'என்னை அசிங்கப்படுத்துகின்றனர்'; 'இது என் கடைசி யுத்தம்' - ராமதாஸின் '25 இடங்கள்...
மகாராஷ்டிரா தேர்தல்: அஜித் பவாருடனான பேச்சுவார்த்தை முறிவு; காங்கிரஸ் கூட்டணிக்கு வந்த சரத்பவார்
மகாராஷ்டிரா முழுவதும் இருக்கும் மாநகராட்சிகளுக்கு வரும் ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் ஆளும் பா.ஜ.க மற்றும் சிவசேனா(ஷிண்டே) கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.
அதே சமயம் இதே கூட்டணியில் இருக்கும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. எதிர்க்கட்சிக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் மும்பையில் தனித்துப் போட்டியிடுகிறது.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.
ஆனால் புனேயில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இரண்டு நாட்களாகக் குழப்பம் நிலவி வந்தது. அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.

இரண்டு நாட்கள் நடந்த பேச்சுவார்த்தையில் சரத்பவார் கட்சிக்கு 35 இடங்கள் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், அதேசமயம் அந்த வேட்பாளர்கள் தங்களது கடிகாரச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் அஜித்பவார் கறார் காட்டினார். இதையடுத்து கூட்டணி வேண்டாம் என்று சரத்பவார் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
இதையடுத்து நேற்று இரவு எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா (உத்தவ்), காங்கிரஸ் மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்துப் பேசினர். இந்தப் பேச்சுவார்த்தை நீண்ட நேரம் நீடித்தது. இதில் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி கூட்டணி புனேயில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதோடு தொகுதிப் பங்கீடு தொடர்பாகவும் மூன்று கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. புனே மட்டுமல்லாது மும்பையில் சிவசேனா(ஷிண்டே) மற்றும் பா.ஜ.க இடையே தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.
இரு கட்சித் தலைவர்களும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சிவசேனாவிற்கு 87 இடங்கள் வரை கொடுக்கத் தயாராக இருப்பதாக பா.ஜ.க தெரிவித்துள்ளது.
ஆனால் தங்களுக்கு 100க்கும் அதிகமான இடங்கள் வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே பிடிவாதம் பிடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் பா.ஜ.க தனது முடிவில் உறுதியாக இருக்கிறது. இதையடுத்து இரு கட்சித் தலைவர்களும் மீண்டும் ஒருமுறை சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளனர்.
மும்பை மட்டுமல்லாது கல்யான்-டோம்பிவலி மாநகராட்சியிலும் இரு கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு இழுபறியில் இருக்கிறது. வரும் 31ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

எதிர்க்கட்சிகள் இப்போது வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தால் ஆளும் கூட்டணிக் கட்சிகள் அந்த வேட்பாளர்களை விலைக்கு வாங்கிவிடும் என்று அச்சம் அடைந்துள்ளன. எனவே கடைசி நேரத்தில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன.
சில இடங்களில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படாவிட்டாலும் தங்களுக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.















