செய்திகள் :

அம்மாவைத் தேடி! - சிறுகதை

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

எனக்கு நினைவு தெரிந்து நான் என் அம்மாவின் முகம் பார்த்ததில்லை. எனக்கு ஒரு வயதில், அவளுக்கு இருபத்து ஒன்று இருக்கும்போதே அகாலமாக இறந்துவிட்டாள். அவள் முகம், ஸ்பரிசம், வாசனை, அழுகை, சிரிப்பு ஏதும் எனக்கு பரிச்சியமில்லை. அவளது விருப்பு வெறுப்பு, கனவுகள், பிடித்த படங்கள், பாடல்கள், புத்தகங்கள் எதுவும் எனக்கு அறிமுகம் இல்லை.

நான் சிறுவனாக இருந்தபோது நண்பர்கள் அம்மா இல்லாததை விசாரிக்கும்போது எனக்கு சரியான பதில் தோன்றியதில்லை. அவளை என்றும் பார்த்திராததனால் பெரிய குறை இருப்பதை அறியாதவனாய் இருந்தேன்.

அப்பா எனக்கு அம்மா இல்லாத குறை தெரியாமல் இருக்க பல தியாகங்கள் செய்திருந்தார்.

காலை நான் எழும் முன் சமையலறையில் சுடச்சுட உப்புமாவோ, பொங்கலோ மணக்கும். சோம்பலாக தலையணைக்குள் முகத்தைத் திணிக்கும் என்னை உலுக்கி எழுப்பி குளியலறையில் தள்ளிவிட்டு, நான் வெளியே வருமுன் மதிய உணவை டப்பாவில் அடைத்து, புத்தகப் பையை சரி செய்து வைத்திருப்பார்.

அமிர்தமான உணவை அவசரமாக அடைத்துக் கொண்டு வாசலில் ஹார்ன் அடித்து காத்திருக்கும் பைக்கில் அப்பாவின் பின் குதித்து ஏறும் முன் அப்பா வண்டியைக் கிளப்பி இருப்பார். சரியாக மணி அடிப்பதற்கு நொடிகள் முன் பள்ளி வாசலில் இறக்கி விட்டு மறைவார். மாலை பள்ளி முடிய ஒரு நிமிடம் முன்னால் மந்திரம் செய்ததுபோல் தோன்றி காத்திருப்பார்.

அம்மா இறப்பதற்கு முன் பவர்மில் பல வைத்து லுங்கி உற்பத்தி செய்து வந்தார். நல்ல வியாபாரம். என்னைப் பார்த்துக் கொள்ள நேரம் கிடைக்காததால் அதை விற்று விட்டு, சேமியா செய்யும் இயந்திரம் இரண்டு வாங்கி, வீட்டளவில் சேமியா செய்து விற்றுவந்தார்.

  பணம் குறைவு என்றாலும் சுதந்திரம் அதிகம். அவருக்கு தோன்றும் போது மூடிவிட்டு என்னை பக்கத்து நூலகத்துக்கு அழைத்து போக முடியும். எப்போதும் வீட்டைச் சுற்றி சேமியா காய்ந்துகொண்டு இருக்கும். அதன் காரணத்தால் எனக்கு சேமியா ரவி என்கிற பெயர் நிலைத்தது.

அப்பா என்றும் அம்மாவைப் பற்றி அதிகமாக பேசியதில்லை. அவள் இல்லாக் குறை எனக்கு தெரிய வேண்டாம் என்று நினைத்திருக்கலாம். அவருக்கு இருக்கும் சோகத்தைக் கிளறுவதைத் தவிர்ப்பதற்காகவும் இருக்கலாம். தன் ஒரே பெண் எதிர்பாராமல் இறந்ததனால் அம்மா பக்கத்து பாட்டி புத்திர சோகம் தாங்கமுடியாமல் அப்பாவுடன் பேச்சு வார்த்தை நிறுத்தி விட்டாள். 


