`நடக்கக்கூட முடியலை, மாசம் 20 நாள் ஆஸ்பத்திரியில... எதுக்கு பதவி வெறி!' - ஓபிஎஸ்...
தொடர்ந்திடும் பந்தம்! - சிறுகதை
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
எமிலி வகுப்பறையில் அன்று எப்போதுமில்லாத
சோகத்துடன் அமர்ந்திருந்தாள். புதிதாக வந்திருந்த வகுப்பு ஆசிரியை மிஸஸ் சாரா லூயிஸ்
டிஜிட்டல் போர்ட்டில் பாடம் நடத்திக் கொண்டிருக்க, எமிலியின் கவனம் பாடத்தில் இல்லை.
மிகச் சமீப நாட்களில்தான் அவளிடம் இந்த மாற்றம். அதை மிஸஸ் லூயிஸும் கவனித்திருந்தாள்.
( ஆசிரியர் பெயர்களின் பிற்பகுதி பெயர் surname மட்டுமே விளிக்கப்படும் என்பதால் நாமும் தேவைப்படும் இடங்களில் மிஸஸ் லூயிஸ் என்றே கூறுவோம்.)
"ஏன் இந்தப் பெண் இப்படி இருக்கிறாள்?"
இடையிடையே அவள் பார்வை எமிலியைத் தொட்டுத் திரும்பியது.

சாரா புதிதாக வந்து சேர்ந்தவள் என்பதால் சரிவர இன்னும் குழந்தைகளிடம் பழகாததால், நேரடியாக அவளிடம் சென்று கேட்கவும் தயக்கம். ஒருவேளை மிஸஸ் எட்வர்டிடம் பேசிப் பார்க்கலாம் என நினைத்து பாடவேளை முடியட்டும் என்று காத்திருந்தாள்.
துணை ஆசிரியை மிஸஸ் ரேச்சல் எட்வர்ட் ஒருபுறம் அமர்ந்து அவளுக்கு ஒதுக்கப் பட்டிருந்த பணியில் ஈடுபட்டிருந்தாள். துணை ஆசிரியர் பணியும் ஆசிரியர் பணிக்கு சற்றும் சளைத்தது அல்ல.
ஆசிரியருக்கு உதவுவது, வகுப்பறை சுவர்களில் பாடத்திட்டத்தின் சில பகுதிகளை படமாக வரைந்து ஒழுங்கு படுத்தி அலங்கரிப்பது, மாணவர்களின் தனிப்பட்ட திறமைகளை ஊக்குவிப்பது, மாணவர்களின் நடத்தை மற்றும் ஒழுக்கத்தைக் கண்காணிப்பது, முக்கியமான ஒன்றாக மாணவர்களுக்கான உதவி (SEND Support) இங்கிலாந்தில் பல துணை ஆசிரியர்கள் Special Educational Needs and Disabilities (SEND) எனப்படும் கற்றல் குறைபாடு அல்லது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக தனியே செயலாற்ற வேண்டும்.
மிஸஸ் எட்வர்டைப் (ரேச்சலைப்) பொறுத்த மட்டில் இந்தப் பணியை அவள் மிகவும் விரும்பி ஏற்றுக் கொண்டவள். குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதும், அவர்களுக்குப் பாடத்தைத் தாண்டி புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொடுத்து அவர்களின் உலகத்தை விரிவாக்கி அவர்கள் அதில் மகிழ்ச்சியடைவதை கண்டு ரசிப்பவள்.
மிஸஸ் எட்வர்டும் எமிலியிடம் ஏற்பட்டிருந்த மாற்றத்தைப் பார்த்துக் கொண்டுதான் தன்னுடைய வேலையில் ஈடுபட்டிருந்தாள்.
ஆனாலும் மிஸஸ் லூயிஸின் கண்கள் எமிலியை சுட்டிக் காட்ட, மிஸஸ் எட்வர்ட் நான் பார்த்துக்கொள்கிறேன் என்பதாக தலையசைத்தாள்.
