டும் இந்த ஜென்மத்துக்கும் போகவே போகாது," என்றபடி கூடையை ஒருகையில்
நன்றாகப் பிடித்துக்கொண்டு இளமதியின் கையை மறுகையில் பிடித்தார்..
ஆத்தாவின் கையை உதறிய இளமதி 'ஒரு நிமிஷம் இரு ஆத்தா ,'என்று சொல்லிவிட்டு கேட் அருகே வாட்ச்மேன் கேபினுக்கு வேகமாக ஓடினாள்....
"மாமா! அந்தப்பாட்டு முடியல இல்லியா, இப்ப சொல்றேன் கேளுங்க...."
" வேண்டாங்கண்ணூ! இப்ப ஆத்தா கூட வீட்டுக்குப் போ, நாளைக்கு கேக்கறோம்', என்றார் சென்னியப்பன்..
"ஊஹூம் ..இல்லையில்லை ,இப்பவே சொல்றேன்.".அடம் பிடித்தாள் இளமதி.
ஏதோ சொல்ல வந்த சென்னியப்பனை கையமர்த்தி விட்டு "நீ சொல்லு சாமி "என்றார் வாசுதேவன்.
சரி மாமா! சொல்றேன்.
ரோட்டுலே கிடக்குது வெள்ளைப்பசு!
அங்கே தவிச்சு நிக்குது கன்னுக்குட்டி!
மூச்சே இல்லாம அந்தவெள்ளைப்பசு!
பேச்சே வராம இந்த கன்னுக்குட்டி!
நாவால் நக்குமுன்னு வெள்ளைப்பசு கிட்ட
நல்லா ஒட்டி உரசுது கன்னுக்குட்டி!
முத்தம் தருமுன்னு வெள்ளைப்பசுவின் மூஞ்சியில் தன் மூக்கைத் தேய்க்குது கன்னுக்குட்டி!
ஏம் மாமா! வெள்ளைப்பசுவும் அந்தக்கன்னுக்குட்டியும் ரெண்டுமே ரொம்ப ரொம்ப பாவந்தானே மாமா!?
என்று பரிதாபமாக கேட்ட இளமதியின் கேள்விக்கு வாட்ச்மேன் மாமாக்களின் கண்ணீர்த் துளிகளே பதிலானது.......பதிவானது........
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..!
இந்த வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப்பில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!
Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
