இப்படி அம்மாவின் பிரக்ஞையில்லாமல் இருந்து வந்த நான், திடீரென விடாமல் அவளைத் தேட ஆரம்பித்ததற்குக் காரணம் அந்த சந்திப்பு. ஒரு நாள் தமிழ் வகுப்பு நடந்து கொண்டு இருக்கும் போது, பள்ளி அலுவலகத்திலிருந்து ஒருவர் வந்து "ரவி, உன் தாத்தா உன்னைப் பார்க்க வந்திருக்கிறார்" என்றார். எனக்குத் தெரிந்து ஒரு தாத்தாவும் என்னைப் பார்க்க வரும் நிலையில் இல்லை. என்றாலும் தமிழ் பாடத்திலிருந்து கொஞ்சம் தப்பிப்போம் என்று அவருடன் நடந்தேன். 

பார்த்தவுடன் "கண்ணு, இம்புட்டு வளர்ந்துட்டே" என்றார். "நீங்க யார்?" என்றேன். "உன்னோட தாத்தா கண்ணு, உன் அம்மாவோட அப்பாடா ", என்றார். "எனக்கு அம்மா இல்லை" என்றேன் வெகுளித்தனமாக.

சிறிது கண் கலங்கிய தாத்தா தள்ளி நின்ற என்னை இழுத்து இருக்க கட்டிக் கொண்டார். புகையிலையும், வியர்வையும் கலந்த நாடி என்னைத் தாக்க நான் அவரைத் தள்ளினேன். "கண்ணு, ரொம்ப சந்தோசம்டா. இந்தா" என்று என் கையில் ஒரு தின்பண்டப்  பொட்டலம் தந்தார். "நான் உங்க வீட்டுக்குத் தான் போறேன். போகிற வழியில் உன்னைப் பார்க்க ரொம்ப ஆசையாய் இருந்ததால் பள்ளிக்கூடத்துக்கு வந்தேன். நீ வகுப்புக்குப் போய்க்கோ. வீட்டுல சந்திப்போம்" என்றார்.

பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போது அப்பாவிடம் சொல்லலாமா வேண்டாமா என்று யோசிப்பதற்குள் வீடு வந்துவிட்டது. வீட்டு வாசலில் தாத்தா காத்திருந்தார். அப்பா சற்று தூக்கிவாரிப் போட்டபடி, "மாமா, எப்ப வந்தீங்க. பார்த்து ரொம்ப நாள் ஆயாச்சு.

எப்படி இருக்கீங்க" என்று அதுவரை தொடர்பே இல்லாத உறவுக்குப் பொருத்தம் இல்லாத தொனியில் சரமாரியாக குசலம் விசாரித்தார். தாத்தா "மாப்பிள்ளை, நீங்க என்னை கட்டாயம் மன்னிக்க வேண்டும். அத்தை இன்னும் துக்கத்தில் மூஞ்சியைத் தூக்கி வச்சுக்கிட்டு உங்களிடம் கோபமாகத்தான் இருக்கா. ஆனால் எனக்குத்தான் பேரனைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை" என்றார். "அவன் என்னிக்கும் உங்க பேரன்தான். எப்ப வேணும்னாலும் நீங்க ரெண்டு பேரும் வந்து போகலாம்" என்றார் அப்பா. 

அதற்குப் பிறகு தாத்தா பள்ளி வருவது வாடிக்கை ஆகிவிட்டது. மாதம் ஒரு முறையாவது வருவார். என்னை தெருவோரக் கடைக்கு அழைத்துச் சென்று, ஆசை தீரும்வரை தின்பண்டம் வாங்கித் தருவார். அவர் வருவதை ஆவலோடு எதிர்பார்ப்பேன். அவருடைய புகையிலையும் வெற்றிலையும் கலந்த கதம்ப வாசனையும், சோடா புட்டி கண்ணாடியும், சிறிது கூன்போட்ட முதுகும் என் கனவில் அவ்வப்போது வர ஆரம்பித்தது. கொஞ்சம் பழகியவுடன், அவர் அம்மா பற்றிய கதைகளை சொல்ல ஆரம்பித்தார்.