ஏனென்றால் எமிலிக்கு ரேச்சலை மிகவும் பிடிக்கும். சொல்லப் போனால் எமிலிக்காக
வேண்டியே இயர் டூவில் "One to One support" என்னும் விதியின் கீழ்.., ( இரண்டாம் வகுப்பு) ரேச்சல் எட்வர்ட் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தாள். மூன்று வருடங்களாக அடுத்தடுத்த வகுப்புக்கும் மிஸஸ் எட்வர்ட்தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து எமிலி கேட்க அவளுக்காகவே வழக்கமான விதிகளைத் தளர்த்தி அனுமதி அளித்திருந்தது பள்ளி நிர்வாகம். இப்போது எமிலியும் மிஸஸ் எட்வர்டும் ஐந்தாம் வகுப்பில்.

சொல்லப் போனால் எமிலி எல்லோரையும் போல சாதாரணமானவள் போலத் தெரிந்தாலும் அவள் அப்படி இல்லை.
எமிலிக்கு டிஸ்லெக்ஸியா பாதிப்பு. (phonics) போனிக்ஸ் உச்சரிப்பு சரியாக வராது. எழுத்துக்களை மாற்றி எழுதும் பழக்கம். ஆனால் அவள் க்ரியேட்டிவாக சிந்தித்து பேசும் நேரம் மிகுந்த ஆச்சரியம் கொள்வாள் மிஸஸ் எட்வர்ட். சொல்லப் போனால் Out - of -the - box - thinkers
லிஸ்ட்டில் நிச்சயம் இடம் பெறுவாள் எமிலி
என்று நினைத்துக் கொள்வாள்.
எட்வர்ட்க்கும் எமிலியை மிகவும் பிடிக்கும். ஆனால் பள்ளி மற்றும் ஒட்டுமொத்த விதிகளின் படி இப்படி நியமிக்கப்பட்ட ஆசிரியர் மாணவரின் மீது தனிப்பட்ட முறையில் அதிகப் படியான பாசத்தையோ, நெருக்கத்தையோ காட்டக் கூடாது என்பதும் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டிய விதி!
"லிசன் எமிலி!" பாடத்தின் இடையே ஆசிரியை லூயிஸின்
அழைப்புக்கும் திரும்பவில்லை அவள்.
அந்த பாட நேரம் முடிந்து விட்டதற்கான அறிகுறியோடு டிஜிட்டல் போர்ட் அணைக்கப் பட்டுவிட,
மாணவர்கள் எழுந்து வெளியே செல்லத் தொடங்கினர். ஒரு சிறு இடைவேளைக்குப் பிறகு பள்ளி மைதானத்தில் விளையாட்டு வகுப்பு.
விளையாட்டு ஆசிரியருடன் துணை ஆசிரியை மிஸஸ் எட்வர்ட் தன் வகுப்பு மாணவர்களை கண்காணிக்கப் போக வேண்டும். ஆனால் எமிலிக்கு என்னவானது என்று விசாரித்து அறிய வேண்டும்... என்ற தவிப்பில் இருந்தவளைத் தேற்றுவது போல சாரா லூயிஸ்,
"யூ டேக் யுவர் ஓன் டைம் மிஸஸ் எட்வர்ட்...!" என்றிடவும்தான்
ரேச்சல் நிம்மதியடைந்தாள்.
"எமிலி...!" ரேச்சல் குரலுக்கும் திரும்பவில்லை அவள்.
"கேன் ஐ ஹக் யூ எமிலி?"
"ஐ டோன்ட் வான்ட் மிஸஸ் எட்வர்ட் ...!" சற்று காட்டமாகத்தான் பேசியது போலிருந்தது எமிலி.
"நோ வர்ரிஸ் எமிலி! வீ கேன் டாக் வென் யூ ஆர் ரெடி ஓகே...?" எட்வர்ட் கூறியதற்கும் பதில் இல்லை அவளிடம். ஆனால் எமிலியின் கண்களின் ஓரம் இரண்டு நீர் முத்துக்கள் திரண்டிருந்தது. எப்போது வேண்டுமானாலும் தரையில் பட்டுத் தெறிக்கலாம் என்னும் நிலையில்...!
எமிலியின் மௌனத்தைக் கண்டு, அவளுக்கான நேரத்தை எடுக்கட்டும் என்று அமைதி காத்து,
"டு யூ லைக் திஸ் க்ரேயான்ஸ் எமிலி?"
கவனத்தைத் திருப்ப கேட்டிருந்தாள் எட்வர்ட்.
