கோவை: பெரியார் நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை; பின்னணி என்ன?
நாகை: யூனியன் ஆபீஸ் வங்கிக் கணக்கை ஹேக் செய்த மர்ம கும்பல் - பல கோடி சுருட்டியதால் அதிர்ச்சி
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூரில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய அலுவலகம். இதன் வங்கிக் கணக்கைச் சில தினங்களுக்கு முன்பு ஹேக் செய்த டிஜிட்டல் மர்ம கும்பல் கணக்கில் இருந்த ரூ.11 லட்சத்தை டிஜிட்டல் முறையில் தங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றி மோசடி செய்தனர். அரசின் வங்கிக் கணக்கு ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துயது.

இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் ஹேக்கிங் கும்பல் இதே போல் கைவரிசை காட்டி பல கோடி ரூபாய் சுருட்டியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஹேக்கிங் மோசடி கும்பல் இதனைச் செய்திருக்கலாம் எனப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து விபரம் அறிந்தவர்கள் தரப்பில் பேசினோம், ''நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் வங்கிக் கணக்கை முடக்கி அதிலிருந்த ரூ.11 லட்சத்தை ஹேக்கிங் கும்பல் டிஜிட்டல் பரிவர்த்தனையைப் பயன்படுத்தி அபேஸ் செய்துள்ளனர். இதே போல் இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கைவரிசை காட்டி பல கோடியைச் சுருட்டி விட்டனர். ஹேக்கிங் கும்பல் கேரளாவில் முகாமிட்டு இந்த டிஜிட்டல் கொள்ளையை அரங்கேற்றியிருக்கலாம் எனப் போலீஸார் சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கு முன்பு பாண்டிச்சேரியில் அரசின் வங்கிக் கணக்கை ஹேக் செய்து கொள்ளை நடத்தினர். இப்போது தமிழக்கத்தில் நிகழ்த்தியுள்ளனர். ஊராட்சி ஒன்றிய அலுவலங்கள் மூலம் மத்திய அரசு பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதற்கான நிதி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு வரவு வைக்கப்படுகிறது. இதனால் இந்த வங்கிக் கணக்குகளில் கோடிகளில் பணம் புரளும் என்பதால் ஹேக்கிங் கும்பல் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் வங்கிக் கணக்கைக் குறி வைத்து இந்தக் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.
நாகையில் நடந்த இந்தக் கொள்ளை குறித்து நாகை சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல மாவட்டங்களில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளதாகச் சொல்கிறார்கள். இதனால் அரசின் வங்கிக் கணக்குகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருப்பது அரசுக்குச் சவாலாக அமைந்துள்ளது. விரைவாக விசாரணை நடத்தி இந்த ஹேக்கிங் கும்பலை போலீஸார் கைது செய்ய வேண்டும்'' என்றனர்.




















