செய்திகள் :

எஸ்கேப் ஆகும் முஸ்லிம் லீக்; பிடிகொடுக்காத ஜவாஹிருல்லா! - வாணியம்பாடியை கழற்றிவிடுகிறாரா எ.வ.வேலு?

post image

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி, தொடர்ந்து மூன்று முறை அ.தி.மு.க வசம் இருக்கிறது. கடந்த தேர்தல்களில், `தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சிக்குத் தொகுதியை தாரை வார்த்ததால்தான் தோல்வியடைந்தோம். வரும் தேர்தலில், வாணியம்பாடி தொகுதியைக் கூட்டணிக்குக் கொடுக்கக் கூடாது. தி.மு.க நேரடியாக போட்டியிட வேண்டும்’ என உடன்பிறப்புகள் போர்க்கொடித் தூக்கியிருக்கின்றனர்.

தொடர் தோல்வி காரணமாக, முஸ்லிம் லீக் கட்சித் தலைமைக்கும், அந்தக் கட்சி நிர்வாகிகளுக்குமே வாணியம்பாடி தொகுதியில் இந்த முறை போட்டியிட விருப்பமில்லை. தி.மு.க கூட்டணியில், இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால், `ஆம்பூர் அல்லது கடையநல்லூர், பாபநாசம் போன்ற தொகுதிகளை தேர்வுசெய்யலாம்’ என்றும் கணக்குப் போடுகிறது முஸ்லிம் லீக் தலைமை.

அமைச்சர் எ.வ.வேலு

முதல் விருப்பமாக, ஆம்பூர் தொகுதியைத் தான் முஸ்லிம் லீக் தேர்வு செய்து வைத்திருக்கிறது. காரணம், ஆம்பூர் தொகுதியில் இஸ்லாமியர் வாக்குவங்கி அதிகம். தி.மு.க கூட்டணிக்கும் சாதகமான தொகுதியாக பார்க்கப்படுகிறது. எனவே தான் முஸ்லிம் லீக் இந்த முறை ஆம்பூரில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, தி.மு.க தலைமையிடம் அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கிறது.

அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில், தி.மு.க வடக்கு மண்டலத் தேர்தல் பொறுப்பாளரும் அமைச்சருமான எ.வ.வேலு, பல்வேறு நெருக்கடிகளை முஸ்லிம் லீக் கட்சிக்குக் கொடுப்பதாகவும் கூட்டணிக்குள் பேச்சு அடிப்படுகிறது.

வாணியம்பாடி

`வடதமிழகத்தில் நீங்கள் வாணியம்பாடி தொகுதியில் மட்டும்தான் போட்டியிட வேண்டும். ஆம்பூர் தொகுதியை தர முடியாது’ என்று விடாபிடியாக எ.வ.வேலு குடைச்சல் கொடுக்கிறாராம்.

இதனால், `எ.வ.வேலு ஆதிக்கம் செலுத்தும் வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட வாணியம்பாடியும் வேண்டாம்; ஆம்பூர் தொகுதியும் வேண்டாம்’ என எஸ்கேப் ஆகியிருக்கும் முஸ்லிம் லீக் கட்சித் தலைமை, தங்களுக்கு சாதகமாக இருக்கும் கடையநல்லூர், பாபநாசம் போன்ற தொகுதிகளையே கேட்டு பெறும் முடிவுக்கு வந்திருக்கிறதாம். அதே சமயம், கடைசி நேரத்தில் `முதலமைச்சர் ஸ்டாலின் மனமிறங்கி வந்து முஸ்லிம் லீக்கிற்கு ஆம்பூர் தொகுதியைக் கொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது’ என்றும் நம்புகிறார்கள் அக்கட்சியினர்.

`கூட்டணிக்கு ஆம்பூர் தொகுதி போய்விடக் கூடாது’ என்பதில், எ.வ.வேலு இவ்வளவு சிரமப்படுவதற்குப் பின்னணியில் அவரின் சமூக கணக்கு இருப்பதாக தொடர்ந்து சர்ச்சைகள் பரபரக்கின்றன.

`ஆம்பூர் தொகுதியில் தனது சமூகத்தைச் சேர்ந்த சிட்டிங் எம்.எல்.ஏ அ.செ.வில்வநாதனுக்கே மீண்டும் சீட் வாங்கித் தந்துவிட வேண்டும்’ என கங்கணம் கட்டிக்கொண்டு கூட்டணிக்குள் உள்ளடி வேலைப் பார்க்கிறாராம் அமைச்சர் எ.வ.வேலு என்கிறார்கள் சில திமுக வினர். இப்படியான செயல்களால், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி தொகுதிகளைச் சேர்ந்த தி.மு.க-வினரே அமைச்சர் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனராம்.

இந்த நிலையில், தி.மு.க தலைமைக்கு நெருக்கடி கொடுப்பதற்காக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவுக்குத் தூண்டில் போட்டிருக்கிறாராம் எ.வ.வேலு.

`ஆம்பூர் தொகுதி தனது ஆதரவாளருக்குக் கிடைக்க வேண்டுமானால், எப்படியாவது வாணியம்பாடியைக் கூட்டணிக்குத் தள்ளிவிட வேண்டும்’ என்பது தான் எ.வ.வேலுவின் திட்டமாம்.

அதன்படி, மனிதநேய மக்கள் கட்சிக்கும் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதால், அந்த கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவை வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட வற்புறுத்தி காய்நகர்த்திக் கொண்டிருக்கிறாராம் எ.வ.வேலு.