உடனே எமிலியிடம் மாற்றம் ஏற்பட்டிருந்தது. மிஸஸ். எட்வர்ட் கையிலிருந்த அத்தனை க்ரேயான்களையும் பிடுங்குவது போல வாங்கியவள் அவள் டெஸ்க் மீதிருந்த நோட்டுப் புத்தகத்தைப் பிரித்து விறுவிறு வென்று ஒரு படம் வரைந்து கலர் கொடுத்து நிமிர்ந்தாள்.
துல்லியமான அதே சமயம் அழகான படமாக
இருந்த அது... ஒரு ஆணின் படம்.!
"மிஸஸ் லூயிஸ்!" மிஸ் ரேச்சல் குரல் கொடுக்க
ஆசிரியை சாரா அருகே வந்து எமிலி வரைந்திருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டு பாராட்டினாள்.
மிஸஸ் லூயிஸின் பாராட்டு எமிலிக்குப் பிடிக்கவில்லை என்பது அவள் உதடுகளைக் கடித்த விதத்தில் தெரிந்தது. அவளுக்குத் தேவை மிஸஸ் எட்வர்டின் பாராட்டு மட்டுமே. அவளின் முகத்தையே இப்போது பார்த்திருந்தாள் எமிலி.
ஆனால் ரேச்சல் அவள் வரைந்த அந்த ஓவியத்தையே பார்த்துக்கொண்டிருக்க, அதில் அவள் பயன்படுத்தியிருந்த அடர் வண்ணங்கள் எதையோ சொல்லாமல் சொல்வது போலிருந்தது.
"ஹூ ஈஸ் திஸ் மேன் எமிலி?" கேட்டவள் சாரா லூயிஸ்.
"வில் யூ ஹக் மி ரேச்சல்?" எமிலி ரேச்சலைப் பார்த்து இவ்வாறு கேட்டதும்,மிஸஸ் லூயிஸ் தோள்களைக் குலுக்கிக் கொண்டு அங்கிருந்து அகன்றுவிட்டாள்.
எமிலியை சிறிது நேரம் அணைத்து விலகிய ரேச்சல்,"நீ வரைந்திருப்பது யாரை எமிலி?"
"ஐ ஹேட் திஸ் மேன்...! ஹி ஈஸ் மை மாம்ஸ் ஹஸ்பென்ட்...!"
எதிர்பாராத பதிலில் திகைத்து நின்றிருந்தாள் ரேச்சல்.
"ஏன் பிடிக்காது? எதற்கு பிடிக்கவில்லை... என்ற பர்சனல் கேள்விகளைத் தாண்டி அவள் அம்மாவின் கணவன் என்று கூறியது, எதையோ குறிப்பால் உணர்த்துவது போலத் தெரிந்தது. இருந்தாலும் எமிலியைப் பார்த்து புன்னகைக்க செய்தாள்.
"மிஸஸ் எட்வர்ட்! டு யூ நோ?" எமிலியாக சொல்லட்டும் என்று அமைதி காத்தாள் அவள். "சிட் வித் மி!"
எமிலி கட்டளை போலக் கூற அவள் அருகினில் அமர்ந்து கொள்ள,
"வாட் ஹாப்பண்ட் மிஸஸ் எட்வர்ட்?" மீண்டும் தேடி வந்து கேட்டிருந்தாள் மிஸஸ் லூயிஸ்!
எமிலியிடம் நடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்தாள் மிஸஸ் எட்வர்ட். சட்டென்று தான் வரைந்து வைத்திருந்த அந்த அழகான படத்தில் கண்மண் தெரியாத வகையில் கிறுக்கி கசக்கி தூர எறிந்துவிட்டாள் எமிலி.

அவளின் செயல் இருவருக்கும் அதிர்ச்சி தரத் தக்கதாகத்தான் இருந்தது. ஆனாலும் எதுவும் செய்ய முடியாது நின்றனர். வார்த்தைகளால் கண்டிக்கவோ, செயலால் உணர்த்தவோ முடியாத நிலை!
அதைச் செய்த பிறகு எமிலி மீண்டும் சோகத்தில் மூழ்கிப் போக, அதிகம் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்து, ரேச்சல் அவளை பள்ளி மைதானத்துக்கு போகலாம் வருகிறாயா என்று கேட்டதும் மகிழ்ச்சியோடு எழுந்து நடந்தாள் எமிலி!
