"என்னால இனி நடக்கவே முடியாதுனு..." - மேடையில் கலங்கிய நடிகை சினேகா; அமைதியில் உற...
நாக்க முக்கா: 'மாடு செத்தா மனுஷன் தின்னான்' எப்படி வந்திச்சு தெரியுமா? | வரித்துணையே 4
முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த 'வரித்துணையே..!'.

அதில் நாம் இன்றைய பகுதிக்கு 'காதலில் விழுந்தேன்' திரைப்படத்தின் 'நாக்க முக்கா' பாடல் பற்றி பேச முடிவு செய்து அப்பாடலின் பாடலாசிரியர் பி.வி. பிரசாத்தை சந்தித்தோம்.
டிஜிட்டல் யுகத்தின் தொடக்கத்திற்கு முன்பே... அதாவது ஸ்பாடிஃபை போன்ற இசைத் தளங்கள் உருவெடுப்பதற்கு முன்பே பட்டிதொட்டி எங்கும் சி.டி-கள் விற்றுத் தீர்ந்து மீண்டும் மீண்டும் பலராலும் கேட்கப்பட்டு, கொண்டாடப்பட்ட பாடல் 'நாக்க முக்கா'.
'காதலில் விழுந்தேன்' படத்தின் இயக்குநர் பி.வி. பிரசாத்தான் இப்பாடலை எழுதியவர். இப்பாடல் பற்றி அவரிடம் பேசத் தொடங்கியதும் மகிழ்ச்சியுடன், "நாக்க முக்கா பாடலைப் பற்றி பேசுவதற்கு நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கிறதே! ஒவ்வொன்றாக சொல்கிறேன்...." என்றபடி தொடங்கினார்.
"சொல்லப்போனால் 'நாக்க முக்கா' பாடலை கம்போஸ் செய்ததே நான்தான். 1992-ல் அந்தப் பாடலுக்கு நானே டியூன் அமைத்து ஒரு டேப்பில் பாடி ரெக்கார்ட் செய்து வைத்துவிட்டேன். 1995-ல் உதவி இயக்குநராக சேர்வதற்கு வாய்ப்புகளைத் தேடி அலைந்து கொண்டிருந்தேன். அப்போது விஜய் மில்டனையும், வின்செண்ட் செல்வாவையும் சந்தித்து இப்பாடலைப் பாடிக் காண்பித்தேன்.
பிறகு, 'காதலில் விழுந்தேன்' படத்திற்கு விஜய் மில்டனே ஒளிப்பதிவும் செய்தார். ஆனால், அவர் 'இப்பாடல் எனக்கு புரியவே இல்லை. இத்தனை வேகமாக இருக்கிறது'என எப்போதும் சொல்வார்." என்றவர், "1992-ல் எங்களின் வீட்டிற்கு அருகில் ஒரு முதியவர் இறந்துவிட்டார். அவருடைய இறுதிச் சடங்கிற்கு பறையிசையை எங்களின் ஏரியா முழுக்க ஒலிக்கச் செய்தார்கள்.

