வட கொரியா தேர்தலில் Kim Jong Un வெற்றி; ஆனால், மக்கள் கொடுத்த 'அதிசய' ட்விஸ்ட் -...
ரீல்ஸ் விபரீதம் : சொந்த தந்தையை சாக்குமூட்டையில் கட்டி கூரியரில் அனுப்ப முயன்ற பெண் - அதிர்ச்சி!
தமிழ் சினிமாவில் ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்களை சாக்குமூட்டையில் கட்டி கூரியரில் அனுப்ப முயன்றதை பார்த்திருப்போம். அது ஒரு காமெடி காட்சி. ஆனால் நிஜத்தில் ஒரு பெண் தனது தந்தையை அதேபோன்று கூரியரியில் அனுப்ப முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒரு பெண் தனது கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என மொத்தம் 5 பேர் பெங்களூருவில் உள்ள வயலிகாவை என்ற இடத்தில் இருக்கும் கூரியர் அலுவலகத்திற்கு வந்தார். அவர்கள் ஒரு சாக்குமூட்டையை கொண்டு வந்திருந்தனர். அதனை கூரியரில் மங்களூர் அனுப்ப வேண்டும் என்று சொன்னார்கள்.
சாக்குமூட்டையில் மனிதன்
சாக்குமூட்டையில் என்ன இருக்கிறது என்று கூரியர் கம்பெனி ஊழியர்கள் கேட்டபோது எதையும் சொல்லாமல் மழுப்பினர். உடனே கூரியர் கம்பெனி ஊழியர்கள் சாக்குமூட்டையை திறந்தபோது உள்ளே ஒரு வயதான நபர் இருந்தார். அவர் அப்பெண்ணின் தந்தையாகும்.

இதனை பார்த்து கூரியர் கம்பெனி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உள்ளே இருந்த நபர் மூச்சுவிட சிரமப்பட்டுக்கொண்டிருந்தார். அப்படி இருந்தும் அப்பெண்ணும் அவருடன் வந்தவர்களும் அந்த கூரியர் பார்சலை வாங்க வேண்டும் என்று வாக்குவாதம் செய்தனர்.
அதற்கு மனிதர்களை கூரியரில் அனுப்ப முடியாது என்று கூரியர் ஊழியர்கள் தெரிவித்தனர். ஒரு மனிதரை கூரியர் மூலம் அனுப்ப இயலாது என்று ஊழியர்கள் கூறியபோது, அந்த நபர்கள் அடம்பிடித்து, நாங்கள் இவரை வேறொரு மாவட்டத்திற்கு கூரியர் செய்ய விரும்புகிறோம் என்று கூறினர். அதோடு அவர்கள் தங்களது செயலுக்காக மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக, ஒரு மனிதர் இருக்கும் பையை கூரியர் செய்யவே இயலாது என்றால், பிறகு எதற்காகவே இந்தத் தொழிலை நடத்துகிறீர்கள் என்று அவர்கள் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.
மேலும் தங்கள் நேரத்தையும் உழைப்பையும் வீணடித்துவிட்டதாகக் கூறி, அவர்கள் ஊழியர்களிடம் பணமே கேட்கும் அளவிற்குச் சென்றனர். அந்தச் சாக்குப்பையில் இருந்த மனிதருக்கு அவர்கள் குடிக்க தண்ணீர் கொடுத்தனர். அவரும் அதை அருந்தினார். பின்னர், சாக்குப்பையில் இருக்கும் இந்த மனிதரை கூரியர் செய்ய நிச்சயமாக ஒப்புக்கொள்ளும் வேறொரு நிறுவனத்தைத் தேடிச் செல்வோம் என்று கூறினர். அதற்குள் அங்கு பொதுமக்கள் கூடி இதனை வேடிக்கை பார்த்தனர். போலீஸ்காரர் ஒருவரும் அங்கு வந்தார். அவர் அவர்கள் அனைவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார்.
ரீல்ஸ் எடுக்க நடந்த நாடகம்
விசாரணையில் பஸ் கட்டணம் அதிகரித்து இருப்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வர இது போன்ற ஒரு ரீல்ஸ் எடுக்க இவ்வாறு நடந்து கொண்டதாக தெரிவித்தனர். அவர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு அவர்களை போலீஸார் அனுப்பி வைத்தனர். மங்களூருக்கு செல்ல அதிக பஸ் கட்டணம் இருப்பதால் எனது தந்தையால் பஸ்சில் பயணம் செய்ய முடியவில்லை என்று அப்பெண் தெரிவித்தார். கூரியர் ஊழியர்கள் புகார் செய்யாத காரணத்தால் இப்பிரச்னை மன்னிப்பு கேட்டுக்கொண்டதோடு கைவிடப்பட்டது.




