அவளிடம் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் எதனால் என்று நிறையவே குழம்பிக் கிடந்தவள் மிஸஸ் எட்வர்ட்தான். ஏனென்றால் அதிகமாக அவளுடன் நேரம் செலவிடுபவள் அவள்தானே!எழுத்துக்களை ஏறுக்கு மாறாக எமிலி எழுதினாலும் கணக்கில் புலி. மற்ற குழந்தைகள் செய்யத் திணறுவதை நொடியில் முடித்து நோட்டுப் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வேடிக்கை பார்க்கத் தொடங்கி விடுவாள். அல்லது மிஸஸ் எட்வர்ட் அருகில் வந்து அமர்ந்து, அவள் மீது சாய்ந்து கொண்டு அவளைப் பற்றிய கேள்விகளைத் தொடுக்கத் தொடங்கி விடுவாள்.
மிஸஸ் எட்வர்டின் மகனும் அந்தப் பள்ளியில்தான் படிக்கிறான். ஆறாவது வகுப்பில். அவ்வப்போது தாயைப் பார்க்க வருபவனிடம் எமிலி ஹாய் சொல்லி சினேகத்துடன் சிரிப்பாள்.
இதெல்லாம் கூட கடந்த சில நாட்களாக வழக்கம் போல நடக்கவில்லை.ரேச்சலின் மகன் 'ஸ்டூவர்ட் எட்வர்டிடமும்' முகம் கொடுத்துப் பேச முயற்சிக்கவில்லை.
தினசரி நடக்கும் இந்த நிகழ்வுகள் வகுப்பு ஆசிரியைகள் இருவரையும் கவலையில் ஆழ்த்தியிருந்தது. வீட்டில் அவளுக்கு யாராலாவது ஏதாவது துன்புறுத்தல் நிகழ்கிறதா என்பதை கண்டறிய நினைத்தார்கள். அதை எங்கிருந்து எப்படித் தொடங்குவது என்ற வினாதான் இருவருக்கும்.
அன்று மாலை வகுப்பு முடிந்து டிஸ்மிஸலுக்கு நின்றார்கள் சாராவும், ரேச்சலும். ரேச்சலின் அருகே அவள் கைகளைப் பற்றியபடியே நின்றிருந்த எமிலியை அழைத்துப் போக வந்திருந்த அவளின் தந்தை "எமிலி, லெட்ஸ் கோ!" என்றதைக் கேட்டதும் அவளின் உடல் நடுங்கியதை ரேச்சலால் தெளிவாக உணர முடிந்தது. எமிலியின் விரல் நகங்கள் ரேச்சலின் கையில் அழுந்தப் பதிந்தது. ஒருவேளை தந்தையைக் கண்டு எமிலி பயப்படுகிறாள் என்றால், அது ஏன்?
அவர்கள் சென்றபிறகு மிஸஸ் லூயிஸ் மெதுவாக ரேச்சலிடம் வந்தாள். "மிஸஸ் எட்வர்ட்! நீ கவனித்தாயா? தன் தந்தையைக் கண்டு அவள் அஞ்சுகிறாள் போல!"
"இதைப் பற்றி அவளின் தாயிடம் பேசிப் பார்க்க வேண்டும். அதற்கு முன் பள்ளியின் தலைமையிடம் இந்த விஷயத்தை தெரிவிக்க வேண்டும்.!"
இருவரின் முடிவும் ஒன்றாகவே இருக்க, அவர்கள் கூறியதைக் கேட்டு பள்ளி சார்பில்
எமிலியின் தாயிடம் பேசிப் பார்க்க முடிவு செய்யப்பட்டு போன் அழைப்பு விடுக்கப்பட
எமிலியின் தாயிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
பிறகு பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக்கு கண்டிப்பாக தாய் தந்தை இருவரையும் வரச் சொல்லி அவள் வீட்டுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.
அதற்கும் அவர்கள் வரவில்லை. வேலை நேரத்தில் பர்மிஷன் கிடைக்கவில்லை என்று காரணம் சொல்லப்பட்டது.
இதற்கிடையே எமிலி வகுப்பில் ரேச்சலுடன் மனம் விட்டுப் பேசும் சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் எப்படியாவது அவளிடமிருந்து ஒரு சிறு செய்தியையாவது அறிந்து கொள்ள முடியாதா என்று எவ்வளவோ முயற்சி செய்தாள். மிஸஸ் லூயிஸும் தன் பங்குக்கு ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்க, அவளைக் கண்டாலே எமிலியிடம் தன் தந்தையைக் காணும் நேரத்தில் ஏற்படும் அத்தனை தடுமாற்றங்களும், வெறுப்பும் ஏற்பட்டதை யதேச்சையான சந்தர்ப்பத்தில் உணர்ந்து உள்ளுக்குள் தவித்தாள் ரேச்சல்.