அம்மாவின் நினைவே இல்லாத எனக்கு ஆவலைத் தூண்டும் வகையில் அவை அமைந்தது. சிறிது சிறிதாக அம்மாவை அறியும் ஆசை வந்தது. அம்மாக்கள் உயிரோடிருக்கும் நண்பர்கள் மீது பொறாமை வந்தது. அம்மாவை அறியும் ஆசை வெறியாக மாற, தாத்தாவை துளைத்து துளைத்து கேள்வி கேட்க ஆரம்பித்தேன். அவர் கதைகள் மூலம் அம்மா ஒரு அழகான, அன்பான பெண் என்பது தெரிந்தது. அவளை சூழ்ந்தவர்கள் மீது அவளது தாக்கம் என்னை வியக்க வைக்கும் அளவு இருந்தது. அவர்கள் அனைவரிடமும் பேசி அவளைப் பற்றி நிறைய அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் என்னை ஆக்கிரமித்தது. 

அப்பாவையும் சரமாரியாக கேள்வி கேட்க ஆரம்பித்தேன். குறுகிய காலமே கூட இருந்தாலும், அப்பா மனதில் அம்மா நிரந்தரமாக ஒரு இடம் பட்டா போட்டு விட்டதை உணர்ந்தேன். பல முறை அவரை கண் கலங்க வைத்தபின் "நமம ஒருமுறை அம்மா வீட்டுக்கு போயிட்டு வரலாமா?" என்றேன். 

"பாட்டி இன்னும் அம்மாவை இழந்த சோகத்தில் இருக்கிறாள். நாம் சென்றால் அவள் துக்கத்தை தூண்டியது போல் இருக்கும்" என்றார். இருந்தாலும் நான் பலமுறை நச்சரித்ததில் சம்மதித்தார். 

நீண்ட நாள் ஆசையில் இருந்த நான், பாட்டியின் அந்த சூடான வரவேற்புக்கு தயாராக இல்லை. அப்பாவைப் பார்த்து "நீங்க யாரைக் கேட்டு வந்தீங்க? என் மகளை தொலைத்துவிட்டு எந்த முகத்தோடு இங்கே வர நெனச்சீங்க?" என்று தொடராக தாக்க ஆரம்பித்தாள். அதைக் கேட்ட தாத்தா விரைந்து வந்து "அவங்கள நாந்தான் வரச் சொன்னேன். ரவி வளர்ந்துகிட்டே வரான். அவனைப் பார்க்கணும் போல இருந்தது. அவனுக்கும் அவன் பாட்டியைப் பார்க்க ஆசை இருக்காதா?" என்றார். பாட்டி கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு கண்ணைத் துடைத்தபடி "சரி ,  உள்ள வாங்க " என்று அரை மனதோடு வரவேற்றாள் . 

நுழைந்ததும் ஒரு பெரிய படம் மலர் மாலையோடு என் கண்ணை ஆக்கிரமித்தது. அதுதான் என் அம்மா என்று ஊகிக்க ஒரு வினாடி எடுத்தேன். முதல் முறை அம்மாவின் படம் பார்த்தவுடன் ஒரே சமயத்தில் பரவசமும் சோகமும் என்னை தாக்கியது. அந்த வீடு முழுவதும் அவளது தடயம் ஏதாவது தென்படுமா என்று தேட ஆரம்பித்தேன். அம்மா இசை கற்றுக் கொண்டபோது உபயோகித்த ஒரு குட்டி தம்புரா ஒரு ஓரத்தில். அதைக் கண்டதும் அவள் குரல் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை ஓட என்னை அறியாமல் இரு துளி கண்ணீர் சிந்தினேன்.

அந்த வீட்டில் எங்கு திரும்பினாலும் அம்மாவை நினைவுபடுத்தும் பொருள்கள். அவள் படித்த இரு புத்தகங்கள், அவள் உடுத்திய உடுப்புகள், சீப்பு ,  கண்ணாடி இத்யாதிகள் - பதினான்கு ஆண்டுகள் கழிந்தும் பாட்டி அம்மாவின் நினைவுகளை கடந்து செல்ல இன்னும் தயாராகவில்லை. இவ்வளவு நாட்கள் என் அம்மாவைப் பற்றி பெரிதும் யோசிக்காத நான் திடீரென்று அவளைப் பற்றி யோசிப்பதை நிறுத்த முடியாமல் தடுமாறினேன். 

