ஹார்முஸில் 5,000 பவுண்ட் வெடிகுண்டு: யாரும் உதவிக்கு வரவில்லை; 'தானே' களத்தில் இ...
நேபாளத்தின் புதிய விடியல்: இளைஞர் கைகளில் ஒரு தேசத்தின் கனவு
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
இமயமலையின் சிகரங்களுக்கு இடையே அமைதியான தேசம் நேபாளம், இன்று ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தின் மையப்புள்ளியாக மாறியுள்ளது. இந்தியா மற்றும் சீனா என இரு பெரும் நாடுகளுக்கு இடையே நிலப்பரப்பால் சூழப்பட்டிருந்தாலும், நேபாளம் எப்போதும் தனது தனித்துவமான அடையாளத்தை விட்டுக் கொடுத்ததில்லை.
பல ஆண்டுகளாக மன்னராட்சி, உள்நாட்டுப் போர் மற்றும் அரசியல் குழப்பங்களில் சிக்கித் தவித்த இந்த நாடு, தற்போது 'மாற்றம்' என்ற ஒற்றைச் சொல்லின் பின்னால் அணிவகுத்து நின்று இளைஞர்களின் கைகளுக்கு அதிகாரம் நகரத் தொடங்கியிருக்கிறது.
நேபாளத்தின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், அதன் வீரமும் துணிச்சலும் நமக்குப் புரியும். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் தெற்காசியாவையே ஆக்கிரமித்திருந்த காலத்தில், தனது இறையாண்மையை விட்டுக் கொடுக்காத மிகச் சில நாடுகளில் நேபாளமும் ஒன்று. 1768-ல் மன்னர் பிரித்வி நாராயண் ஷாவால் ஒருங்கிணைக்கப்பட்ட நேபாளம், சுமார் 240 ஆண்டுகள் ஷா வம்சத்தின் ஆட்சியின் கீழ் இருந்தது.
இமயமலையின் கடினமான நிலப்பரப்பும், உலகப்புகழ் பெற்ற கூர்க்கா வீரர்களின் அசாத்திய துணிச்சலும் அந்நாட்டைப் பிற சக்திகளிடம் இருந்து பாதுகாத்தன.

இருப்பினும், நேபாளத்தின் உள்நாட்டு அரசியல் எப்போதும் சீராக இருந்ததில்லை. மன்னர்களுக்குத் தெரியாமல் 'ராணா' குடும்பத்தைச் சேர்ந்த ஜங் பகதூர் ராணா அதிகாரத்தைக் கைப்பற்றி, பல ஆண்டுகள் ராணாக்கள் நாட்டைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
1951-ல் மக்கள் நடத்திய பெரும் புரட்சி ராணாக்களின் பிடியை உடைத்து, மீண்டும் மன்னருக்கே அதிகாரம் கிடைக்கச் செய்தது. ஆனால், மக்களாட்சி மலர்வதில் தொடர்ந்து தடைகள் ஏற்பட்டன.
1960-களில் மன்னர் மகேந்திரா நாடாளுமன்றத்தைக் கலைத்து 'பஞ்சாயத்து' முறையைக் கொண்டுவந்தார். இதனால் ஜனநாயகம் என்பது நீண்ட காலத்திற்கு எட்டாக்கனியாகவே இருந்தது.
1990-களின் இறுதியில் நேபாளத்தில் ஒரு பெரிய ரத்த சரித்திரம் தொடங்கியது. மாவோயிஸ்ட் அமைப்பினர் முன்னெடுத்த ஆயுதப் போராட்டம் சுமார் பத்தாண்டுகள் நீடித்தது. இந்த உள்நாட்டுப் போரில் 17,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிர் இழந்தனர்.

