கன்னியாகுமரி: "மானம் உள்ளவர்கள் திமுக-வுக்கு ஓட்டு போடலாமா?" - ஆர்ப்பாட்டத்தில் ...
சென்னை: `நீ அழகாக இருப்பதால்தானே...' - மனைவி மீது ஆசிட் வீசிய கணவர்
சென்னை பல்லாவரம், பாரதி நகர் துலுக்கானத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சனா பாத்திமா (29). இவருக்கும் முகமது அலி (31) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். சனா பாத்திமா அவரின் அம்மா வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 15 -ம் தேதி சனா பாத்திமாவின் பெற்றோர் உறவினர் ஒருவரின் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மதுரைக்குச் சென்றுவிட்டனர். அதனால் வீட்டில் சனா பாத்திமா மட்டும் தனியாக இருந்தார். சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து சனா பாத்திமா பைக்கில் வீட்டுக்கு வந்தார். பின்னர் பைக்கை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முகமது அலி, தன்னுடைய மனைவி சனா பாத்திமாவிடம் தகராறு செய்திருக்கிறார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

அதனால் ஆத்திரமடைந்த முகமது அலி, மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து சனா பாத்திமாவின் முகத்தில் வீசினார். வலியால் அலறி துடித்த சனா பாத்திமா, அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அந்த காட்சி அங்குள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவானது. ஆனாலும் சனா பாத்திமாவை துரத்தியபடி முகமது அலி விரட்டிச் சென்றார். அவரிடமிருந்து தப்பிய சனா பாத்திமா அக்கம் பக்கத்தினரின் உதவியோடு உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், இடது கண்ணில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து கண் மருத்துவமனைக்கு சனா பாத்திமா சென்று அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக சனா பாத்திமா பல்லாவரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஆசிட் வீசியதும் சனா பாத்திமா தப்பி ஓடும் சி.சி.டி.வி காட்சி சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.
சனா பாத்திமா பேசுகையில், ``எனக்கும் என் கணவருக்கும் இடையே பல பிரச்னைகள் இருக்கின்றன. அதனால் தனியாக அம்மா வீட்டில் வசித்து வருகிறேன். விவாகரத்து கேட்டிருக்கிறேன். சில தினங்களுக்கு முன்பு என்னுடைய கணவர் முகமது அலி என்னை தாக்கினார். அதனால் எனக்கு முகத்தில் காயம் இருந்ததால், என் தங்கையின் இல்ல நிகழ்ச்சிக்குக்கூட நான் செல்லவில்லை. வீட்டில் பூட்டு இல்லாததால் அதை வாங்க கடைக்குச் சென்றேன். அப்போது என் வீட்டின் அருகே முகமது அலி நின்றுக் கொண்டிருந்தார். அவர், என்னிடம் குழந்தையை பார்க்க வேண்டும் என்று கூறினார். உடனே நான், தங்கையின் வீட்டு நிகழ்ச்சிக்கு குழந்தை சென்றிருக்கிறாள் என்று கூறினேன். அதனால் ஆத்திரமடைந்த முகமது அலி, நீ அழகாக இருப்பதால்தானே வெளியில் வேலைக்குச் செல்கிறாய் என்று கூறியபடி ஆசீட்டை முகத்தில் வீசிவிட்டார். எரிச்சலால் வலியால் துடித்தேன். என்னுடைய இடது கண்ணில் பார்வை தெரியவில்லை. காவல் நிலையத்திலும் புகார் கொடுத்திருக்கிறேன். முகமது அலி தலைமறைவாகி விட்டதாக போலீஸார் சொல்கிறார்கள். எனக்கு பயமாக இருக்கிறது" என்றார் கண்ணீர்மல்க

இதுகுறித்து பல்லாவரம் போலீஸாரிடம் கேட்டதற்கு, ``சனா பாத்திமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் எங்களுக்கு அங்கிருந்து தகவல் வந்தது. உடனடியாக மருத்துவமனைக்கே சென்று சனா பாத்திமாவிடம் என்ன நடந்தது என்று விசாரித்ததோடு வழக்கும் பதிவு செய்திருக்கிறோம். சனா பாத்திமா தப்பி ஓடி வரும் சி.சி.டி.வி. கேமரா காட்சியை ஆதாரமாக எடுத்திருக்கிறோம். அதனால் சட்டப்படி முகமது அலி மீது நடவடிக்கை எடுக்கப்படும். கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஆசீட்டை முகமது அலி பயன்படுத்தியிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது" என்றனர்.



