2011 சட்டமன்றத் தேர்தலின்போது, ஆம்பூர் தொகுதியில், மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் அஸ்லம் பாஷா வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார். அதைத் தொடர்ந்து, 2015-ம் ஆண்டு தமிழகத்தை பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய ஆம்பூர் கலவர வழக்கில், 191 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. கலவரத்துக்குத் தலைமை தாங்கியதாக முன்னாள் எம்.எல்.ஏ அஸ்லம் பாஷா பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், `இவ்வழக்கில் 22 பேர் குற்றவாளிகள்’ என்று தீர்ப்பளிக்கப்பட்டு, மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

முன்னாள் எம்.எல்.ஏ அஸ்லம் பாஷாவின் சொத்துகளை, சேதப்படுத்தப்பட்ட சொத்துகளுக்கு ஈடாக பறிமுதல் செய்யவும் திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே சமயம், 2020-ம் ஆண்டிலேயே அஸ்லம் பாஷாவும் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார்.

பேராசிரியர் ஜவாஹிருல்லா

ஆம்பூர் கலவரத்துக்குப் பிறகு நடைபெற்ற 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, மீண்டும் அந்தத் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்டது. ஆம்பூர் மக்களின் கோபத்துக்கு ஆளானதால், அந்தக் கட்சி தோல்வியடைந்தது. இதனால், 2021 தேர்தலின்போது, தி.மு.க கூட்டணியில் ஆம்பூர் தொகுதியை மனிதநேய மக்கள் கட்சி கேட்டு பெறவில்லை. பாபநாசம், மணப்பாறை ஆகிய இருத் தொகுதிகளிலும் போட்டியிட்டு மனிதநேய மக்கள் கட்சி வெற்றிபெற்றது. ஜவாஹிருல்லா, பாபநாசம் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார்.

இந்தச் சூழலில்தான் மனிதநேய மக்கள் கட்சித் தலைவரிடம் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தி வருகிறாராம் எ.வ.வேலு. `ஆம்பூர் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு பக்கத்திலுள்ள வாணியம்பாடி தொகுதியிலும் எதிரொலிக்கிறது. அப்படியிருக்கும்போது, இந்த இருத் தொகுதிகளிலுமே எங்களுக்குப் போட்டியிட விருப்பமில்லை’ என பிடிகொடுக்காமல் கைவிரித்துவிட்டாராம் ஜவாஹிருல்லா.

இதனால், `வாணியம்பாடியை எப்படி கழற்றிவிடுவது?’ எனத் தெரியாமல் குழம்பிக்கொண்டிருக்கிறாராம் எ.வ.வேலு. `அமைச்சரின் இந்த குழப்படியான உள்ளடி வேலைகளால், வாணியம்பாடி தொகுதி மீண்டும் `இலை’மறைவாக அ.தி.மு.க-வுக்கே சாதமாகிவிடும்’’ என்று கொதிக்கிறார்கள் உடன்பிறப்புகள்.

கன்னியாகுமரி: "மானம் உள்ளவர்கள் திமுக-வுக்கு ஓட்டு போடலாமா?" - ஆர்ப்பாட்டத்தில் கொந்தளித்த பொன்னார்!

தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப்பொருள் கடத்தல், போதை புழக்கத்தால் இளைஞர்கள் இளம்பெண்கள் வாழ்க்கை சீரழிவை கட... மேலும் பார்க்க

ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து களம் இறங்கப் போவது யார்? பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ராவை நிறுத்த ஆலோசனை

நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், போடி தொகுதியில்பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா களம் இறங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.முன்னாள் முதலமைச்சர்ஓ.பன்னீர்செல்வம் 2001 - 2006 ஆம் ஆண்டு தேர்தல்கள... மேலும் பார்க்க

`யம்மா... தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை எங்கே?'- தமிழிசையிடம் கேள்வி எழுப்பிய மூதாட்டி!

சட்டம்-ஒழுங்கு பிரச்னையால் தமிழ்நாடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதை கண்டித்தும் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நெல்லை சந்திப்... மேலும் பார்க்க

`நடக்கக்கூட முடியலை, மாசம் 20 நாள் ஆஸ்பத்திரியில... எதுக்கு பதவி வெறி!' - ஓபிஎஸ்-ஸைச் சாடும் டிடிவி

தஞ்சாவூரில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் இணைந்து தமிழ்நாட்டில் நிலவும் பாலியல் கொடுமைகள், போதைப்பொருள்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை தடுக்க தவறியதாக, திமுக அரசைக் கண்டி... மேலும் பார்க்க

மல்லுக்கட்டும் கழகங்கள்; விஜய் குறிவைக்கும் தொகுதியில்.! - திருச்சி மாவட்ட நிலவரம் | முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?'முந்துவது யார்?திருச்சி மாவட்டம்மாநிலத்த... மேலும் பார்க்க

`அப்செட்டான ரஜினி; டெல்லி கொடுத்த சிக்னல்' - அறிக்கைக்கு பின்னால் நடந்த அரசியல்!

“காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்”என்கிற வரிகளோடு ரஜினி வெளியிட்ட அறிக்கைக்கு பின்னால் பல்வேறு அரசியல் நகர்வுகள் சத்தமில்லாமல் நடந்துள்ளது. ஆதவ் அர்ஜூனா கடந்த வாரம் நடந்த போராட்டத்தில் ர... மேலும் பார்க்க