`பதிவிடுவது பயனல்ல, அதை அச்சில் எழுத்தாக்க வேண்டும்!'- சென்னை புத்தகக் காட்சியி...
பராசக்தி விமர்சனம்: மொழிப் போர் பின்னணியில் ஒரு கமெர்ஷியல் சினிமா; வென்றதா இந்த புறநானூற்றுப் படை?
1959-ம் ஆண்டு ரயில்வே பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு முழுக்க முழுக்க இந்தி மொழியிலேயே நாடு முழுவதும் வெளியிடப்படுகிறது. இந்த இந்தித் திணிப்புக்கு எதிராக செழியன் (சிவகார்த்திகேயன்) தலைமையில் இந்தி பேசாத பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களை உள்ளடக்கிய புறநானூற்றுப் படை களமிறங்கி, ரயிலைக் கொளுத்துகிறது. இந்த ரயிலெரிப்புப் போராட்டத்தில் நடந்த சண்டையில் தன் விரலை இழந்து, அரசாங்கத்திடம் கெட்ட பெயரையும் சம்பாதிக்கிறார் மத்திய அதிகாரியான திரு (ரவி மோகன்). எதிர்பாராத சம்பவத்தினால், தன் போராட்டப் பாதையிலிருந்து விலகி, தன் தம்பி சின்னதுரை (அதர்வா) மற்றும் பாட்டியுடன் (குலப்புள்ளி லீலா) அமைதியான வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார் செழியன்.
இந்நிலையில், 1964-ம் ஆண்டு, மீண்டும் இந்தித் திணிப்பு தலையெடுக்க, அதற்கு எதிராகக் கல்லூரி மாணவர் சின்னதுரை தலைமையிலான மாணவர்கள் களமிறங்குகிறார்கள். மறுபுறம், திருவும் புறநானூறு படையை நெருங்கி, செழியனை நோக்கி வர, அதற்கடுத்து நடக்கும் அரசியல் சம்பவங்களையும், அதனால் செழியன் குடும்பம் சந்திக்கும் பிரச்னைகளையும் பேசுகிறது சுதா கொங்கரா இயக்கியுள்ள 'பராசக்தி' திரைப்படம்.
அதிகாரத்திற்கு எதிரான இளைஞனின் ஆக்ரோஷம், தம்பி மீதான மாசற்ற பாசம், அடக்குமுறைக்கு எதிரான நெஞ்சுரம் எனத் தன் கண்களில் தீயைப் பரவவிட்டு, செழியன் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன். புறநானூறு குழுவைப் பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோள், தன் தேசபக்தியை நிரூபிக்க வேண்டும் என்ற அழுத்தம் என, எந்நேரமும் வெறியுடனேயே உலாவும் கதாபாத்திரத்தில் தன் வழக்கமான உடல்மொழியை விட்டு வில்லனிசம் காட்டியிருக்கிறார் ரவி மோகன். ஆனால் இந்த டெரர் முகம் சில இடங்களில் மட்டும் செயற்கையாகிப் போவது உறுத்தல்.

காதல், செல்லக் கோபம் என வழக்கமான கதாநாயகியாகத் தொடக்கத்தில் வலம் வந்தாலும், வெகுண்டெழும் கோபம், ஆக்ரோஷம் என இரண்டாம் பாதியில் எமோஷன் மீட்டரைப் பிடித்திருக்கிறார் ஸ்ரீலீலா. கோபக்கார மாணவனாகத் தேவையான இடங்களில் வெடித்துச் சிதறியிருக்கிறார் அதர்வா. பாட்டியாக குலப்புள்ளி லீலா, முதலமைச்சராக பிரகாஷ் பெலவாடி, பேரறிஞர் அண்ணாவாக சேத்தன், கௌரவத் தோற்றத்தில் சர்ப்ரைஸ் தரும் நடிகர்கள் ஆகியோர் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.
இரவு நேரப் போராட்டம், ரயில் சண்டைகள், போராட்டங்களுக்கு இடையிலான எமோஷன் என ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரனின் ஒளித் தோரணை படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறது. கட்-களை மீறியோடும் காதல் காட்சிகளையும், பாடல்களையும் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா. ஆனால் பதற்றம் ஏற்படுத்தும் இடங்களை இன்னும் கூராக்கியிருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில், 'நமக்கான காலம்', 'ரதன்மாலா', 'சேனைக் கூட்டம்' பாடல்கள் உற்சாகமூட்டுகின்றன. பரபரக் காட்சிகளுக்கும், எமோஷன் காட்சிகளுக்கும் கரியை அள்ளிப் போட்டு, அனலைக் கூட்டியிருக்கிறது அவரின் பின்னணி இசை.

அக்கால ரயில் நிலையங்கள், ரயில்கள், அரசுக் கட்டடங்கள், மாப்பிள்ளை விநாயகர் சோடா, சினிமா போஸ்டர்கள் என எம். ஆர். கார்த்திக் ராஜ்குமாரின் கலை உழைப்பு கவனிக்க வைத்தாலும், சில காட்சிகளில் நாடகத்தனமும், ஆண்டு குழப்பத்தைத் தரும் விவரிப்புகளும் தொந்தரவாகவும் அமைந்திருக்கின்றன. சண்டைக்காட்சிகளில் வரும் மேம்போக்கான வரைகலையும் அக்காட்சிகளின் வீரியத்தைப் பின்னிழுக்கிறது.
ரயில் எரிப்பு போராட்டத்தோடு தொடங்கும் திரைக்கதை, பரபரத் தீயைப் பற்ற வைக்கிறது. ஆனால், சிறிது நேரத்திலேயே காதல் அத்தியாயத்திற்குள் நுழைந்துவிடுகிறது படம். வழக்கமான காதல் சடுகுடு, முட்டல் மோதல், காதல் பாடல்கள் என நீட்டி முழக்குகிறது திரை நேரம். இடையிடையே அரசியல் வசனங்களும், ஆக்ரோஷமான காட்சிகளும் மையக்கதையை பேசினாலும், காதல் காற்று, அந்தப் பரபர தீயை அணைக்க முயல்கிறது. ஒருவழியாக, ஒரு மணி நேரம் கழித்து பிரதான கதாபாத்திரங்களின் உணர்வுபூர்வமான திருப்பங்கள், மனமாற்றங்களைப் பேசத் தொடங்கும் படம், அட்டகாசமான ஆக்ஷன் காட்சியால் கச்சிதமான இடைவேளையையும் தருகிறது. அது இந்த முதல் பாதி அலுப்பைக் கொஞ்சம் சரி செய்ய முயன்றிருக்கிறது.

