ஹார்முஸில் 5,000 பவுண்ட் வெடிகுண்டு: யாரும் உதவிக்கு வரவில்லை; 'தானே' களத்தில் இ...
தருமபுரி: கால்பந்தாட்ட வீரர் தற்கொலை; போக்சோ வழக்கு பதிவு செய்ததுதான் காரணமா?
போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதால் தலைமறைவான கால்பந்தாட்ட வீரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பென்னாகரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே போடூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜின் மகன் விஜி. மாவட்ட அளவில் கால்பந்தாட்ட வீரராகவும் பயிர்சியாளராகவும் செயல்பட்டு வந்தார். பல்வேறு ஊர்களில் நடக்கும் கால்பந்தாட்ட போட்டிகளுக்கு தன்னிடம் பயிற்சி பெறுபவர்களை அழைத்து சென்று வந்திருக்கிறார்.
இந்த நிலையில் பென்னாகரம் காவல் நிலையத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொடுத்த புகாரில், "என் மகனை வெளியூருக்கு விளையாடக் கூட்டிச்சென்ற விஜி, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்திருக்கிறார், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகார் கொடுக்க, விசாரணை நடத்திய காவல்துறையினர் விஜி மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

தன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்ததை அறிந்து தலைமறைவான விஜி, இரண்டு நாட்களுக்கு முன் தேன்கனிக்கோட்டை அருகே ரங்கசத்திரத்திலுள்ள ஒரு வீட்டின் பின்புற ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார்.
இதுகுறித்து தகவல் கிடைத்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் தன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்து தலைமறைவாகி பெரும் மன உளைச்சலில் இருந்த விஜி இந்த முடிவு எடுத்ததாக சொல்லப்படும் நிலையில், இவர் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


















