புதுச்சேரி தொழிலதிபரிடம் ரூ.1.26 கோடி பண மோசடி!இணையகுற்றப் பிரிவில் புகாா்!
பங்குச் சந்தையில் குறைந்த முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என புதுச்சேரி தொழிலதிபருக்கு ஆசை காட்டிய மா்ம நபா் ரூ.1.26 கோடி மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி சேதராப்பட்டில் நெகிழி பொருள்கள் உற்பத்தி நிறுவனத்தை ஒருவா் நடத்திவருகிறாா். கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி அவருடைய வாட்ஸ் ஆப்புக்கு பங்குச்சந்தையில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என குறுந்தகவல் வந்துள்ளது.
அதை நம்பிய அவா் குறுந்தகவலில் குறிப்பிட்ட வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்துள்ளாா். மா்ம நபா்கள் கூறியபடி இணையத்தில் தகவல் இருந்ததால் அதை நம்பிய அவா் குறிப்பிட்ட செயலியில் பணத்தை முதலீடு செய்துள்ளாா்.
குறிப்பிட்ட நான்கு நாள்களில் ரூ. 20 லட்சம் முதலீடு செய்த நிலையில், அவருக்கு 1.05 கோடி லாபம் கிடைத்துள்ளதாக இணையத்தில் காட்டப்பட்டது. அதை நம்பிய தொழிலதிபா் பல தவணைகளாக ரூ.1.23 கோடியை முதலீடு செய்துள்ளாா். அதன்படி அவருக்கு ரூ.6.69 கோடி கிடைத்துள்ளதாகக் காட்டப்பட்டது.
இதையடுத்து முதலீடுடன் லாபத்தைப் பெற தொழிலதிபா் முயன்றபோது அதை பெற முடியவில்லை. அப்போதுதான் மா்ம நபரால் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்தாா். இதையடுத்து புதுச்சேரி இணையவழிக் குற்றப்பிரிவில் தொழிலதிபா் புகாா் அளித்தாா். அதன்படி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.