அண்ணாமலை போட்டியிடவில்லை, அதிருப்தியில் BJP இளைஞர்கள்! | TN Election 360 updates
பென்னாகரம்: எதிர்க்கும் திமுக, காங்கிரஸ்; தீவிரம் காட்டும் பாமக; தாக்குப் பிடிப்பாரா தமிழ்குமரன்?
'கட்சியில் சேர்ந்த ஒரு வாரத்தில் வேட்பாளர் வாய்ப்பா, நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்' என்று தமிழ்குமரனுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி, திமுக-வினரும் கொந்தளிப்பது பென்னாகரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தருமபுரி மாவட்டத்திலுள்ள பென்னாகரம் தொகுதியில் தற்போது பாமக முன்னாள் தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். கடந்த காலங்களில் இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக அவர் இருந்திருந்தாலும், பாமக இரண்டாகப் பிளவுபட்டுள்ளதால் ராமதாஸ் அணி சார்பில் தற்போது போட்டியிட தயங்கி வந்தார்.
பல்வேறு கட்சிகள் இத்தொகுதியில் வெற்றி பெற்றிருந்தாலும் திமுக-வும் பலமுறை வெற்றி பெற்றுள்ளது. 2016 சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்துக்கொண்டு போட்டியிட்ட அன்புமணி ராமதாசை திமுக வேட்பாளர் இன்பசேகரன் தோல்வி அடைய வைத்த வரலாறெல்லாம் உண்டு.

2021 தேர்தலில் ஜி.ஜே.மணிக்கு எதிராகப் போட்டியிட்டு 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில், தற்போதைய தேர்தலில் இத்தொகுதி திமுக சார்பில் போட்டியிட இன்பசேகரன் திட்டமிட்டிருந்தார். அவருக்குத்தான் வாய்ப்பு என்று தலைமையும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தருமபுரி மாவட்ட திமுக நிர்வாகிகளின் உட்கட்சி உள்ளடியால் இத்தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. '1971-க்குப் பிறகு இங்கு போட்டியிடாததால் காங்கிரசுக்கு இங்கு ஆட்களும் இல்லை, பெரிய அளவில் மக்கள் ஆதரவும் இல்லை, அதனால் திமுக போட்டியிடுவதுதான் சரியாக இருக்கும்' என்று திமுகவினர் தலைமையைத் தொடர்ந்து வலியுறுத்தியும் கண்டுகொள்ளவில்லை' என்றனர் திமுக-வினர்.
பிரச்னை இப்படி போய்க்கொண்டிருந்த நிலையில்தான் காங்கிரஸ் வேட்பாளராக தமிழ்குமரன் அறிவிக்கப்பட்டது தொகுதியிலுள்ள திமுகவினருக்கு மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ்குமரன் பாமக முன்னாள் தலைவரும், தற்போது ராமதாஸ் அணியில் இருப்பவருமான ஜி.கே.மணியின் மகன் ஆவார். லைகா நிறுவனத்தில் செயல் இயக்குநராக இருந்துகொண்டு பாமகவில் மாநில நிர்வாகியாகவும் செயல்பட்டவர்.
திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் இருக்கும் இவர், திடீரென்று கடந்த வாரம் காங்கிரசில் இணைந்தார். இது ராமதாஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்த கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார்.
அப்போதே காங்கிரசில் இவருக்குத்தான் பென்னாகரம் ஒதுக்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டது. ''முதலில் அவர் திமுகவில் இணைந்து அதன் மூலம் பென்னாகரத்தில் போட்டியிட திட்டமிட்டார், அது கட்சிக்குள் பிரச்னையை உண்டாக்கும், காங்கிரஸில் இணைந்து தொகுதியைப் பெறுங்கள் என்று திமுகவிலிருந்த நண்பர்கள் கூறிய ஆலோசனையின் பேரில் பெரிய செலவு செய்து டெல்லித் தலைவர்களைப் பிடித்து தற்போது காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார், இதற்கு மறைமுகமாக உதவியவர் அவர் தந்தை ஜி.கே.மணிதான்'' என்று காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
''கடந்த தேர்தலில் தன் தந்தை ஜி.கே மணி வெற்றி பெறுவதற்காக சாதி ரீதியாகச் செயல்பட்டும், தொகுதி முழுக்க கரன்ஸியை இறக்கியும் செயல்பட்டவர் தமிழ்குமரன். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. இவருக்கு இப்போது எப்படி நாங்கள் வேலை செய்வோம்?'' என்று திமுக-வினர் கொந்தளிக்கிறார்கள்.
''கட்சி மாறி வந்த ஒரு வாரத்தில் பணக்காரருக்கு சீட்டா? உன்மையான கட்சிக்காரர்கள் காலத்துக்கும் போஸ்டர் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டுமா?'' என்று காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அதை உறுதிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியின் தருமபுரி முன்னாள் எம்.பியும், முன்னாள் பென்னாகரம் எம்.எல்.ஏவுமான தீர்த்தராமன் கண்டித்து அறிக்கை வெளியுட்டுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக, காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பது ஒருபக்கமென்றால், 'பாமக பிளவுபடக் காரணமான ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனைத் தோற்கடித்தே தீருவோம்'' என்று அன்புமணி ஆதரவாளர்கள் கங்கனம் கட்டிக்கொண்டு பாமக வேட்பாளர் பாடி செல்வத்துக்குத் தீவிரமாக வேலை செய்தி வருகிறார்கள்.
இவ்வளவு விமர்சனத்தையும் எதிர்ப்பையும் மீறி பென்னாகரம் தொகுதியில் பிரசாரத்தைத் தொடங்கியுள்ள தமிழ்குமரனுக்கு ஆதரவு எப்படி உள்ளது என்பது போகப் போகத் தெரிய வரும்.
