ஒரு கோடை விடுமுறையை பாட்டி வீட்டில் கழித்தேன். எனக்கு பள்ளி சீருடை வாங்கி அதைத் தைக்க பக்கத்தில் இருக்கும் ஒரு தையல் கடைக்கு சென்றிருந்தோம். "வா கண்ணு ,  என்ன வேணும் ? ". குரல் மட்டும் கேட்டது யாரையும் காணோம். தேடியதில், ஐந்தடிக்கும் கீழே குள்ளமாக ஒருவர் டைலர் என்பதற்கு அடையாளமாக இன்ச் டேப், கத்திரிக்கோல் சகிதமாக தையல் மெஷின் பின்னாலிருந்து உதித்தார். "யார் கண்ணு நீ பார்த்ததில்லையே?" என்றார். "நான் ஈரோட்டிலிருந்து வருகிறேன். கோடி வீட்டு சதாசிவம் தாத்தாவின் பேரன் "  என்றேன். உடனே அவர் கண்ணில் ஒரு பிரகாசம். "நீ சாந்தாவின் பையனா?" என்றார்.

உற்சாகத்தில் ஒரு இன்ச் உயர்த்திருந்தார். "ஆமாம் "  என்றேன். கேட்டவுடன் மௌனமானார். சிறிது கண் கலங்கியது போல் தோன்றியது .  கண்ணை துடைத்தவர், "நானும் உன் அம்மாவும் பள்ளியில் நண்பர்கள்.  நான் குள்ளமாக இருப்பதால் எல்லோரும் என்னை கேலி செய்வார்கள். என்னுடன் முகம் கொடுத்து பேச உன் அம்மா மட்டுமே வருவாள். சிரிப்பு வரும்படி எதாவது சொல்லி என் கவலையிலிருந்து என் கவனத்தைத் திருப்ப முயற்சிப்பாள்.

எனக்கு அவள் நட்பு கிடைத்திருக்கவில்லை எனில் என்றாவது ஒரு கிணத்தில் குதித்திருப்பேன்". சொல்லி முடித்தவுடன் நிலவிய மௌனத்தில் காற்றின் கனம் என்னை அழுத்தியது. சின்ன வயதிலும் நண்பர்களிடையே அம்மா கொண்ட தாக்கம் என்னை பிரமிக்க வைத்தது. தைத்து முடித்த சீருடையை தந்தபின் கூலி வாங்க மறுத்துவிட்டார். "சாந்தாவை நினைவு படுத்தியதற்கு நன்றி" என்று மீண்டும் சிறிது கண் கலங்கினார்.

பள்ளி விடுமுறை நாட்களில் பாட்டி வீட்டுக்கு செல்வது வழக்கமானது. ஒவ்வொரு முறையும் அம்மாவின் அம்சங்கள் விளங்கும்படி எதாவது ஒரு அனுபவம் பெறுவேன். என் மனதில் அம்மாவின் பிம்பம் அழகாக உருவாகி, முழுதும் பரிச்சயம் ஆனதுபோல் உணரத் தொடங்கினேன். ஒவ்வொரு முறையும் நான் வீட்டினுள் நுழையும் போது பாட்டி என்னைக் கட்டிக்கொண்டு தன் மகளை நினைத்து இரண்டு கண்ணீர் துளிகள் சிந்துவாள். நான் கல்லூரிப் படிப்பு முடித்து, அமெரிக்காவில் வேலை கிடைத்து குடி பெயர்ந்தேன். ஒவ்வொரு முறை விடுமுறைக்கு இந்தியா சென்றபோதும் அதே அனுபவம். கொஞ்சம் கண்ணீர் சிந்திவிட்டு ஓரிரண்டு அம்மா கதை கேட்டபின் தான் வீட்டின் உள்ளே நுழைய முடியும். 

நாட்கள் ஓட, திருமணம் முடிந்த கையோடு பாட்டி வீட்டில் நுழைந்த எங்கள் இருவரையும் கட்டிக் கொண்டு அவளுக்கே உரித்த பாணியில் சிறிது கண் கலங்கி வாழ்த்தினாள். கூட ஒரு அம்மா கதை. "பாட்டி, அழாதீங்க. கொஞ்சம் அவகாசம் தாருங்கள். உங்க சாந்தா மாதிரியே ஒரு நல்ல பேரப்பெண் உங்களுக்கு கிடைப்பாள்."  என்றேன். என் இரண்டு நாள் மனைவி தலை குனிந்து வெட்கினாள்.