அந்த ஒலி எனக்குள் பல சிந்தனைகளையும் கிளறியது. பிறகு அந்த ஒலிக்கு ஏற்ப சில டம்மி வார்த்தைகளைப் பிடித்து முணுமுணுக்கத் தொடங்கினேன். சிறுவயதில், எங்கள் வீட்டில் மாடு இறந்துபோனால் அதை பாகங்களாக வெட்டி இறைச்சிக்காகக் கொடுப்பார்கள்.
அதனுடைய தோலில் உப்பு தேய்த்து மேளத்திற்காக தயார்படுத்துவார்கள். இதையே வரிகளாக அமைப்போமென 'மாடு செத்தா மனுஷன் தின்னான். தோலை வச்சு மேளம் கட்டி' என்ற வரிகளை எழுதினேன். என்னுடைய கல்லூரி நாட்களில்தான் இந்தப் பாடலை எழுதினேன். தினமும் கல்லூரிக்கு சைக்கிளை 10 கி.மீ. மிதித்துச் செல்வேன். போகும் வழியில் இந்தப் பாடலைப் பாடிக்கொண்டே செல்வேன். அப்படி ஒரு மாதத்தில் இந்த முழுப் பாடலையும் தயார் செய்துவிட்டேன்.
சினிமா வாய்ப்புகளுக்காக தேடிச் சுற்றும்போது, இயக்குநர் வி.சேகரிடம் இப்பாடலைப் பாடிக் காண்பித்துதான் உதவி இயக்குநராகப் பணிக்குச் சேர்ந்தேன். விஜயகாந்த் சாரிடமும் இப்பாடலை ஒரு முறை பாடிக் காண்பித்திருக்கிறேன். கதை சொல்ல பார்த்திபன் சாரை சந்திக்கையில், அவரிடமும் இப்பாடலைப் பாடிக் காண்பித்திருக்கிறேன். பிறகு நான் 'காதலில் விழுந்தேன்' படத்தை இயக்கும்போது, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியிடம் இப்பாடலை அப்படியே கொடுத்துவிட்டேன்.

அவர் சில விஷயங்களைக் கோர்த்து இந்தப் பாட்டை இன்னும் மெருகேற்றித் தந்தார். இந்தப் பாடலைப் பாடுவதற்கு பாடகியைத் தேடும் படலத்திற்காக என்னுடைய உதவி இயக்குநர்களை சில ஊர்களுக்கு அனுப்பி வைத்தேன். அப்படி தஞ்சையில் எங்களுக்குக் கிடைத்தவர்தான் பாடகி சின்னப் பொன்னு. அவரையே இப்பாடலைப் பாட வைத்தோம். பிறகு, விஜய் ஆண்டனியும் இப்பாடலின் இன்னொரு வெர்ஷனைப் பாடிக் கொடுத்தார்." என்றார்.
மேலும் பேசியவர், "இந்தப் பாடல் வெறுமென ஒரு குத்துப் பாடலாகக் கடந்துபோய்விடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். சில இலக்கியத் தன்மைகளும் இந்தப் பாடலில் இருக்க வேண்டுமென 'பொண்ணுங்களா பொறக்க வச்சான்
பொண்ணுக்குள்ள கருவ வச்சான்.
கருவ வச்சான் கற்ப வச்சான்
கற்புக்குள்ள தீய வச்சான்.
தீய வச்சு எரிய வச்சான் எரிய வச்சான் எரிய வச்சான்.
மதுரை எரியுது அணைங்கடா அணைங்கடா அணைங்கடா!' என்ற வரியை எழுதினேன். நானும் ஒரு தமிழ் இலக்கிய மாணவன்.

ஆதலாலே, ஆர்வத்துடன் இப்பாடலில் இந்த வரிகளையும் இணைத்துவிட்டேன். படத்திற்கு மதுரையில் பிரச்னை வந்தபோது, அனைவரிடமும் இது 1992-ல் எழுதப்பட்ட பாடல் என தெளிவாகச் சொல்லி புரிய வைத்தேன். இப்பாடலின் சி.டி வெளிவந்ததும் பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்தி தொடங்கி பல மொழிகளிலும் இப்பாடலின் ரைட்ஸ் கேட்டு வாங்கினார்கள். ஜப்பான் மொழி பேசுபவர்களுக்கும் இப்பாடல் பிடித்திருந்தது. அமெரிக்காவின் ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் இப்பாடல் இசைக்கப்பட்டது. நிறைய குழந்தைகளும் இப்பாடலுக்கு அப்போது துள்ளலான ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். கர்ப்பிணிப் பெண்கள் பலரும் 'இந்தப் பாடலைக் கேட்டால் வயிற்றிலிருக்கும் குழந்தை உதைக்கிறது' என்றெல்லாம் சொல்வார்கள்!" என பலத்த சிரிப்போடு முடித்தார்.
(தொடரும்.!)


















