CPI: நூறாண்டைத் தொட்ட சிபிஐ; இந்தியாவில் வளர்ந்தது எப்படி? - வரலாறு சொல்லும் தகவ...
முதியவரிடம் ரூ.3 கோடி மோசடி; மகளிர் சுய உதவிக்குழு தலைவியின் மாஸ்டர் பிளான்; சிக்கியது எப்படி?
சென்னை அடையாறு பகுதியில் வசித்து வருபவர் சத்தியநாராயணன், (68). பங்கு சந்தையில் முதலீடு செய்து வந்த இவரை கடந்த 2025 ஜீலை மாதம் பெங்களூரில் உள்ள Fyers Securities என்ற பங்கு சந்தை முதலீட்டு நிறுவன அதிகாரிகள் போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். பின்னர் சத்தியநாராயணனை FYERS VIP என்ற வாட்ஸ் ஆப் குழுவில் அவர்கள் இணைத்ததோடு பங்கு சந்தை முதலீடுகள் குறித்த மெசேஜ்களை பதிவு செய்து குறுகிய காலத்தில் அதிகளவில் பணம் சம்பாதிக்கும் ஆசையை தூண்டியிருக்கிறார்கள். மேலும் அந்த வாட்ஸ் அப் குரூப்பில் தினமும் இவ்வளவு ரூபாய் லாபம் வந்ததது போல சிலர் தகவல்களை பதிவு செய்து சத்தியநாராயணனை நம்ப வைத்திருக்கிறார்கள். அதனால் சத்தியநாராயணனுக்கு பங்கு சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.

பங்குச் சந்தை முதலீடு தொடர்பாக சம்பந்தப்பட்ட பங்கு சந்தை நிறுவன முதலீடு அதிகாரிகளிடம் சத்தியநாராயணன் ஆலோசித்தபோது FYERSHNI என்ற செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்யும்படி கூறியிருக்கிறார்கள். அதன்படி சத்தியநாராயணனும் அந்தச் செயலியை தன்னுடைய செல்போனில் பதிவு செய்திருக்கிறார். பின்னர் பங்கு நிறுவன அதிகாரிகள், ஊழியர்களின் அறிவுறுத்தலின்படி 07.07.2025 முதல் 25.07.2025ம் தேதி வரை 3 கோடியே 40 லட்சத்தை முதலீடு செய்திருக்கிறார். அதன்பிறகு பங்கு சந்தை நிறுவன அதிகாரிகள் வாக்குறுதியளித்தபடி முதலீடு செய்த பணத்துக்கான வருமானம் வரவில்லை. அதனால், சத்தியநாராயணன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து National Cyber Crime Reporting Portal-ல் புகார் செய்தார். அதன்பிறகு சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் கொடுத்த புகாரின்பேரில், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவில் 07.10.2025-ம் தேதி வழக்கு பதிவுசெய்த போலீஸார் விசாரணையை தொடங்கினர். இந்தப் புகாரை சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் ராதிகா, துணை கமிஷனர் ஸ்ரீநாதா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சோபனா தலைமையிலான போலீஸார் விசாரித்தனர்.
சத்தியநாராயணன், அனுப்பிய பணம் எந்தெந்த வங்கி கணக்குகளுக்கு சென்றது என சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் சோபனா தலைமையிலான போலீஸார் ஆய்வு செய்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் தஞ்சாவூரைச் சேர்ந்த பாலசுப்ரமணியனுக்கும் (51) இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனால் அவரை போலீஸார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்படி தூத்துக்குடி முருகேஷ் என்பவரின் வங்கி கணக்குக்கு சத்தியநாராயணன் அனுப்பிய பணம் சென்றதை சைபர் க்ரைம் போலீஸார் கண்டறிந்தனர். அதனால் முருகேஷை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் முருகேஷின் மனைவி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ளார்.

அந்தக் குழுவில் பஞ்சவர்ணம் என்பவர் தலைவியாக இருந்து வருகிறார். அவரிடம் முருகேசனின் மனைவி, சுய உதவிக்குழுவில் 10,000 ரூபாய் கடனாக கேட்டிருக்கிறார். அதற்கு பஞ்சவர்ணம், நீங்கள் கடன் வாங்க வேண்டாம், அதற்கு பதிலாக உங்களின் வங்கி கணக்கை கொடுங்கள். அதில் சிலர் பணத்தை அனுப்புவார்கள். அதை எடுத்துக் கொடுத்தால் 15,000 ரூபாய் தருவதாக ஆசைவார்த்தைகளைக் கூறியிருக்கிறார். அதனால் முருகேசனின் மனைவி, தன்னுடைய கணவரின் வங்கி கணக்கு விவரங்களை பஞ்சவர்ணத்திடம் கொடுத்திருக்கிறார். அதில் சில லட்சம் ரூபாய் வந்திருக்கிறது. அந்தப் பணத்தை எடுத்து பஞ்சவர்ணத்திடம் முருகேசனின் மனைவி கொடுக்க, அதற்கு 15,000 ரூபாயை கொடுத்திருக்கிறார் பஞ்சவர்ணம். இந்தத் தகவலை தெரிந்ததும் முருகேசன், மகளிர் சுயஉதவிக்குழு தலைவி பஞ்சவர்ணம் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் இந்த மோசடிக்கு உதவிய குற்றச்சாட்டில் பஞ்சவர்ணத்தின் தோழி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த எஃப்சி (35) என்பவரையும் சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸார் கூறுகையில், ``இந்த வழக்கில் இதுவரை நான்கு பேரை கைது செய்திருக்கிறோம். இவர்கள் அனைவரும் மோசடி கும்பலுக்கு வங்கி கணக்குகளை கொடுத்து கமிஷன் பெற்றவர்கள். இதில் மகளிர் சுய உதவிக்குழுவின் தலைவியாக இருக்கும் பஞ்சவர்ணம், அவரின் தோழி எஃப்சி ஆகியோர் தங்களுக்கு தெரிந்த பெண்களிடம் வங்கி கணக்கு விவரங்களை பெற்று மோசடி கும்பலுக்கு கொடுத்து கமிஷன் பெற்று வந்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் கொடுத்த வங்கி கணக்குகளில் 45 லட்சம் ரூபாய் வரை மோசடி கும்பல் அனுப்பி அதை பெற்றியிருப்பது தெரியவந்திருக்கிறது. பஞ்சவர்ணத்துக்கும் மோசடி கும்பலுக்கும் இடையே புரோக்கராக சிலர் செயல்பட்டிருக்கிறார்கள். அவர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றனர்.


















