ஸ்டாலின்: முதல் தேர்தலிலே தோல்வி... தோற்ற தொகுதியிலே வென்றது எப்படி? | முதல் களம...
``காங்கிரஸ், திமுகவை 'கோ-பேக்' சொல்லி திருப்பி அனுப்புங்கள்!" – புதுச்சேரியில் சீறிய பிரதமர் மோடி
புதுச்சேரிக்கு நேற்று வருகை தந்த பிரதமர் மோடி ரூ.2,714 கோடிக்கு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது, ``சகோதர சகோதரிகளே… புதுச்சேரியில் உங்கள் முன் நிற்பது பெருமையாக இருக்கின்றது. இது சித்தர்கள், துறவிகள், கவிஞர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தேசியவாதத்தின் பெரு நெருப்பை புதுச்சேரியில்தான் துவக்கி வைத்தார். இதற்கு முன்பு நான் புதுச்சேரிக்கு வந்தபோது, `பெஸ்ட் புதுச்சேரி' என்ற தாரக மந்திரத்தை உச்சரித்தேன்.
வணிகம், கல்வி, ஆன்மிகம், சுற்றுலா என அனைத்தையும் ஒன்றாக்கி புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக்குவோம் என்று உறுதியளித்தோம். இந்த நான்கரை ஆண்டுகளில் அந்த தொலைநோக்குப் பார்வை நன்றாக வளர்ச்சியடைந்து இருக்கிறது.
மத்திய அரசும், மாநில அரசும் ஒன்றாக சேர்த்து செயல்பட்டால் எப்படியான வளர்ச்சி இருக்கும் என்பதற்கு புதுச்சேரி உதாரணமாக இருக்கின்றது. அதனால்தான் இங்கு முடிவுகள் அனைத்தும் வேகமாகவும், சிறப்பாகவும் எடுக்கப்படுகின்றது.
தனிநபர் வருமானத்தில் பெரிய வளர்ச்சியை புதுச்சேரி கண்டு இருக்கின்றது. அதிலும் நாட்டிலேயே சமூக குறியீட்டு மதிப்பெண்ணில் புதுச்சேரி முன்னேறிக்கொண்டு இருக்கின்றது. இந்த இரட்டை இன்ஜின் பொருத்தப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி, புதுச்சேரியின் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகத்தை கொடுக்கும்.
புதிய வேகம் எடுக்கும். இதுவரைக்கும் மாநிலங்களுக்கு மட்டுமே கிடைத்துக் கொண்டு இருந்த மூலதன முதலீட்டு சிறப்பு உதவி திட்டத்தில், இப்போது புதுச்சேரியையும் இணைத்துள்ளோம். இதனால் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மிகப்பெரிய பலன்கள் இருக்கிறது.
உட்கட்டமைப்பு நிதி அதிகமாக கிடைக்க இருப்பதால், புதுச்சேரிக்கு சிறந்த சாலைகள், சிறந்த நீர்வளம், கடலோர உட்கட்டமைப்பு, பள்ளிகள், மருத்துவமனை என்று பல புதிய திட்டங்கள் கிடைக்க இருக்கின்றது. இந்த அடிப்படை வசதிகள் எல்லாம் நேரடியாக புதுச்சேரியின் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்.
கிழக்கு கடற்கரை சாலை ஜி.எஸ்.டி., ரோடு மேம்படுத்தப்பட்ட பணிகள் எல்லாம் சென்னைக்கான சாலை இணைப்பை மிக எளிதாக்குகிறது. இனிமேல் புதுச்சேரிக்கும், சென்னைக்கும் இடையிலான பயண நேரம் ஒன்றரை அல்லது 2 மணி நேரம்தான். அதற்குள்ளாகவே நீங்கள் போக முடியும்.
இரட்டை இன்ஜின் அரசு செய்யும் நல்ல திட்ட பணிகளையெல்லாம் நீங்கள் கொண்டாடுவது முக்கியம். அதை விட முக்கியம் முந்தைய ஆட்சியில் பல விஷயங்கள் எப்படி மோசமாக இருந்தது என்பதையும் நீங்கள் கண்டிப்பாக நினைத்துப் பார்க்க வேண்டும்.
காங்கிரஸ் - தி.மு.க ஆட்சியில் புதுச்சேரி மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டனர் என்பதை யோசிக்க வேண்டும். அப்போது அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லை. ஊழல்கள் பெருகி, குற்றங்கள் அதிகமாகி மக்கள் துன்பப்பட்டனர். அந்த கடினமான காலத்தை நாம் மறந்து விடக்கூடாது. ரேஷன் கடைகளில் அரிசி இல்லை. சம்பளம் போடவில்லை.
சம்பளம் காலதாமதமாக வழங்கப்பட்டன. குண்டர்களும் போதைப்பொருள் மாஃபியாக்களும் அச்சம் இல்லாமல் தெருவில் நடமாடிய மோசமான காலம் அது. காங்கிரஸ் கட்சி புதுச்சேரியை ஏ.டி.எம் இயந்திரத்தைப் போன்று மாற்றி வைத்திருந்தது.
அதனை காங்கிரஸ் கட்சியின் டெல்லி குடும்பம் இயக்கியது. புதுச்சேரியின் வளர்ச்சியை தடுக்கும் வேகத்தடைகளாக காங்கிரஸும், தி.மு.க-வும் இருந்திருக்கின்றனர். தமிழ்நாட்டிலும் இதே நிலைதான். அந்த சக்திகள்தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று துடிக்கின்றது. அவர்களை `கோ–பேக்' என்று திருப்பி அனுப்புங்கள்" என்றார்.