இதை எப்படிக் கையாள்வது?
ஆனால் எமிலியை அழைத்துப் போக தவறாமல் அவள் தந்தை மட்டும் வந்து கொண்டிருக்க.
இப்படியே தொடர்ந்தால் இதை DSL க்கு கொண்டு செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று ரேச்சலிடம் மிஸஸ் லூயிஸ் சொல்ல,
ரேச்சல் முடிவெடுத்து விட்டாள். இது வெறும் (learning support ) லேர்னிங் சப்போர்ட் எல்லையைத் தாண்டிவிட்டது என்று.
அவள் நேராகப் பள்ளியின் safeguarding lead ன் அறைக்கு சென்றாள்.
"மிஸஸ் எட்வர்ட்.எமிலி விஷயத்தில் நீங்கள் சொல்வது கவலை அளிக்கிறது.அவளது தந்தை அவளை அவளை அழைத்துச் செல்லும் நேரத்தில் அவள் காட்டும் பயம் சாதாரணமானது அல்ல. நாம் (social services ) சோஷியல் சர்வீசஸ் உதவி பெற வேண்டியிருக்கும் என்று அந்த அதிகாரி சொன்னபோது ரேச்சலுக்குள் இனம் புரியாத பயம் கலந்த நிம்மதி!
அன்று மதிய நேரம். எமிலி மாத்திரம் வகுப்பறையில் அவளின் வழக்கமான இடத்தில் அமர்ந்திருந்தாள். ரேச்சல் அருகே சென்று," எமிலி! என்னை உனக்குப் பிடிக்கும் என்றால் நான் கேட்பதற்கு உரிய பதில் தருவாயா? என்னைப் போலவே உனக்கு புதிய ஆசிரியை சாரா லூயிஸையும் பிடிக்கும்தானே?" அவள் கேட்டதும் தன் காதுகளைத் தன்னிரு கையால் பொத்திக் கொண்டவள், "இனியொரு முறை அந்தப் பெயரை என்னிடம் உச்சரிக்க வேண்டாம் மிஸஸ் எட்வர்ட்.!" என்று கத்திச் சொன்னாள் எமிலி.
ரேச்சல் யூகித்தது சரியாகி விட்டது. இனி மெது மெதுவாகத்தான் இவளிடமிருந்து விஷயத்தை கறக்க வேண்டும் என்று திட்டமிட்டு முன்பை விட எமிலியுடனான நேரத்தை அதிகப்படுத்திக்கொண்டாள்., ஹெட் டீச்சர் அனுமதியுடனும்,
சென்கோ (special educational need coordinator) சிறப்பு பொறுப்பாளர் அறிவுறுத்தலின் பேரிலும்!
சொல்லப்போனால் எமிலி ரேச்சலுடன் இருக்கும் சந்தர்ப்பங்களில் மிகவும் சாதாரணமாகவே இருந்தாள்.
அப்போதுதான் மெல்ல மெல்ல மனம் திறந்து பேசத் தொடங்கினாள் எமிலி. எமிலியின் தாய் எலிசாவின் இரண்டாவது கணவன்தான் இப்போது எமிலியை அழைத்துப் போக வரும் மிஸ்டர் லூயிஸ். ஆரம்ப காலங்களில் லூயிஸ் எமிலியிடம் சாதாரணமாக நடந்து கொண்டாலும் நாளாக நாளாக அவனுக்கு அவளைக் கண்டால் பிடிக்காமல் போனது.
வெளியில் சாதாரணமானவனாக நடந்து கொண்டாலும், வீட்டுக்குச் சென்றதும் அவள் மீது வார்த்தை வன்முறையை பிரயோகிக்கத் தொடங்கினான். அடிக்கடி அவளின் கற்றல் குறைபாட்டை சுட்டிக் காட்டிப் பேச, அதனால் எலிசாவுக்கும் லூயிஸுக்கும் அடிக்கடி சண்டை ஏற்படத் தொடங்கியது. எமிலி வரைதலில் ஈடுபட முற்படும் போதெல்லாம் அதைப் பிடுங்கி எறிந்து அவளை ஒரு அறையில் அடைத்து வைக்கத் தொடங்கினான்.