நேபாளத்தின் மன்னராக இருந்த பிரேந்திரா 2001 சூன் முதல்நாளில் நடைபெற்ற அரச குடும்ப படுகொலையின் போது மன்னர் பிரேந்திரா உள்ளிட்ட பல அரச குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். அவரை தொடர்ந்து நேபாளத்தின் மன்னராக ஞானேந்திரா பதவியேற்றார், வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும், மன்னராட்சியின் மீதான அதிருப்தியும் மக்களை வீதிக்கு வரவழைத்தன. இறுதியாக 2006-ல் மக்கள் நடத்திய பிரம்மாண்ட போராட்டத்தின் விளைவாக மன்னராட்சி வீழ்த்தப்பட்டது. 2008-ல் நேபாளம் முறைப்படி ஒரு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.
குடியரசு மலர்ந்த பிறகு நேபாளம் முன்னேற்றப் பாதையில் செல்லும் என்று மக்கள் பெரிதும் நம்பினார்கள். ஆனால், பழைய அரசியல் கட்சிகளான நேபாளி காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியும், ஊழலும் மக்களின் நம்பிக்கையைச் சிதைத்தன. தலைமுறை தலைமுறையாக அதே முகங்களைப் பார்த்துச் சலித்துப் போன இளைஞர்கள், புதிய ரத்தத்தை அரசியலில் எதிர்பார்க்கத் தொடங்கினார்கள். இந்த ஏக்கத்தின் வெளிப்பாடாகத்தான் 2022-ல் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.

பாலாந்திர ஷா, சுருக்கமாக 'பாலென்' ஷா என்று அழைக்கப்படும் ஒரு இளைஞர் காத்மாண்டு மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டார். இவர் ஒரு ராப் இசைக்கலைஞர் மற்றும் சிவில் இன்ஜினியர்.
எந்தப் பெரிய அரசியல் பின்னணியும் இல்லாமல், ஒரு சுயேச்சையாகப் போட்டியிட்ட இவர், பல தசாப்தங்களாக அரசியலில் ஊறிப்போன ஜாம்பவான்களை வீழ்த்தி வெற்றி பெற்றார். அவர் மேயராகப் பதவியேற்ற பிறகு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள், குறிப்பாகச் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றியது மற்றும் குப்பை மேலாண்மையில் காட்டிய வேகம், நேபாள இளைஞர்களிடம் "நம்மாலும் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்" என்ற பெரும் தன்னம்பிக்கையை விதைத்தது.
இந்த எழுச்சி மாநகராட்சித் தேர்தலோடு நின்றுவிடவில்லை. ரபி லமிச்சானே தலைமையிலான 'ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சி' (RSP) என்ற புதிய கட்சி தேசிய அளவில் உருவெடுத்தது.
ஊழல் ஒழிப்பு, வெளிப்படையான நிர்வாகம் மற்றும் தகுதியானவர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற இவர்களது முழக்கங்கள், குறிப்பாக 'ஜென் Z' என்று அழைக்கப்படும் இன்றைய தலைமுறை இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தன. சமூக ஊடகங்கள் மூலம் இவர்கள் முன்னெடுத்த பிரசாரங்கள் பழைய அரசியல் அமைப்பையே அதிர வைத்தன.

சமீபத்தில் நேபாள அரசு சமூக ஊடகங்களுக்குத் தடை விதித்தபோது, இளைஞர்களின் கோபம் உச்சக்கட்டத்தை எட்டியது. இது வெறும் ஒரு செயலி மீதான தடைக்கான போராட்டமாக மட்டும் இல்லாமல், அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்விக்கு எதிரான இயக்கமாக மாறியது. மாணவர்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர். அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கியக் கட்டடங்களைச் சூழ்ந்தனர். மக்களின் கடும் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் பிரதமர் K.P. சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்யும் சூழல் உருவானது.
தற்போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல்கள் நேபாளத்தின் எதிர்காலத்தை இளைஞர்களே தீர்மானிப்பார்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. பழைய கட்சிகள் இன்னும் செல்வாக்குடன் இருந்தாலும், புதிய கட்சிகளின் வரவு அவர்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது. நேபாள இளைஞர்களுக்கு இன்று இருக்கும் மிகப்பெரிய கவலை பொருளாதார மந்தநிலை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம்.
போதிய வாய்ப்புகள் இல்லாததால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்கின்றனர். இந்த நிலையை மாற்றி, தாய்நாட்டிலேயே கௌரவமான வாழ்வாதாரத்தை உருவாக்க வேண்டும் என்பதே இந்தப் புதிய தலைமுறை அரசியல்வாதிகளின் முன் உள்ள சவால்.

