TVK : ஸ்கெட்ச் போடும் தவெக; ஆழ்ந்த யோசனையில் செங்கோட்டையன்? விஜய்யுடன் இணைகிறாரா...
`பிரதமர் மோடியை அன்று கடுமையாக எதிர்த்தவர், இன்று ஆதரிப்பது ஏன்?’ - பி.ஆர் பாண்டியன் எக்ஸ்க்ளூஸிவ்
`பிரதமர் நரேந்திர மோடியுடன் மேடையில் இருப்பதை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் விரும்பவில்லை. கோவை இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் மு.க ஸ்டாலினை அழைக்க முயற்சி செய்த போதும், தமிழக அரசிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை’ என அனைத்து விவசாய சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன் வெளியிட்டுள்ளார். அவருடன் விகடன் சார்பில் பிரத்தியேக நேர்காணல் செய்யப்பட்டது. இனி கேள்விகளும் அவரின் பதில்களும்...!
``கோவையில் நடைபெற்ற இயற்கை விவசாயிகள் மாநாட்டில் மேடையிலேயே பிரதமர் நரேந்திர மோடி உங்களை புகழ்ந்து பாராட்டினார். அவர் உங்களிடம் என்ன கூறினார்?”
``பிரதமருடைய தமிழக வருகை விவசாயிகள் மத்தியில் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிற்கு இயற்கை விவசாயம் குறித்த திட்டங்களை பிரதமரிடம் நாங்கள் எடுத்துரைத்தோம். அரசியல் ரீதியிலாக கொள்கை ரீதியிலாக பல்வேறு மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் கூட, அவரை நாட்டின் பிரதமர் என்ற அடிப்படையில் அவரை அழைத்து பேசுவதற்கும், எங்களுடைய கோரிக்கைகளை எடுத்துரைப்பதற்கும் அந்த மேடையை நாங்கள் பயன்படுத்தினோம்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு பிரதமரை அழைத்து இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்த விவசாயிகளுக்கு முழு உரிமை இருக்கிறது. பிரதமரும் அந்த மேடையை அரசியல் மேடையாக பயன்படுத்தாமல் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான மேடையாகவே பயன்படுத்தினார். அது எங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது. பிரதமருடைய இந்த பேச்சு ஒட்டுமொத்தமாக விவசாயத்தை இயற்கை விவசாயமாக மாற்றி விட முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஒவ்வொரு விவசாயியும் குறைந்தபட்சம் ஒரு ஏக்கரில் ஆவது இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தி இருக்கிறார். மேடை அலங்காரத்திற்காக எதையும் அவர் பேசாமல் எது வாய்ப்பு இருக்கிறதோ அதை அவர் பேசியுள்ளார்.”

``பிரதமர் பேசியதற்கு பிறகு உடனடியான மாற்றங்கள் எதுவும் தென்பட்டிருக்கிறதா?”
``இரண்டு தினங்களுக்கு முன்பு மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சௌஹான் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதன்படி மேற்கு தொடர்ச்சி மலைகளில் மலையடிவார கிராமங்களில் வசிக்கக்கூடிய நபர்கள் வனவிலங்குகளால் தாக்கப்பட்டாலோ கொல்லப்பட்டாலோ அதற்கு பிரதமர் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்குவதை உறுதி செய்து இருக்கிறார். மேலும் வனவிலங்குகளால் பயிர்கள் சேதம் அடைந்தால் அதற்கான இழப்பீடுகளை வழங்குவதற்கான அரசாணையும் வெளியிட்டு இருக்கிறார். மாநாடு முடிந்த உடனேயே எங்களது கோரிக்கைகளில் ஒன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதனால் எதிர்காலத்தில் எங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.”
``பிரதமரின் இந்த வருகை அரசியல் சார்புடையது அல்ல என நீங்கள் சொன்னாலும், பிரதமரின் வருகையை ஒட்டி தமிழ்நாட்டில் ஏராளமான அரசியல் நிகழ்வுகள் நடந்து வருகிறது. குறிப்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார கருத்து மோதல்கள் ஏற்பட்டு இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது பிரதமரின் இந்த வருகை அரசியல் ரீதியில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என நீங்கள் நினைக்கிறீர்கள்?”
``சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் நாங்கள் இந்த மாநாட்டை நடத்தவில்லை. நாங்கள் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே இந்த மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாட்டில் தீவிரமாக இருக்கிறோம். ஆகஸ்ட் மாதமே இதை நடத்துவதாக இருந்தோம். ஆனால் கால சூழல் சேராததால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு கொண்டே இருந்தது.
எனவே நாங்கள் இதை அரசியல் கண்ணோட்டத்துடன் அணுகவில்லை. பிரதமர் கலந்து கொள்ள இருந்து அரங்கில் 3000 விவசாயிகளை அமர வைக்க திட்டமிட்டு இருந்தோம். அத்தனை பேர் வருவார்களா என்ற சந்தேகமும் எங்களுக்கு இருந்தது. ஆனால் 5000 விவசாயிகள் வந்திருந்தார்கள். நாங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட கட்சியையும் இதற்காக அழைக்கவில்லை. ஒட்டு மொத்தமாக அரசியல் கலப்பில்லாமல் இதை செய்தோம் . உலகளாவிய அளவில் வலிமையான தலைவர் பிரதமர் என்பதால் அவரை வைத்து இப்படி ஒரு மாநாட்டை நடத்தினால் அது மிகச் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் இதை புரிந்து கொள்ளாமல் சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இதை அணுகுகிறார்கள். காரணம் பிரதமருடைய வருகை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.”

``நெல்லுக்கான ஈரப்பதத்தை உயர்த்த மத்திய அரசு சமீபத்தில் மறுப்பு தெரிவித்து இருக்கிறது. அதே நேரத்தில் பிரதமர் மோடி கோவை மாநாட்டிற்கு வந்திருக்கிறார். எனவே பிரதமர் மோடியின் வருகை வாக்கு வங்கியை குறிவைத்து தானே தவிர விவசாயிகளின் நலன் சார்ந்தது அல்ல என்ற விமர்சனங்கள் திமுக தரப்பிலிருந்து முன்வைக்கப்படுகிறது இதை எப்படி பார்க்கிறீர்கள்?”
``குருவை நெல் கொள்முதல் என்பது செப்டம்பர் மாதம் முதல் தொடங்கி அம்மாத இறுதியில் பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டது. அக்டோபர் 15ஆம் தேதி வரை பருவமழை தொடங்கவில்லை. நன்றாக வெயில் அடித்துக் கொண்டிருந்தது. ஆனால் அதுவரையிலும் கூட நெல் கொள்முதலை அரசு முறையாக செய்யவில்லை. அதனால் தான் மழையில் நெல் மூட்டைகள் நனைந்தன. ஆனால் ஆரம்பத்தில் இவர்கள் `நெல் மூட்டைகள் நனையவில்லை’ என சொன்னார்கள் அதை எதிர்த்து நாங்கள் செய்த போராட்டங்களை கொச்சைப்படுத்தினார்கள். ஆனால் நெல் நனையவில்லை என சொன்ன இவர்கள் தற்பொழுது ஈரப்பதத்தை அதிகரித்து மத்திய அரசு வழங்கவில்லை என சொல்கிறார்கள். ஆனால் மத்திய அரசு ஏன் மறுத்தது என்பதை அரசு இன்னும் தெளிவாக சொல்லவில்லை. அதை முதல்வர் மு.க ஸ்டாலின் தெரியப்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் டெல்லி சென்று அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.”
``விவசாயிகள் பிரச்னையில் மத்திய மாநில அரசுகள் இடையே தொடர்ந்து சச்சரவு நீடிக்கும் நிலையில், கோவையில் நடந்த இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினையும் ஒரே மேடையில் கொண்டு வந்திருந்தால் பிரச்சனைகள் ஓரளவுக்கு சுமுகமாக முடிந்திருக்குமே. அதற்கான முயற்சிகள் எதையும் எடுத்தீர்களா?”