இதையெல்லாம் பார்த்து வெறுத்துப் போன தாய் எலிசா,தன் வாழ்க்கை குறித்து கவலைப்பட்டு குடிக்கத் தொடங்கிவிட்டாள். வேலைக்குப் போய் வரும் நேரம் போக மீதி நேரமெல்லாம் அவள் குடிப்பதிலேயே ஈடுபட்டிருக்க, எமிலி மேலும் திண்டாடிப் போனாள்.
இதுநாள்வரை கிடைத்து வந்த தாய்ப் பாசமும் லூயிஸ் வந்த பிறகு தனக்குக் கிடைக்கவில்லை என்ற ஏமாற்றம் அவளை மேலும் மனச்சிதைவுக்கு ஆளாக்கி விட்டிருந்தது.
அதற்கு தகுந்தது போல புதிய ஆசிரியையாக சாரா லூயிஸ் வந்ததும், அந்தப் பெயரைக் கேட்டதுமே அவள் பயந்து போனாள். ஏற்கனவே தாயிடமிருந்து அரவணைப்பு கிடைக்காமல் தவிக்க, மிஸஸ் லூயிஸ் தன்னை, மிஸஸ், எட்வர்ட்டிடம் இருந்து பிரித்து விடுவாளோ...? தனக்கு இருக்கும் ஒரே
நெருக்கமான ஆதரவும் போய் விடுமோ என்று பயந்தாள்.
"மிஸஸ் எட்வர்ட்... யூ வோன்ட் ஹேட் மீ, வில் யூ...?" ஒவ்வொரு முறை அவளுடன் தன் மனதைப் பகிரும் போதும் எமிலி கேட்கும் இக் கேள்வி ரேச்சலை துயரத்தில் ஆழ்த்தும்.
"நெவர் எமிலி! நான் ஏன் உன்னை வெறுக்க வேண்டும்? நீ ஒரு அற்புதமான பெண். ஒருநாளும் நான் உன்னை வெறுக்க மாட்டேன். ஐ பிராமிஸ்...!" என்று சொல்லி அவளுக்கு நம்பிக்கையூட்டி அவள் முகத்தில் தெரியும் நிம்மதியைக் கண்டு நெகிழ்ச்சியடைவாள்... வெளியே காட்டிடாமல்!
எமிலியின் பிரச்னை என்னவென்று ஓரளவுக்கு தெரிந்துவிட்டது. இனி அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயாரானாள் ரேச்சல். சென்கோ மேற்பார்வையாளர் எமிலி விஷயத்தைக் கையாள ரேச்சலுக்கு முழு சுதந்திரம் தந்துவிட,
இப்போது, எப்போதும் போல வகுப்பறையில் எமிலி பாடங்களை ரேச்சல் துணையுடன் நல்லவிதமாகவே செய்து முடித்தாள். இடையிடையே அவள் கேள்விகளுக்கு பதில் கொடுத்தபடி.
"எமிலி! உனக்கு ஒன்று தெரியுமா? எனக்குக் கூட எமிலி என்ற பெயர் அவ்வளவு பிடிக்காது...! உன்னுடன் பழகும் வரை...!" என்று ரேச்சல் கூறிட, எமிலியிடம் சிறிய அதிர்வு.!

"ஒய்... மிஸஸ் எட்வர்ட்?"
எமிலி வருத்தத்துடன் கேட்பது தெரிந்தது.
"லிசன் எமிலி! உன்னைப் போலவே எனக்கும் கசப்பான நிறைய அனுபவங்கள் ஏற்பட்டது எமிலி என்ற பெயர்கொண்ட ஒருவரால்...!" கூறி நிறுத்தி எமிலி இதை எப்படி எதிர்கொள்கிறாள் என்று கவனித்த ரேச்சல், எமிலியிடம் மீண்டும் பதட்டம் உண்டாவதைக் கண்டாள்.
