"நிறைய பேர் ரீலிஸ் போடுறாங்க, ஏன் உங்களை கூப்பிட்டேன் தெரியுமா?- சிறுவர்களை பாரா...
திருமணம், ஆசைவார்த்தை கூறி மதமாற்றத்தில் ஈடுபடுத்தினால் 7 ஆண்டு சிறை: மகாராஷ்டிரா அரசு புதிய சட்டம்
பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் மதமாற்ற தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம் அதற்கு தடை விதித்துள்ளது. இத்தடையை எதிர்த்து மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறைஈடு செய்துள்ளது.
தற்போது மகாராஷ்டிரா அரசும் மதமாற்றத்தடுப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மத சுதந்திர மசோதா என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா மற்ற மாநிலங்களில் உள்ள சட்டங்களை விட மிகவும் கடுமையான விதிகளைக் கொண்டுள்ளது.
7 ஆண்டு சிறை
இதன் ட்ி திருமணத்தின் பெயரில் சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும். அதோடு கூட்டாக மதமாற்றம் செய்வோருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

அதே தவறை தொடர்ந்து செய்தால் 10 ஆண்டு சிறையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். மதமாற்றம் செய்யப்பட்டவரின் பெற்றோர், உடன்பிறந்தோர் அல்லது உறவினர்கள் யார் புகார் அளித்தாலும், காவல்துறை அதை கட்டாயம் வழக்காக பதிவு செய்யவேண்டும். இந்தச் சட்டத்தின் கீழ் வரும் அனைத்துக் குற்றங்களும் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்களாகக் கருதப்படும்.
60 நாட்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும்
சட்டவிரோத மதமாற்றத்தின் மூலம் நடைபெறும் திருமணங்கள் அல்லது திருமணம் போன்ற உறவுகள் (live-in relationships) மூலம் பிறக்கும் குழந்தைகள், அந்தத் திருமணத்திற்கு முன்பு அவர்களின் தாய் எந்த மதத்தை சார்ந்திருந்தாரோ அந்த மதத்தை சேர்ந்தவராகவே கருதப்படுவார். மதம் மாற விரும்புபவர்கள் மற்றும் அந்தச் சடங்கை நடத்துபவர்கள், குறிப்பிட்ட அதிகாரியிடம் 60 நாட்களுக்கு முன்பே அறிவிக்கவேண்டும். மதம் மாறிய நபர் மற்றும் அந்த மதமாற்றச் சடங்கை நடத்திய நபர் அல்லது நிறுவனம் (பூசாரி, மௌலவி அல்லது அமைப்பு), மதம் மாற்றம் நடந்த 21 நாட்களுக்குள் குறிப்பிட்ட அரசு அதிகாரியிடம் அது குறித்த பிரகடனத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பரிசு பொருட்கள் கொடுப்பது குற்றம்
மதமாற்றத்திற்காக பரிசு பொருட்கள் வழங்குவது அல்லது வாக்குறுதி அளிப்பது குற்றமாகக் கருதப்படும். பரிசுகள், வேலைவாய்ப்பு அல்லது இலவசக் கல்வி வழங்குவதாக கூறுவது சிறந்த வாழ்க்கை முறை தருவதாகக் கூறுவது, தெய்வீகக் சக்தி மூலம் நோயை குணப்படுத்துவோம் என்று கூறுவது போன்றவை குற்றமாகும். சாதாரணக் குற்றவியல் சட்டங்களில் ஒருவரை குற்றவாளி என நிரூபிக்கும் பொறுப்பு புகாரளிப்பவர் அல்லது காவல்துறையிடம் இருக்கும். ஆனால், இந்த மசோதாவின்படி யார் அந்த மதமாற்றத்தை முன்னின்று நடத்தினாரோ அல்லது அதற்கு உதவியாக இருந்தாரோ அவர்களே அந்த மதமாற்றம் சட்டத்திற்கு உட்பட்டு நடந்தது என்பதையும், எந்த விதிகளையும் மீறவில்லை என்பதையும் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.
இம்மசோதா இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள மத சுதந்திர உரிமை (பிரிவு 25), பொது அமைதி, பொது சுகாதாரம் ஆகியவற்றுக்கு உட்பட்டது. மத சுதந்திரம் என்பது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்றும், அது மற்ற குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளதை மசோதாவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள மதத்தைப் பரப்புவதற்கான உரிமை என்பது, மற்றொரு நபரை வற்புறுத்தியோ அல்லது ஆசை காட்டியோ மதம் மாற்றுவதற்கான உரிமையை உள்ளடக்கியது கிடையாது என்றும் மசோதா கூறுகிறது.
மதச் சுதந்திரத்திற்கான உரிமையைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும். மேலும், மிரட்டல், மோசடி, ஆசை வார்த்தைகள் அல்லது திருமணம் ஆகியவற்றின் வாயிலாக மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மத மாற்றங்களைத் தடை செய்வதையும் இது குறிக்கோளாகக் கொண்டுள்ளது என்று சட்டமன்றத்தில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்திய உள்துறை இணையமைச்சர் பங்கஜ் போயர் தெரிவித்தார்.
இந்த மசோதா பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. சிட்டிசன்ஸ் பார் ஜஸ்டீஸ் அண்ட் பீஸ் உட்பட 35 சிவில் சமூக அமைப்புகள் இந்த மசோதாவை எதிர்த்துள்ளன. இது தனிமனித சுதந்திரம் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளைப் பறிப்பதாக இருக்கிறது என்று அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்த மசோதா அடுத்த வாரம் சட்டப்பேரவையில் விரிவான விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.