``இந்த மாநாடு தென்னிந்திய அளவில் நடைபெற்ற மாநாடு. ஒரு மாநில முதல்வரை அழைத்து இன்னொரு மாநில முதல்வரை அழைக்கவில்லை என்றால் அது நன்றாக இருந்திருக்காது. இருந்தாலும் கூட தமிழ்நாடு முதல்வரிடம் இதற்கான அனுமதி என்பது கேட்கப்பட்டது. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சகம் இது தொடர்பாக எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை.”

``விவசாயிகள் சங்கம் நடத்தும் நிகழ்ச்சி என்பதால் மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் மறுப்பு தெரிவித்தாரா அல்லது பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்வு என்பதால் மறுப்பு தெரிவித்தாரா?”
``நாங்கள் கடந்த ஜனவரியில் இருந்து இதற்கான தயாரிப்பு பணிகளில் இருந்தோம். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே தமிழ்நாடு அரசு எங்களுடன் இதில் சுமூகமாக நடந்து கொள்ளவில்லை. அதை நாங்கள் ஆரம்பத்திலேயே தெளிவாக உணர்ந்து கொண்டோம். பிரதமர் கலந்து கொள்ளும் மாநாட்டில் தான் கலந்து கொள்ள முதல்வருக்கு மனம் இல்லையோ என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது. ஆனால் இயற்கை விவசாயம் சார்ந்த விவகாரங்களில் கொள்கை முடிவை பிரதமர் தான் எடுக்க முடியும் என்பதால், அவரது தலைமையில் மாநாட்டை நடத்தினோம். ஆனால் இதில் எந்த அரசியலும் கிடையாது. திமுக பார்வையில் இது அரசியலாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அப்படி கிடையாது. இதை அரசியல் ஆக்க முயற்சிப்பது தவறு.”
``பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தவிர்ப்பதாக தொடர் விமர்சனங்கள் வருகிறது அதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?”
``பிரதமர் என்பவரோ முதல்வர் என்பவரோ அரசியலுக்கு அப்பாற்பட்ட பதவியில் இருப்பவர்கள். நாடு தழுவிய அளவில் கொள்கை முடிவுகளை எடுப்பவர் பிரதமர். மாநில அளவில் முக்கிய முடிவுகளை எடுப்பவர்கள் மாநில முதல்வர்கள். எனவே இவர்கள் இணக்கமாக செயல்பட்டு, பிரதமர் ஒரு மாநிலத்திற்கு வரும் பொழுது அந்த மாநில முதல்வர் அவரை சந்தித்து பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பது மிகவும் அவசியமான ஒன்று. ஆனால் சமீப காலமாக அந்த கலாச்சாரம் பின்பற்றப்படாமல் இருக்கிறது. இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பின்னடைவை ஏற்படுத்தும் நிலை இருக்கிறது. கொள்கைய அளவில் எதிர்ப்பது என்பது முக்கியம்தான். ஆனால் நிர்வாக ரீதியில் அந்த எதிர்ப்பை காட்டக்கூடாது. ஒருவேளை பிரதமரை தமிழ்நாடு முதல்வர் சந்திக்க முயற்சித்து அதற்கு பிரதமர் அலுவலகம் அனுமதி தரவில்லையா என்பதை தமிழ்நாடு முதல்வர் தான் விளக்க வேண்டும்.”

``மூன்று வேளாண் சட்டம் தொடங்கி பல்வேறு தருணங்களில் பிரதமர் மோடியை கடுமையாக எதிர்த்தவர் பி.ஆர் பாண்டியன். ஆனால் தற்பொழுது பிரதமரை ஆதரிப்பதன் பின்னணி என்ன? இதில் அரசியல் உள் நோக்கம் இருப்பதாக விமர்சனங்கள் எழுகின்றதே?”
``தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் பேரழிவு திட்டத்தை 2011ல் கொண்டு வந்தது திமுக தலைமையிலான அரசு. பின்னர் அதன் பாதிப்புகளை தெரியாமல் நாங்கள் அனுமதி கொடுத்து விட்டோம் என விவசாய சங்கங்களான எங்களுடன் சேர்ந்து அதை எதிர்த்ததும் திமுக தான். எங்களுடைய போராட்டங்களில் அப்போதைய முதல்வர் கருணாநிதியும் கலந்து கொண்டார். இன்னும் சொல்லப்போனால் மூன்று வேளாண் சட்டங்கள் என்பது தோகா மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு நடந்த முரசொலி மாறன் நினைவு நிகழ்ச்சியில் கூட தோகா மாநாட்டின் முடிவுகள் சிறப்பு வாய்ந்தது என முதல்வர் மு.க ஸ்டாலினே குறிப்பிட்டு இருக்கிறார். 50 ஆண்டுகால காவேரி பிரச்னை இன்னமும் கூட முடியவில்லை. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வந்ததற்கு பிறகும் கூட திமுக காங்கிரஸ் கூட்டணி அரசுகள் அதை அரசுதலில் வெளியிடாமல் இருந்தார்கள். பிறகு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதுதான் உச்ச நீதிமன்றத்தை நாடி அதை பெற்றுக் கொடுத்தார். இப்படி திமுகவின் செயல்பாடுகளையும் நிறைய சொல்ல முடியும்.
எனவே அதுபோல தான் வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானதாக இருக்கிறது என தெரிந்து நாங்கள் பிரதமரை எதிர்த்தோம். ஆனால் பிரதமரை அழைத்து மாநாட்டை நடத்தினோம் என்பதற்காகவே வேண்டும் என்று வேண்டுமென்றே என் மீது அவதூறுகள் பரப்பப்படுகிறது. நான் மேடையிலேயே கூட சில விஷயங்களை போராடி தான் அரசுகளிடம் இருந்து பெற வேண்டி இருக்கிறது என பேசினேன் பிரதமர் இருக்கக்கூடிய ஒரு மேடையில் இதுவரை யாரும் இவ்வளவு வெளிப்படையாக பேசியதே கிடையாது. ஆனால் அதையும் கூட நான் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன் என்று தான் பிரதமர் பேசினார்.”
``இயற்கை வேளாண் விவசாயி நம்மாழ்வார் அவர்களுக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என்ற குரல்களும் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. பாரத ரத்னா விருதை அரசியல் கருவியாக பாஜக பயன்படுத்துகிறது என்ற விமர்சனங்களை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிப்படையாக முன் வைக்கும் நிலையில் இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?”
``கொரோனா காலத்தில் எனது உயிரைக் காப்பாற்றியது இயற்கை விவசாய உணவுகள் தான் என பிரிட்டன் பிரதமரை ஒருமுறை தெரிவித்து இருக்கிறார். அவர் இந்திய விவசாயிகளுக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார். அந்த வகையில் நஞ்சில்லா உணவு மண் மலட்டுத்தன்மை அடையாமல் இருப்பதை தடுப்பது போன்ற பல்வேறு விஷயங்களில் பெரும் புரட்சி செய்தவர் நம்மாழ்வார். எனவே அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் எனக் கேட்பது எங்களது உரிமை. அவருக்கு அப்படி ஒரு விருது வழங்கும் பட்சத்தில் இயற்கை விவசாயத்தை நாடு முழுவதும் பரவலாக கொண்டு செல்ல முடியும்.

உத்திரபிரதேசத்தில் முன்னாள் பிரதமர் சரண் சிங்குக்கும், பீகாரில் முன்னாள் முதல்வர் கற்பூரி தாக்கூருக்கும் , தமிழ்நாட்டில் எம்.எஸ் சுவாமிநாதன் அவர்களுக்கும் பாரத ரத்னா வழங்கப்பட்டதில் அரசியல் இருக்கிறது என முன்வைக்கப்படும் விமர்சனங்களை நான் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் எங்களுடைய பார்வையில் நம்மாழ்வார் அவர்களுக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் அந்த கோரிக்கையை பிரதமரிடம் நேரடியாக முன் வைத்துள்ளோம்.”
