மூன்று வருடங்களில் எங்களுக்கு சொன்னது போல் ஒரு பெண் குழந்தை பிறந்தது. பாட்டியுடன் வீடியோ கால் செய்து புத்தம் புது பேத்தியைக் காண்பித்த போது "நீங்கள் சொன்னபடி என் சாந்தா திரும்ப பிறந்து விட்டாள். அவளையே உரித்துவைத்த மாதிரி இருக்கிறாள்" என்றாள். "பாட்டி, புதுக்குழைந்தைகள் எல்லாரும் பார்க்க ஒரே மாதிரிதான் இருப்பார்கள். உனக்கு எப்பவும் மகள் ஞாபகம் தான்" என்று கிண்டலடித்தேன். "சரிதான் போடா "  என்று வைந்தாள். அம்மாவின் ஞாபகமாக சாந்தா என்றே பெயரிட்டோம்


குழந்தை பிறந்த சில மாதங்களில் கொரோனா காரணமாக உலகமே அடைந்து கிடைக்க, பாட்டி, குட்டி சாந்தாவைச் சந்திக்க மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டியதாகி விட்டது. கொரோனா கட்டுப்பாடு கொஞ்சம் குறைந்து, நாங்கள் இந்தியா வருகிறோம் என்று சொன்னவுடன் பாட்டிக்கு ஒரே உற்சாகம்.  நாங்கள் வந்து இறங்கியதில் இருந்து அவள் சாந்தாவை விட்டு பிரியவே இல்லை. “ எத்தனை நாள் என்னை காக்க வைத்தாய்”  என்று வாய்க்கு வாய் சொல்லி அம்மாவே மீண்டும் பிறந்து வந்தது போதும் அவளைப் பாவித்தாள்.


காலையில்  ஓட்ஸ் கரைத்துக் கொண்டு  ஊட்ட உட்கார்ந்தால் “ என்னடா ஏதோ கொழ கொழ என்று  கண்ட கஞ்சியை  குடுக்குறீங்க!”  என்று கடிந்து கொண்டு இட்லி இரண்டு எடுத்து ஊட்ட ஆரம்பிப்பாள்.  மடியில் உட்கார வைத்துக் கொண்டு பூர்வீக கதைகளை வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டே ஊட்டுவாள்.

 கண் மூடி திறப்பதற்குள் இரண்டு  வாரங்கள் ஓடிவிட,  நாங்கள் மீண்டும் ஊருக்கு கிளம்பும் நாள் வந்துவிட்டது. “ ஏன்டா இன்னும் ஒரு வாரம் இருக்கக் கூடாதா?”  என்றாள். “ எங்கள் இருவருக்கும் வேலைக்கு திரும்பியாக வேண்டும்.  இன்னும் ஒரு மாதம் கொடுங்கள்.  உங்களுக்கும்,  தாத்தாவுக்கும் விசா வாங்கி விட்டு  அமெரிக்காவுக்கு  அழைக்கிறோம்” என்றேன். 

அவள் திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தது போல,  “ரவி, பரண் மேல ஒரு பெட்டி இருக்கு அதை எடுத்து தர முடியுமா?” என்று  கேட்டாள்.  நானும் மேலே ஏறி பல நிமிடங்கள் தேடிய பின் அந்த  தூசி படிந்த இரும்பு பெட்டி கிடைத்தது.  கொடுத்துவிட்டு நான் பயணத்துக்கு பேக் செய்ய நகர்ந்தேன்

சிறிது நேரம் கழித்து சாந்தா என்னிடம் ஓடி வந்தாள். “ அப்பா, இது என்னுடைய பழைய போட்டோ. பாட்டி கொடுத்தாங்க”  என்று ஒரு கருப்பு வெள்ளை புகைப்படத்தை கையில் அழுத்தினாள்.

“ நீயே ஒரு குட்டி உனக்கு ஏதுடா பழைய போட்டோ?”  என்றவாறு நான் அந்த புகைப்படத்தை பார்த்தேன்.  அப்படியே அதிர்ந்து போனேன். அது அம்மா குழந்தைப் பருவத்தில் இருக்கும் போது எடுத்த குழந்தை புகைப்படம்.

