வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: தமிழ்நாடு உணவகங்கள், டீக்கடைகளுக்கு 1 மின்சார யூனிட்...
முற்றத்து அடுப்பும்... டிம்பர் டிப்போ நினைவுகளும் - நிழலாடும் பால்யம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
இன்றைய செய்திகள் அனைத்தும் போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைப் பற்றியே இருக்கிறது. நிலைமை வரும் நாட்களில் எப்படி மாறும் என தெரியவில்லை. ஆனால் அதைப்பற்றிய விவாதங்கள் , நகைச்சுவையுடன் கலந்த காணொளிகள், அதற்கான மாற்றுமுறைகள் என தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது இந்த எரிபொருள்.
இந்த நிலை சற்றே என்னை என் பால்ய காலத்தை நோக்கிப் பயணிக்க வைத்தது.
இப்போதாவது மின்சாரத்தின் மூலம் செயல்படும் பலவித உபகரணங்கள் வழக்கத்தில் உள்ளன.. என்னுடைய பால்யகாலத்தில் நாங்கள் கூட்டுக்குடும்பாக வசித்து வந்தோம்.
எனக்கு நினைவு தெரிந்த வரையில் வீட்டின் முற்றத்தில் வெந்நீர் காய்ச்சுவதற்காக ஒரு இடம் ஒதுக்கப்பட்டு அங்கு பெரிய அண்டாவை வைத்து விறகுகள் மூலம் , அதை சூடுபடுத்திக் கொண்டிருப்பார்கள். அதிகாலை முதல் மதியம் வரை அந்த அடுப்பு எரிந்து கொண்டே இருக்கும்.

யார் வேண்டுமானாலும் சுடு தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம். விறகுகளை வாங்க பலமுறை நான் சைக்கிளில் எங்கள் ஏரியாவில் இருந்த டிம்பர் டிப்போ விற்குச் சென்றதுண்டு.
அது ஒரு பெரிய கடை. சுள்ளி முதல் பெரிய பெரிய மரக்கட்டைகள் வரை அடுக்கப்பட்டிருக்கும். அதை ஒரு பெரியவர் மட்டுமே கவனித்துக் கொண்டிருந்தார்.
ஒடிசலான தேகம் அவருக்கு. ஆனால் அசால்ட்டாக எவ்வளவு மரக்கட்டைகளை வேண்டுமானாலும் எடுத்து வந்து தராசு தட்டில் வைத்து எடை போட்டுத் தருவார்..
அவரிடம் நன்கு காய்ந்த விறகுகள் மட்டுமே வேண்டும் எனக் கூறினால் போதும். பார்த்து பார்த்து எடுத்துக் கொடுப்பார். அவர் விறகுகளை எடுக்கும் நேரத்தில் நான் அங்குள்ள எடைக் கற்களை எடுத்து அதன் கனத்தை என்னால் தாங்க முடியுமா எனப் பார்த்துக் கொண்டிருப்பேன்.
ஒரு கிலோ, இரண்டு கிலோ என ஆரம்பித்து ஐந்து கிலோ , பத்து கிலோ என கொஞ்சம் கொஞ்சமாக எடைக் கற்க்ள் கூடிக்கொண்டே போகும். நான் ஐந்து கிலோ எடைக்கல்லுக்கு மேல் எதையும் தூக்கிப் பார்த்ததில்லை. எங்கே தூக்க முடியாமல் தூக்கி காலில் போட்டுக் கொண்டு விடுவோமோ என்ற பயம் ஒரு காரணம்.
எனக்குத் தேவையான மரக்கட்டைகள் வாங்கியவுடன் , அந்தப் பெரியவரே அதை பத்திரமாக என் சைக்கிளின் பின்னால் இருக்கும் கேரியரில் கயிற்றுடன் சேர்த்து விழாமல் இருக்கும்படி கட்டித் தருவார்.9கிக்
அவை கீழே விழாமல் வீடு வரை சைக்கிளை ஓட்டிச் செல்வது சவாலான விஷயம் அந்நாட்களில் எனக்கு.

தனி வீடு என்ற நிலை போய் , அடுக்கு மாடி குடியிருப்பு என வாழ்க்கை முறை வந்ததும், முற்றத்து அடுப்பு மறைந்தே போனது .
இன்றைய நிலை வேறு. கீஸர், இன்டக்ஷன் ஸ்டவ், ஹீட்டர் கம்பி என ஏதோ ஒன்று, மரக்கட்டைகளை ஆக்ரமித்து விட்டன வீடுகளில்..
கிராமங்களைத் தவிர, நகரங்களில் வாழ்பவர்கள் தனி வீடாகவே இருந்தாலும், விறகு அடுப்பை இப்போதெல்லாம் உபயோகப்படுத்துகிறார்களா ! எனவும் தெரியவில்லை.
அதனால் டிம்பர் டிப்போ வில் சாதாரணமாக சென்று* இரண்டு கிலோ விறகு கொடுங்க* எனக் கேட்க முடியுமா ! எனவும் தெரியவில்லை.
தற்போது உலகம் இருக்கும் நிலையில், எந்தப் பிரச்சினை எப்போது சரியாகும், இந்த நிலை மாறுமா? என எந்த உத்திரவாதமும் இல்லை.
நேற்றைய தினமும், இன்றைய தினமும், நாளைய தினமும் வெவ்வேறு விதமாக கடந்து செல்கின்றன.
பால்யத்தில் வாழ்ந்த வாழ்க்கை முறை எல்லாவற்றையும் கற்றுத் தந்தது. காலங்கள் உருண்டோடி, இன்றைய வேறுபட்ட வாழ்க்கை முறையில் சிறு தடங்கல்கள் வரும்போது, அந்த காலத்தில் இப்போது உபயோகித்துக் கொண்டிருக்கும் உபகரணங்கள் ஆகட்டும், இல்லை, வாகனங்கள் ஆகட்டும் என.இன்னும் பலவித விஷயங்கள் இல்லாமல் தானே வாழ்ந்தோம்.. மீண்டும் அப்படி ஒரு நிலை வந்தால் வாழாமல் போய்விடுவோமா என்ன!!






