இரண்டாம் பாதி விறுவிறு ட்ராக்கிற்கு மாறும் திரைக்கதை, கூர்மையான வசனங்கள், நிஜ தலைவர்களைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள், வரலாற்றுச் சம்பவங்களை ஒத்த காட்சிகள் எனத் தீவிரத்தன்மைக்கு மாறுகிறது. போராட்டங்களை வகுக்கும் முறை, அக்கால அரசின் திட்டங்கள் போன்றவை சுவாரஸ்யம் கூட்டி ரசிக்க வைக்கின்றன. இந்தி திணிக்கப்பட்டபோது பிராந்திய மொழி பேசியவர்கள் சந்தித்த இன்னல்கள், கல்லூரி மாணவர்களின் வீரியமான போராட்டங்கள் போன்றவை காட்சியோட்டத்தோடு வந்து போகின்றன. இதற்கு சுதா கொங்காரா, அர்ஜுன் நடேசன், கணேஷா, ஷான் கருப்புசாமி, மதன் கார்க்கி ஆகியோர் அடங்கிய எழுத்துக்கூட்டணி கைகொடுத்திருக்கிறது. ஆனால், யூகிக்கும் படியான திருப்பங்களும், கதாநாயகனின் நம்பகத்தன்மை இல்லாத ஹீரோயிஸமும் தீவிரத் திரியை இறக்கியே எரியவிடுகின்றன.
இந்தி எதிர்ப்பு - இந்தித் திணிப்பு வித்தியாசம், மொழி அலுவல் ரீதியாகவும் அதைத்தொடர்ந்து கலாசார ரீதியாகவும் திணிக்கப்படும் முறை, அனைத்து மொழிகளையும் உள்ளடக்கிய ஒருமைப்பாடு, மொழி பன்மைத்துவம் என மொழி அரசியலின் பல அடுக்குகளைப் பேசுகின்றன சுட்டெரிக்கும் வசனங்கள். ஆனால், அரசியல் கொள்கைகள், அதைப் பேசிய தலைவர்கள், அதற்காகப் போராடிய இயக்கங்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள் போன்றவற்றின் பங்களிப்புகள், அரசியல் ரீதியாக மக்கள் போராட்டங்களின் ஒன்றிணைந்தது போன்றவை இலைமறைகாயாக ஆங்காங்கே மட்டும் தலைகாட்டுகின்றன. அவை வசனங்களிலும், காட்சிகளிலும் மிஸ்ஸிங்! இதனால், மாணவர்களின் சில தன்னெழுச்சிப் போராட்டங்கள் அதீத வன்முறைக் காட்சிகளாக மட்டுமே நிற்கின்றன.

அறிஞர் அண்ணாவிடம் பேனாவைப் பரிசாக வாங்கியதோடு மட்டுமல்லாமல், 'அண்ணா... அண்ணா..' என அவரை நினைவூட்டியபடியே பேசும் கதாபாத்திரம், அறிஞர் அண்ணாவின் அரசியலைப் பற்றி துளிகூட பேசாதது ஏனோ?! மொழி உரிமைக்காக நிகழ்ந்த மாபெரும் மாணவப் புரட்சிப் போராட்டத்தை 'ஹீரோ - வில்லன்' சண்டையாக மாற்றி, அதற்கு மட்டும் முக்கியத்துவம் அளித்தது உறுத்தலே!
ஆக்ஷன், எமோஷன் என மாறி, மாறி இறுதிக்காட்சி நீண்டாலும், கமெர்ஷியலாக கச்சிதமாக முடிகிறது படம். கதாநாயகனின் அதீத ஹீரோயிஸம், லாஜிக்கில்லாத சண்டைக்காட்சிகள், நம்பகத்தன்மையில்லாத இறுதித் திருப்பம் போன்றவை கச்சிதத்தைக் கலைக்க முயன்றாலும், கௌரவக் கதாபாத்திரங்களில் தலைகாட்டும் நடிகர்களின் ஆவேசம், மனதைக் கனக்க வைக்கும் எமோஷன் காட்சிகள், சுவாரஸ்ய ட்விஸ்ட்கள் என ஏனையவை கைகொடுக்க, கச்சிதமான க்ளைமேக்ஸாக க்ளாப்ஸ் வாங்குகிறது படம்.
நிஜ வரலாறும், புனைவும் ஒட்டாத உணர்வினைக் கொடுத்தாலும், ஆக்ரோஷமான மொழி அரசியல், ஆழமான குடும்ப எமோஷன் என இரண்டு பெட்டிகளையும் நேர்த்தியாக கமெர்ஷியல் ட்ராக்கில் ஓட்டி இலக்கை அடைந்திருக்கிறது இந்தப் `பராசக்தி'.
