சாந்தாவுக்கு  கொஞ்சம் தாராளமாக தலையில் எண்ணெய் வைத்து அழுத்தமாக இரண்டு பின்னல் போட்டது போல அப்படியே அச்சாக அவளை உரித்து வைத்திருந்தது. நிமிர்ந்து பார்த்தால் பாட்டி “நான் சொன்னது சரியா? என் சாந்தாதான் மீண்டும் குழந்தையா வந்துருக்கா” என்றாள். மரபணுக்களின் விந்தை எங்களை வியக்க வைத்தது.

வரும் பயணத்துக்கு தயாராக இரவில் நங்கள் மும்முரமாக பெட்டியை அடைத்துக் கொண்டிருந்தோம், பாட்டி தன் தோளில் சாந்தாவை சரித்துப் படுத்தவாறு அவள் தலையைக் கோதிக்கொண்டு கதை சொல்லி தூங்க வைத்து விட்டு தானும் தூங்கிப் போனாள். பயணப் பெட்டிகள் தயாரானவுடன் பாட்டியை எழுப்பாமல், அலாக்காக சாந்தாவைத் தூக்கிக் கொண்டு எங்களறைக்குச் சென்று களைப்பில் சட்டென தூங்கிப் போனேன்.

விடி காலையில் தூக்கம் முழிக்கும் முன் முரட்டுத் தனமாக எழுப்பப் பட்டேன். என் மனைவி “ரவி, சீக்கிரம் எழுந்திரு. பாட்டி இறந்து விட்டாள்” என்றாள் மிக அவசரமாக. துள்ளி எழுந்து பாட்டி அறைக்கு ஓடினேன்.சாந்தாவை அணைத்திருந்த தோள் அதே நிலையில் இருக்க, பாட்டி உறைந்திருந்தாள். மூச்சு இல்லை. நான் அதிர்ச்சியில் தடுமாறி அமர்ந்தேன்.


பாட்டி இறந்துவிட்டாள் என்பதை நம்புவது கடினமாக இருந்தது. படுக்கும் முன்னர் அவளுடன் பேசியது என் காதில் இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது.  பொலிவோடு இருக்கும் அவள் முகத்தில் மெல்லிய மோனலிசா புன்னகை. எப்போது வேண்டுமானாலும் எழுந்து வருவாள் போல் படுக்கையில் ஒட்டாத இலகுவான சரீரம். இறுக்கியபடி இறுகிவிட்ட அவள் கையில் ஒரு காகிதம். கூர்ந்து நோக்கினால் அம்மாவின் கருப்பு வெள்ளை குழந்தைப் புகைப்படம்!


பெருகும் என் கண்ணீர், பாட்டியின் மீது மெதுவாக விழ, பார்வையை அசைக்க முடியாமல் உறைந்து அமர்ந்திருந்தேன். அவள் இறுதியாகப் பற்றிய அம்மாவின் புகைப்படம் என் கண்ணீர் வழியே மங்கியது. தூரத்தில் ஒரு சேவல் உதிக்கும் சூரியனை ஏதோ முதல் முறையாகக் கண்டது போல கொக்கரக்கோ என்று அசட்டு தனமாகக் கூவி ஊரை எழுப்பிக் கொண்டிருந்தது. அந்த சாதாரண காலை விடியலில் எனக்கு மிகவும் கனமான, மகிழ்ச்சியும், சோகமும் கலந்த புதுப்புது அர்த்தங்கள் புதைந்திருந்தன.

தேர்தல்

கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது அறிவிப்பு!

கவிஞர் வைரமுத்துவிற்கு ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. 1972இல் 'வைகறை மேகங்கள்' என்ற முதல் கவிதை நூலை எழுதிய வைரமுத்து கவிதைகள், நாவல்கள் உள்ளிட்ட 40 நூல்களை எழுதியிருக்கிறார். அதுமட்டுமின்ற... மேலும் பார்க்க

மாயா செய்த மாயம்! - அனுபவப் பகிர்வு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பார்வதி! - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

தீயால் விழித்த காடு! - குறுங்கதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

16 சதவீத அன்பும்... 100 சதவீத விடுதலையும்: ஒரு பெண்ணின் பயணம்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சமத்துவத்தின் குரல்: அமெரிக்கப் போராட்டமும், தோழர் கிளாரா ஜெட்கினின் தீர்மானமும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க