ஸ்டாலின்: முதல் தேர்தலிலே தோல்வி... தோற்ற தொகுதியிலே வென்றது எப்படி? | முதல் களம...
நாளை சந்திர கிரகணம் எப்போது? அவசியம் பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்; சொல்ல வேண்டிய ஸ்லோகம்!
நாளை சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. வானியல் நிகழ்வுகளில் முக்கியமானதாகக் கருதப்படும் சந்திர கிரகணம் சாஸ்திர அடிப்படையிலும் முக்கியத்துவம் பெறுகிறது.
குறிப்பாக நவகிரகங்களில் ராகுவும் கேதுவும் சாயா (நிழல்) கிரகங்கள் என்று சொல்லப்படுகின்றன. சூரியன், சந்திரன் ஆகியன ராகுவோடும் கேதுவோடும் இணைந்திருக்கும் காலத்தில் கிரகணங்கள் தோன்றும்.
சூரியன், சந்திரன் ஆகியன ராகுவுடன் இணைந்திருந்தால் சூரிய கிரகணமும் சந்திரனுடன் கேதுவோடும் சூரியன் ராகுவோடும் இருந்தால் சந்திரகிரகணம் தோன்றும் என்பதை நம் பஞ்சாங்கங்கள் மூலம் ஜோதிடர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கணித்திருக்கின்றனர்.
அதாவது அமாவாசை நாளில் சூரிய கிரகணமும் பௌர்ணமி நாளில் சந்திரகிரகணமும் தோன்றும்.

அந்த வகையில் நாளை சந்திரகிரகணம் நிகழ இருக்கிறது. நாளை பௌர்ணமி மாலை 5.52 மணிக்கு உள்ளது. இந்த நேரத்தில் சந்திரன் கேதுவுடன் இணைந்து இருக்கிறார். ராகுவோடு சூரியன், செவ்வாய், புதன் ஆகியோர் இணைந்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட கிரக சேர்க்கை மிகவும் அபூர்வமானது. சூரியன் ராகுவோடு இருக்கும் காலத்தில் கிரகணங்கள் வந்தால் அரசு, அரசாங்கம், போர் போன்ற விளைவுகள் உண்டாகும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் கடந்த பிப் 17 ம் தேதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது.
தற்போது சந்திரகிரகணம் நிகழ்கிறது. இந்தக் கிரகணம் முடிந்தபின் சூரிய கிரகணத்துக்குப் பின் தோன்றிய போர், பொருளாதாரச் சரிவு போன்ற பிரச்னைகள் பலவும் முடிவுக்கு வரும் என்பது ஜோதிடர்களின் நம்பிக்கை.
அந்த வகையில் நாளைய சந்திரகிரகணம் முக்கியத்துவம் பெறுகிறது.
நாளை பிற்பகல் 3.20 மணிக்குக் கிரகணம் ஆரம்பித்து இரவு 7 மணி 53 நிமிடம் வரை நிகழும். இந்தக் கிரகணம் இந்தியாவில் தெரியும். எனவே நம்மால் மாலை வேளையில் ஆறு மணிக்கு மேல் இந்தக் கிரகணத்தைக் காணமுடியும். கிரகணம் தெரியும் என்பதால் அதற்குரிய சடங்குகளைச் சொல்கிறது சாஸ்திரம்.
பொதுவாக கிரகணக் காலத்தில் முன்னோர் வழிபாடு செய்ய வேண்டியது அவசியம். சூரிய கிரகணமாக இருந்தால் கிரகணம் பிடிக்கும் வேளையில் தர்ப்பணம் செய்ய வேண்டும். சந்திர கிரகணம் என்றால் கிரகணம் விடும் வேளையில் குறிப்பாக பௌர்ணமி முடியும் நேரமான 5.52 மணிக்குப் பிறகு செய்ய வேண்டும்.
கிரகணம் பூர நட்சத்திரத்தில் நிகழ்வதால் பரணி, பூரம், பூராடம், மகம், உத்திரம் ஆகிய நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்துகொள்ள வேண்டும். அதாவது கிரகணம் முடிந்ததும் குளித்து திருநீறு பூசி அருகில் இருக்கும் ஆலயம் சென்று வழிபாடு செய்ய வேண்டும்.
மேலும் ஏதேனும் தானம் கொடுப்பதும் அவசியம். பொதுவாக தானம் யாருக்குக் கொடுக்க வேண்டும் என்ன கொடுக்க வேண்டும் என்கிற கேள்வி பலருக்கும் உள்ளது.

கிரகணக் காலத்தில் தானம் கொடுப்பதுதான் மிகவும் முக்கியம். இல்லாதவர்களுக்கு நீங்கள் எது கொடுத்தாலும் அது தானமாகக் கருதப்படும். குறிப்பாக ஆடைகள், பணம் என ஏழைகளுக்குத் தானம் செய்யப் பன்மடங்கு நற்பலன் பெறுகும். அருகில் இருக்கும் ஆலயத்துக்கு தானியங்கள், மட்டைத்தேங்காய் ஆகியன தானம் செய்தால் மிகுந்த நற்பலன் உண்டாகும்.
கிரகண வேளையில் மந்திர ஜபம் செய்வது விசேஷம். ஒருமுறை மந்திரம் ஜபித்தால் பல ஆயிரம் முறை ஜபித்த பலன் கிடைக்கும். மந்திரம் ஸித்தியாகும். மந்திர உபதேசம் பெறவும் இந்தக் கிரகண காலம் உகந்தது.
கிரகண வேளையில் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும் ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்துகொண்டும் இருப்பது சிறப்பு.
கிரகணக் காலத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
இந்த்ரோ (அ )நலோ தண்டத ரஸ்ச ருக்ஷ :
பாசாயுதோ வாயு குபே ர ஈஸா:
குர்வந்து ஸர்வே மம ஜன்மர்க்ஷ ராஸிஸ்த்த
சந்த்ர க்ரஹ தோஷ சாந்திம்

இந்த ஸ்லோகத்தை ஒரு காகிதத்தில் எழுதி கையில் வைத்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் மூன்று முறை இதைச் சொல்ல வேண்டும். எட்டு திசைகளையும் ஆளும் தெய்வங்களைப் போற்றும் இந்த ஸ்லோகத்தைச் சொன்னால் நமக்கு கிரகதோஷங்கள் உண்டாகாது என்பது நம்பிக்கை.




















