செய்திகள் :

யானையில் வந்த பண்ருட்டி ராமச்சந்திரன்! - திரும்பி பார்க்க வைத்த பாமகவின் முதல் வெற்றி!| முதல் களம்

post image

1991-ல் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தேர்தல் அரங்கில் காலடி எடுத்து வைத்தது. முதல் தேர்தலில், அக்கட்சியின் வேட்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் பெற்ற வெற்றி, பாமகவின் நீண்ட அரசியல் பயணத்துக்கு எப்படி ஒரு வலுவான தொடக்கமாக அமைந்தது, ஒரு சிறிய கட்சியால் எப்படி மாநிலத்திலும் மத்தியிலும் செல்வாக்கு செலுத்த முடிந்தது, விமர்சனங்களைத் தாண்டி அரசியல் அரங்கில் பாமக சாதித்தது என்ன என்பவற்றைத் தெரிந்துகொள்ள 1980-ஆம் ஆண்டுகளிலிருந்து பயணிக்கலாம்...

வன்னியர்களை ஒன்று திரட்டிய ராமதாஸ்

பட்டாளி மக்கள் கட்சியின் கதை 1991-ல் தொடங்குவதில்லை. 1980-ஆம் ஆண்டுக்குச் செல்ல வேண்டும். அந்த ஆண்டில் டாக்டர் ராமதாஸ், வன்னியர் சமுதாயத்தின் நீண்டகாலக் குறைகளையும் கோபத்தையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு தளமாக வன்னியர் சங்கத்தை உருவாக்கினார்.

அப்போது, தமிழகத்தின் மிகப்பெரிய பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் ஒன்றாக இருந்த வன்னியர்கள், கல்வி, வேலைவாய்ப்பு, அரசு உயர் பதவிகளில் போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் இருந்தனர். மருத்துவராக பணிபுரிந்துவந்த ராமதாஸ், வன்னியர்கள் வசிக்கும் கிராமங்களுக்கு சைக்கிளில் சென்று, அவர்களிடையே உரையாற்றி, இட ஒதுக்கீடு குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தி, அவர்களை ஒன்று திரட்டினார்.

ராமதாஸ்

 1987-ஆம் ஆண்டு, அப்போதைய எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியில், வன்னியர் சங்கம் முன்னெடுத்த மிகப்பெரிய ஒதுக்கீட்டு போராட்டம், வட தமிழகத்தையே அதிர வைத்தது. தேசிய நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டன, பல மாவட்டங்களில் போராட்டங்கள் வெடித்தன. மாநில அரசு இந்தக் கோரிக்கையை புறக்கணிக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. பின்னர் 1989-ஆம் ஆண்டில், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டிற்குள் தனியாக 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை உருவாக்கியது. இதன் மூலம், வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு தனி இடம் உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில்தான், வன்னியர் சங்கத்தின் மூலமான வெறும் போராட்ட அரசியல் நீண்டகால அதிகாரத்தை உருவாக்கித்தராது என்பதை உணர்ந்த ராமதாஸ், 1989 -ஆம் ஆண்டு ஜூலை மாதம், வன்னியர் சங்கத்தை பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றினார். போராட்டத்தில் கிடைத்த உரிமைகளை சட்டமன்ற அரசியலால் பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கத்திலேயே, அவர் இந்த மாற்றத்தினை மேற்கொண்டார்.

கட்சித் தொடங்கிய ஆரம்ப ஆண்டுகளில், பாமக தன்னை ஒரு சாதி அடையாளம் கொண்ட கட்சியாக மட்டும் காட்டாமல், 'பாட்டாளி மக்கள்’ என்கிற பெயருக்கு ஏற்ப, தொழிலாளர் வர்க்கத்தினரையும், நலிந்த பிரிவு மக்களையும் தனது அமைப்புக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார் ராமதாஸ். அந்த கட்டத்தில்தான், சில தலித் தலைவர்களும், இடதுசாரி செயற்பாட்டாளர்களும் பாமகவுடன் இணைந்தனர். இந்த இணைப்புகள் பாமகவை ஒரு சமூக நீதி இயக்கமாகவும், இடதுசாரி சிந்தனை கொண்ட முற்போக்கு அமைப்பாகவும் காட்ட உதவின. 

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட 1989-ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், பாமக 33 தொகுதிகளில் போட்டியிட்டாலும், எந்த ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. அதன்பின்னர் 1991 சட்டப்பேரவை தேர்தலில், பாமக 194 தொகுதிகளில் போட்டியிட்டபோதிலும், வெற்றி பெற்றது ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே.

பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் வேட்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன், 39,911 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் தேவசுந்தரத்தை வீழ்த்தினார். தேவசுந்தரத்துக்கு 38,789 வாக்குகள் கிடைத்தன. வாக்குகள் வித்தியாசம் 1,122 தான் என்றாலும், கட்சிக்கு முதல் வெற்றி என்பதால், அதை பாமக பிரமாண்டமாக கொண்டாடியது.

அந்தத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட்டதால், பாமகவின் முதல் வெற்றி வேட்பாளரான பண்ருட்டி ராமச்சந்திரனை, சட்டமன்றம் கூடிய முதல் நாளன்று, யானையில் அமரவைத்து அழைத்துவரச் செய்தார் ராமதாஸ். இந்த வெற்றிதான், அடுத்தடுத்த தேர்தல்களில் பாமகவுக்கு தொடர் வெற்றியைக்கொடுத்து, பிற்காலத்தில் மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவதற்கும் வித்திட்டது எனலாம். வன்னியர் இயக்கத்திலிருந்து பிறந்த ஒரு கட்சி, முதன்முறையாக தமிழ்நாட்டு அரசியலின் மையப் பகுதியில் நுழைந்த தருணம் அது.

ஒரே ஒரு இடம் வென்றிருந்தாலும், வடதமிழக மாவட்டங்களில் பாமக கவனிக்கத்தக்க அளவிலான வாக்குகளைப் பெற்றிருந்தது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்கு தளத்தில், பாமக வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி  இருப்பதாகவும், பல்வேறு தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக உயர்ந்திருப்பதாகவும், தேர்தலுக்குப் பின்னர் வெளியான தேர்தல் முடிவுகள் குறித்த பகுப்பாய்வு கட்டுரைகளில் அரசியல் திறனாய்வாளர்கள் குறிப்பிட்டிருந்தனர். அப்போதிருந்தே பாமக, தமிழ்நாட்டு அரசியல் கூட்டணியில் ஒரு தவிர்க்க முடியாத, சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய கட்சியாக உருவெடுக்கத் தொடங்கி, இத்தனை தொகுதிகள் வேண்டும் எனப் பேரம் பேசக்கூடிய அளவுக்கு தன்னை வளர்த்துக்கொண்டது. 

ராமதாஸ்

1990-களின் மத்தியில், கூட்டணி அரசியலில் பாமக தனது செல்வாக்கை வெளிப்படுத்தத் தொடங்கியது. 1996 சட்டப்பேரவை தேர்தலில் நான்கு இடங்களை வென்றது. அதைவிட முக்கியமானது — கூட்டணி கட்சிகளுக்கு வாக்குகளை ஒருங்கிணைத்து மாற்றும் திறன் பாமகவுக்கு இருந்தது. இதுவே, தேர்தல் வரும்போதெல்லாம் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளும் பாமக-வை நாடும் நிலையை உருவாக்கியது.1990-களின் இறுதியும் 2000-களின் தொடக்கமும் பாமகவுக்கு திருப்புமுனை காலமாக அமைந்தது. இதே காலகட்டத்தில், தேசிய கூட்டணிகளில் மிகவும் தேடப்படும் கூட்டாளியாக பாமக உருவெடுத்தது. 1998 மற்றும் 1999-ல், வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைந்தது. இந்த சமயத்தில்தான் அந்தக் கட்சி, முதன்முறையாக மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றது. பாமக வரலாற்றிலேயே மிக முக்கியமான கட்டமாக இது கருதப்படுகிறது.

வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், பாமக சார்பில் ஏ.கே. மூர்த்தி, தலித் எழில்மலை போன்றவர்கள் மத்திய அமைச்சராக பணியாற்றினர். இந்த உயர்வு, பாமகவுக்கு தேசிய அரசியலில் புதிய அடையாளத்தை உருவாக்கியது. அது ஒரு சாதி அடிப்படையிலான பிராந்தியக் கட்சியாக மட்டுமே இல்லை, தேசிய அளவில் பேசப்படும் சக்தி என்றும் நிரூபித்தது. அப்போதைய காலகட்டத்தில், மத்தியில் கூட்டணி அரசியல் கோலோச்சியதால், மத்திய அரசுக்கு நம்பகமான பிராந்திய கூட்டாளிகள் தேவைப்பட்டன. இதனால்,பாமக-வின் பேரம் பேசும் திறனும் உயர்ந்தது. 

