செங்கோட்டை: `பணம் வசூலிக்கிறாங்க; ஆனா எனக்கு பங்கு வர்றதில்ல'- போட்டுடைத்த நகராட...
மருமகளை கர்ப்பமாக்கிய மாமனார்; உடந்தையாக இருந்த காதல் கணவர் - குமரியில் அதிர்ச்சி சம்பவம்!
கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி வடக்கன்பாகத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீவிக்னேஷ் (25). கூலித் தொழிலாளியான இவர் பி.எஸ்.பி. ஏ.ஐ படிக்கும் 21 வயது பெண்ணை காதலித்து வந்தார். பெண் வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி கடந்த ஜூன் 12-ம் தேதி அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டார் ஸ்ரீவிக்னேஷ். திருமணத்திற்குப் பின்பு தனது மனைவியுடன், ஸ்ரீவிக்னேஷ் தனது தாய், தந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். ஸ்ரீவிக்னேஷின் தந்தை செல்வகுமார் கராத்தே மாஸ்டராக இருந்தவர். தற்போது அப்பகுதியில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் இரவு காவலராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஸ்ரீவிக்னேஷின் மனைவி கர்ப்பமானார். அவர், தக்கலையில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்குச் சென்று தனது கருவை கலைக்க வேண்டும் என மருத்துவர்களிடம் கூறியுள்ளார். திருமணம் முடிந்து சில மாதங்களே ஆன நிலையில், கருவை கலைக்க காரணம் என்னவென்று மருத்துவர்கள் விசாரித்தனர். அதற்கு 'இது என் கணவர் மூலம் உருவான கரு அல்ல, என் மாமனார்தான் இதற்கு காரணம்' என கண்ணீர்மல்கக் கூறியுள்ளார் அந்த இளம்பெண். இதைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் மணவாளக்குறிச்சி போலீசுக்கு தகவல் தெரிவித்தது.

மணவாளக்குறிச்சி போலீஸார் நடத்திய விசாரணையில் தனக்கு நேர்ந்த துயரத்தை விவரித்திருக்கிறார் அந்த பெண். கடந்த செப்டம்பர் 9-ம் தேதி கணவர் வேலை முடிந்து வீட்டுக்கு வர தாமதமானது. மாமியார் கோயிலுக்கு சென்று விட்டார். இந்த தனிமையைப் பயன்படுத்தி மாமனார் செல்வகுமார் மகனின் காதல் மனைவியிடம் பாலியல் சில்மிஷம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் மாடியில் உள்ள அவரது அறைக்கு சென்றுவிட்டார். அங்கு சென்றும் மாமனார் செல்வகுமார் மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அந்த இளம் பெண் காதல் கணவர் ஸ்ரீவிக்னேஷிடம் செல்போனில் புகார் கூறினார். ஆனால் அவர் அதை நம்பவில்லை. இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி மருமகளிடம் சில நாள்களாக 7 முறை பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார் மாமனார் செல்வகுமார். இதையடுத்து இளம் பெண் கர்ப்பமானார்.
கர்ப்பத்துக்கு காரணம் மாமனார் என்பதை வெளியில் சொன்னால் மாமனார் தற்கொலை செய்துவிடுவார் என காதல் கணவர் ஸ்ரீவிக்னேஷ் மற்றும் மாமியாரும் மிரட்டியுள்ளனர். செய்வது அறியாது தவித்த இளம் பெண் கருவை கலைக்க முடிவு செய்து தக்கலை அரசு மருத்துவமனைக்கு சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து இளம்பெண்ணின் மாமனார் செல்வகுமார், அவருக்கு உடந்தையாக இருந்த காதல் கணவர் ஸ்ரீவிக்னேஷ், மாமியார் ராஜேஸ்வரி ஆகிய மூன்று பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்ததை அறிந்த காதல் கணவன், மாமனார், மாமியார் ஆகிய மூவரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை கண்டுபிடித்து கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
















