``திருமணம் காலாவதியான ஒன்று, அதை செய்யவேண்டாம் என்று பேத்தியிடம் கூறுவேன்'' - நட...
மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைப்பு: காணாமல் போன எதிர்க்கட்சிகள்; பாஜக-வுடன் மோதும் ஷிண்டே!
மகாராஷ்டிராவில் நாளை உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் மாநிலம் முழுவதும் உள்ள நகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. நேற்று தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. ஆனால் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், திடீரென மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் சில நகராட்சிகளில் குறிப்பிட்ட வார்டுகளில் நடைபெறவிருந்த தேர்தலை மாநில தேர்தல் அதிகாரி வேறு தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
மும்பை அருகிலுள்ள அம்பர்நாத் நகராட்சியில் கணிசமான தமிழர்கள் வசித்து வருகின்றனர். இந்த நகராட்சியில் 3 தமிழர்கள் போட்டியிடுகின்றனர். இங்கு பா.ஜ.க சார்பாக போட்டியிடும் தேஜஸ்ரீக்கு எதிராக சிவசேனா கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தது.

வேட்பு மனுக்களை திரும்ப பெறும் கடைசி நாளான நவம்பர் 25-ஆம் தேதிதான், கோர்ட் பா.ஜ.க வேட்பாளருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புகார் மனுவை தள்ளுபடி செய்தது.
இத்தகைய மேல்முறையீட்டு மனுக்களுக்கு, வேட்பு மனுவை திரும்ப பெறும் தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது போன்று நடைபெறவில்லை. எனவே அம்பர்நாத்தில் உள்ள அனைத்து வார்டுகளுக்குமான தேர்தல் வரும் 20-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அருகில் உள்ள பத்லாப்பூரிலும் இதேபோன்ற மேல்முறையீட்டு மனுக்கள் காரணமாக 6 வார்டுகளில் தேர்தல் வரும் 20-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்பே பா.ஜ.கவிற்கு தாவிய வேட்பாளர்கள்
பத்லாப்பூர் நகராட்சி தேர்தலில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா சார்பாக போட்டியிடும் 7 வேட்பாளர்களை பா.ஜ.க தேர்தலுக்கு முன்பே தங்களிடம் சேர்த்துக் கொண்டுள்ளது.
நகராட்சி தலைவருக்கான தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் ருசிதாவை ஆதரிக்கப் போவதாக அந்த 7 பேர் தெரிவித்துள்ளனர். இதனால் உத்தவ் தாக்கரே அதிர்ச்சியடைந்துள்ளார்.

பாராமதி, புர்சுங்கி–உருளி தேவாச்சி, தலேகாவ் தபாடே, லோனாவ்லா, டவுண்ட் மற்றும் சாஸ்வாத் ஆகிய பகுதிகளுக்கான தேர்தல்களும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
இங்கும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு எதிராக கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு தாமதமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அப்படியிருந்தும், தேர்தல் அதிகாரி சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுக்கு சின்னங்களை ஒதுக்கீடு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் மாநில தேர்தல் அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று சந்திராப்பூர், நாண்டெட், அமராவதி, கட்சிரோலி, அகோலா போன்ற மாவட்டங்களிலும் கணிசமான நகராட்சிகளில் சில வார்டுகளில் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி இத்தேர்தல்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் மற்றும் வேட்பாளர்களுக்கு எதிராக கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்கு நவம்பர் 22-ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். அப்படி தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தால்தான் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை திரும்ப பெற 3 நாட்கள் அவகாசம் கிடைத்திருக்கும்.
ஆனால் அதிகமான நகராட்சிகளில் 22-ஆம் தேதிக்கு முன் மனுக்கள் மீது கோர்ட் தீர்ப்பு வழங்கவில்லை; வேட்பு மனுவை திரும்ப பெறும் கடைசி நாளான 25-ஆம் தேதி வரை தான் முடிவு செய்யப்பட்டது. அதுவும் கோர்ட் உத்தரவு எழுத்துப்பூர்வமாக வழங்கப்படவில்லை.
இத்தகைய காரணங்களால் தேர்தல்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

பாஜக-வை எச்சரித்த ஷிண்டே
பா.ஜ.க கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து ஏக்நாத் ஷிண்டே அளித்த பேட்டியில், “எங்கள் கட்சி தலைவர்களை பா.ஜ.க தொடர்ந்து இழுத்து வருகிறது. நாங்கள் கூட்டணி தர்மத்தைப் பின்பற்றி வருகிறோம். இதேபோன்று பா.ஜ.கவும் நடக்கும் என எதிர்பார்க்கிறோம். கூட்டணி தர்மம் மீறப்படும்போது மோதல்கள் தவிர்க்க முடியாததாகிவிடுகின்றன” என்று குறிப்பிட்டார்.
இத்தேர்தலில் எதிர்க்கட்சிகளான மகாவிகாஷ் அகாடி தலைவர்கள் பிரசாரத்தில் பங்கேற்பதை தவிர்த்துவிட்டனர். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர் அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே ஆகியோர்தான் மாநிலம் முழுவதும் கடைசி வரை பிரசாரம் செய்தனர்.




