அடுத்து, 2004 முதல் 2009 வரையிலான மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், அன்புமணி மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தார். அவருடன் ஆர். வேலு,  மத்திய ரயில்வே துறை இணை அமைச்சராக பணியாற்றினார். 

மத்திய ஆட்சியில் பங்குகொண்டதால் பாமக, கிராமப்புற சுகாதாரம், கல்வி, இடஒதுக்கீட்டு உரிமைகள், சமூக நீதி போன்ற துறைகளில் கொள்கை விவாதங்களை வடிவமைக்கும் வாய்ப்பைப் பெற்றது. தன் வாக்குத்தளத்தை, நிலையாக கூட்டணி கட்சிகளுக்கு மாற்றிக் கொடுக்கக்கூடிய, அதேசமயம் குறிப்பிடத்தக்க அமைச்சகப் பொறுப்புகளை பெறக்கூடிய ஒழுங்குமுறை கூட்டாளி என தன்னை அந்த காலத்தில் பாமக நிலைநிறுத்திக் கொண்டது.

தலித் எழில்மலை

2006–2011: பாமகவின் உச்ச அரசியல் செல்வாக்கு

2006 முதல் 2011 வரையிலான காலகட்டம், மாநில அரசியலில் பாமகவுக்கு மிக அதிகமான செல்வாக்கைப் பெற்ற உச்சகட்ட காலமாகப் பார்க்கப்படுகிறது. 2006 தேர்தலில் கருணாநிதி தலைமையிலான திமுக 96 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த நிலையில், அந்த ஆட்சியை நிலைநிறுத்த காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவு அவசியமானதாக இருந்தது. அந்த கூட்டணியில் மிக முக்கியமான துணை சக்தியாக இருந்தது பாமக. அந்தத் தேர்தலில் கட்சி 31 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களை வென்ற பாமக, திமுக அரசை வெளியில் இருந்து ஆதரித்தது. இது பாமகவின் மாநில அரசியல் பயணத்தில் ஒரு பெரிய முன்னேற்றமாக அமைந்தது.

இந்த 18 எம்.எல்.ஏ-க்களே அரசின் நிலைத்தன்மையை நிர்ணயிக்கும் `பேலன்ஸ் ஆஃப் பவர்' ஆக இருந்தனர். சட்டமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றுவதறகும், கூட்டணி அழுத்தங்களை சமாளிப்பதற்கும், அரசியல் சவால்களை எதிர்கொள்வதற்கும் பல கட்டங்களிலும் திமுக அரசு, பாமகவின் ஆதரவை நம்பியே இருந்தது. இதனால், ஆட்சியில் இடம்பெறாவிட்டாலும், பல்வேறு முக்கிய துறைகளில் பாமகவினர் நினைத்ததை சாதித்துக்கொள்ளும் அளவுக்கு செல்வாக்குடன் வலம் வந்தனர். இந்த காலம், பாமகவை ஒரு வாக்குத்தளம் கொண்ட கட்சியாக மட்டும் அல்லாது, மாநில அரசியலில் “கிங் மேக்கர்” ஆகவும் காட்டியது. 

அன்புமணி, ராமதாஸ்
அன்புமணி, ராமதாஸ்

இத்தகைய வெற்றிகளுக்குப் பிறகும், பாமகவின் செல்வாக்கு நீண்ட காலத்துக்கு நீடிக்கவில்லை. பல்வேறு காரணங்களால், அக்கட்சிக்கு சரிவு தொடங்கியது. கட்சி முழுமையாக வன்னியர் வாக்குத்தளத்தைச் சார்ந்துவிட்டதால், குறிப்பிட்ட சாதிக்கான கட்சி என்கிற முத்திரை அழுத்தமாக பதிந்து, இதர சமூகங்களில் விரிவடையும் திறன் குறைந்தது. அடிக்கடி மாறிய கூட்டணிகள், சமூகப்படிநிலைச் சிக்கல்கள் ஆகியவை கட்சியின் முன்னேற்றத்தைக் குறைத்தன. குறிப்பாக 2012 ல் தொடங்கிய, பட்டியலின மக்களுக்கு எதிரான ராமதாஸின் விமர்சனங்கள், இடைநிலை சாதிகளை ஒருங்கிணைத்து நடத்திய சில கூட்டங்கள் போன்றவையும் அக்கட்சிக்கு எதிரான அம்சங்களில் ஒன்றாக மாறிப்போயின. 