நேபாளம் இப்போது ஒரு சந்திப்பில் நிற்கிறது. ஒருபுறம் பாரம்பரியமான பழைய அரசியல் சக்திகள், மறுபுறம் மாற்றத்தை விரும்பும் துடிப்பான இளைஞர்கள். பல நூற்றாண்டுகால மன்னராட்சி முடிவுக்கு வந்துவிட்டாலும், உண்மையான ஜனநாயகம் என்பது மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில்தான் இருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இப்போது வீசும் இந்த மாற்றத்தின் காற்று, நேபாளத்தை ஒரு நவீன மற்றும் வளமான நாடாக மாற்றும் என்று உலகம் உற்று நோக்குகிக் கொண்டிருக்கிறது. புதிய தலைமுறைத் தலைவர்கள் தங்கள் வாக்குறுதிகளைச் செயலில் காட்டினால், நேபாளத்தின் புதிய விடியல் என்பது வெறும் கனவாக இல்லாமல் நிஜமாக மாறும்.
இந்திய மற்றும் நேபாள நாடுகளுக்கு இடையில் சுமார் 1,700 கி.மீ. நீளமான திறந்த எல்லை உள்ளது. இதன் மூலம் இரு நாடுகளின் குடிமக்களும் விசா இல்லாமல் பயணம் செய்து, வாழ்ந்து, வேலை செய்யலாம். பல நேபாள குடிமக்கள் இந்தியாவில் வேலை செய்கிறார்கள்; சிலர் இந்திய ராணுவத்தின் கோர்கா படைப்பிரிவில் பணியாற்றுகின்றனர். இது இரு நாடுகளின் நெருங்கிய உறவை காட்டுகிறது.
நேபாளத்தின் அரசியல் எழுச்சி, அந்த நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு வல்லரசுகளுக்கு இடையே சிக்கியிருக்கும் நேபாளம், இனி ஒரு தரப்பிற்கு மட்டும் சாதகமாகச் செயல்படாது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.

இளைஞர்களின் ஆதரவைப் பெற்ற புதிய தலைவர்கள், 'நேபாளத்தின் நலன் முதலில்' (Nepal First) என்ற கொள்கையை முன்னெடுக்கின்றனர். இந்தியாவுடனான நீண்டகால கலாச்சார மற்றும் திறந்த எல்லை உறவை மதிக்கும் அதேவேளை, எல்லைப் பிரச்சனைகளில் சமரசமற்ற போக்கையும், பொருளாதார ரீதியாக இந்தியாவை மட்டுமே சார்ந்திருக்கும் நிலையை மாற்றவும் அவர்கள் விரும்புகின்றனர்.
மற்றொருபுறம், சீனாவின் உள்கட்டமைப்பு உதவிகளை வரவேற்றாலும், இலங்கையைப் போன்ற 'கடன் பொறி'களில் சிக்கிவிடக் கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர். சுருக்கமாகச் சொன்னால், புதிய நேபாளம் என்பது உணர்ச்சிகரமான அரசியலைக் கடந்து, தேசத்தின் இறையாண்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியை மட்டுமே மையமாகக் கொண்ட ஒரு யதார்த்தமான, நடுநிலையான வெளியுறவுக் கொள்கையை நோக்கிப் பயணிக்கிறது. இது தெற்காசியாவின் அதிகாரச் சமநிலையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.





















