நடிகை கடத்தல், பாலியல் தொல்லை; வீடியோ பதிவு - திலீப்-க்கு எதிரான வழக்கின் தீர்ப்...
``பொது வெளியில் நடனமாடியது இதுவே முதல் முறை!'' - மனம் திறந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த்
தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் நிறுவனரான நடிகர் விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகு அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளராக உருவெடுத்திருக்கிறார் அவரின் மனைவி பிரேமலதா.
விஜயகாந்த் வாழ்ந்த காலத்திலும் அவருடன் இணைந்து நேரடி அரசியலில் ஈடுபட்டு வந்தவர் என்றாலும், வரவிருக்கும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தன்னையும் தனது இயக்கத்தின் இருப்பை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.

இதன் வெள்ளோட்டமாகவே 'உள்ளம் தேடி, இல்லம் நாடி' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு நேற்று சென்ற அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். முன்னதாக மாவட்ட செயலாளரின் கிராமமான கோடமலை படுகர் கிராமத்திற்குச் சென்று அந்த மக்களைப் போன்றே உடையணிந்து அவர்களுடன் சேர்ந்து நடனமாடியும் மகிழ்ந்திருக்கிறார்.
இந்த அனுபவம் குறித்து தொண்டர்களுடன் பகிர்ந்த பிரேமலதா, "கேப்டனின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த கடந்த 10 ஆண்டுகளில் அவரை பராமரிப்பதிலயே முழு கவனத்தையும் செலுத்தி வந்தேன். எனக்கும் கேப்டனுக்கும் பிடித்த இடமான ஊட்டிக்கு கூட கடந்த 10 ஆண்டுகளாக வரவில்லை.

இன்னும் சொல்லப்போனால் இதுவரை பொதுவெளியில் நடனமாடியதில்லை. இதுவே முதல் முறை. படுகர் சமுதாய மக்களின் அன்பு உபசரிப்பு மற்றும் கலாச்சாரத்திற்கு மதிப்பளிக்கும் விதமாகவே அவர்களுடன் சேர்ந்து நடனமாடினேன்" என மனம் திறந்து பேசியிருக்கிறார்.



