உடனே,அவள் கைகளை ஆறுதலுடன் பற்றிய ரேச்சல், "ஆனால், அதைத் தொடர விடவில்லை என் அம்மா! நல்லதையும், கெட்டதையும் ஒருவரின் பெயர் மட்டும் தீர்மானிக்காது. அவரின் நடவடிக்கைகளே தீர்மானிக்கும் என்று நிறைய நிறைய ஆதாரங்களுடன் எனக்கு எடுத்துச் சொல்ல மெல்ல மெல்ல நான் அதிலிருந்த உண்மையைக் கண்டு கொண்டேன். பிறகு அதே பெயரில் நீ வந்து என் மீது அளவில்லா அன்பைப் பொழியவும் நான் என்னுடைய தவறான எண்ணங்களை முழுதும் மாற்றிக் கொண்டேன். நீ மிஸஸ் சாரா லூயிஸ் மீது கொண்டிருப்பதும் அப்படிப்பட்டதொரு அறியாமையால் ஏற்பட்ட தவறுதான் என்று நான் நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிறாய்?"
"மிஸஸ் எட்வர்ட்...! உங்களுக்கு இருந்தது போல என்னுடைய தாய் இல்லையே...?" இப்போது நேரடியாக கேட்டிருந்தாள் எமிலி!
"நிச்சயம் உன்னுடைய பிரச்னைக்கு தீர்வு காண்போம் எமிலி.
பள்ளியின் சார்பில் முயற்சி மேற்கொள்ளப் படும். அதற்கு உன்னுடைய ஒத்துழைப்பும் தேவை.!" எமிலி வேண்டா வெறுப்பாக தலையசைத்து தன் சம்மதத்தை தெரிவித்தாள்.
அவ்வளவு சுலபமாக எல்லாம் நடந்துவிடவில்லை எமிலியிடம் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி. இருந்தாலும் விடாமல் நிறைய பேசி முயற்சியைத் தொடர்ந்தாள் ரேச்சல்.
ரேச்சல், மற்றும் பள்ளி நிர்வாகத்தின் தீவிர முயற்சியால் social service இதில் நேரடியாக தலையிடுகிறது. நேரடியாக எமிலியின் வீட்டுக்கு செல்ல, அங்கு அவர்கள் கண்ட காட்சி திகைப்பை உண்டாக்குகிறது.
எமிலி வரைந்து மிஸ்டர் லூயிஸால் கசக்கி ஏறியப் பட்ட ஓவியங்கள் அனைத்தையும் வைத்துக்கொண்டு அழுதுகொண்டிருக்கிறாள் எலிசா!
அவள் குடிக்கத் தொடங்கியது எமிலியைப் பிடிக்காததால் அல்ல! லூயிஸின் வன்முறையில் இருந்து மகளைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற
விரக்தியால் என்று தெரிகிறது.
உதவிக்கு வந்தவர்கள் எலிசாவிடம் பேசுகிறார்கள். அவளின் நிலைமையைப் புரிந்து கொண்டு அவளுக்கும் தைரியமூட்டுகிறார்கள்.அதற்குப் பிறகு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் லூயிஸ் சட்டப் படியான தண்டனைக்கு ஆளாகிறான்.
சில மாதங்களுக்குப் பிறகு, எப்போதும் போல வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறாள் சாரா லூயிஸ். தன் இருப்பிடத்தில் இருந்து எழுந்து சென்ற எமிலி,
மிஸஸ் லூயிஸ், இது நான் வரைந்தது. எப்படி இருக்கிறது? இது உங்களுக்கு என்னுடைய பரிசு...!" என்று கூறித் தந்ததை வியப்புடன் பெற்றுக் கொண்டு எமிலிக்கு நன்றி சொல்கிறாள் மிஸஸ் லூயிஸ்.
சற்று தொலைவில் இருந்தபடி பார்த்துக்கொண்டிருந்த ரேச்சல் இதைப் பார்த்து புன்னகைக்கிறாள். வழக்கம் போல சாராவின் பார்வை ரேச்சலைத் தீண்டி விலகுகிறது.
எமிலி ஓடிவந்து ரேச்சலை கட்டிக் கொள்கிறாள். " மிஸஸ் எட்வர்ட்! நீங்கள் சொன்னது சரிதான். இப்போது எனக்கு மிஸஸ் லூயிஸை மிகவும் பிடிக்கிறது. உங்களைப் போலவே...!"
அங்கே அழகான ஆசிரியர், மாணவர் உறவு பூத்து குலுங்கியது. அது எமிலியை எந்த உயரத்திற்கும் இனி இட்டுச் செல்லும் என்று உறுதியாக நம்பினாள் ரேச்சல் எட்வர்ட்.!
-இந்திராணி நாகசுப்ரமணியம்.


