பாமகவின் மாநிலங்களவை எம்.பி-யாக இருந்த அன்புமணி, 2014-ல் ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்த சில சர்ச்சைக்குரிய மசோதாக்கள் வெற்றி பெறும் வகையில் ஆதரவாக வாக்களித்தது அல்லது வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தது, அவை நடவடிக்கைகளில் அதிகம் பங்கேற்காதது போன்றவை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகின. இவற்றின் தாக்கம், அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் எதிரொலித்தன.

2016 தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்ட நிலையில், ஒரு இடமும் அகட்சிக்கு கிடைக்கவில்லை. அதே சமயம், அந்தத் தேர்தலில் திமுகவுக்கு வடக்கு மற்றும் வடமேற்கு மாவட்டங்களில் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ஏற்பட்ட தோல்விக்கு, பாமக பிரித்த வாக்குகளே முக்கிய காரணமாக அமைந்தது. 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற பாமகவுக்கு 5 இடங்கள் கிடைத்தன. 2019 மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தல்களிலும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

இவற்றுக்கெல்லாம் மேலாக, கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரின் மகன் அன்புமணி ஆகியோருக்கிடையேயான உள்கட்சி மோதலால் பாமகவில் ஏற்பட்டுள்ள பிளவு, அக்கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

விமர்சனங்களுக்கு அப்பால்... 

பாமக மீதான சில குற்றச்சாற்றுகள், தேர்தல் தோல்விகள், சமீபத்திய பின்னடைவுகள் போன்றவை ஒருபக்கம் இருந்தாலும், 1991 தேர்தலில் பெற்ற முதல் தேர்தல் வெற்றியிலிருந்து அக்கட்சி தமிழக அரசியலில் சில முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது. வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்காக அரசியல் தளத்தில் குரல் கொடுத்தது, 1987-ல் நடத்திய போராட்டம் மூலம் இட ஒதுக்கீடு பெற்றது, சிதறிக் கிடந்த சமூகத்தை ஒரு சக்தியாக மாற்றியது போன்ற மிகப் பெரிய பங்களிப்பையும் செய்துள்ளது. கூட்டணி அரசியலில், குறிப்பாக ஒரு சிறிய கட்சி எப்படி மாநிலத்திலும் மத்தியிலும் செல்வாக்கு செலுத்த முடியும் என்பதற்கு பாமக புதியதொரு உதாரணமாக திகழ்ந்தது. அன்புமணி ராமதாஸ் வருகைக்குப் பின் நீட் எதிர்ப்பு, மது ஒழிப்பு, கல்வி சீர்திருத்தம், சுற்றுச்சூழல் போன்ற பிரச்னைகளை பாமக உரக்க பேசியது. 

இந்த நிலையில், பாமகவின் எதிர்காலம், அதன் மறுசீரமைப்பிலும், சாதியைத் தாண்டி பரவலாக வளரும் திறனிலும், சமகால புதிய பிரச்னைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் திறனிலுமே உள்ளது. அதைச் செய்தால், அக்கட்சி மீண்டெழும்!

`இன்று மேம்பாலம், நாளை மின் உற்பத்தி மையங்கள்' - ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரானின் பதில் என்ன?

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. அடுத்து வரும் சில வாரங்களில் ஈரானின் மீதான தாக்குதல் தீவிரம் அடையும் என்று அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்... மேலும் பார்க்க

நாகர்கோவில் மேயர் பதவியை ராஜினாமா செய்த கன்னியாகுமரி தி.மு.க வேட்பாளர் மகேஷ்! - என்ன காரணம்?

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளரான மகேஷ், நாகர்கோவில் மேயராக இருந்தார். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் கன்னியாகுமரி தொகுதி மகேஷ் போட்டியிடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த... மேலும் பார்க்க

காங்கிரஸின் 'இந்திரா கேரண்டி' ; சி.பி.எம் சொல்லும் வாட்டர் மெட்ரோ - கேரளத்தில் அதிரடி வாக்குறுதிகள்!

கேரளத்தில் வரும் 9-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் சி.பி.எம் மற்றும் எதிர்கட்சியான காங்கிரஸும் நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டன. பா.ஜ.க ஏற்கனவே தேர்தல் அறிக்கை வெளியிட்டு உள்ளது.... மேலும் பார்க்க

'குடைச்சல் கொடுக்கும் அதிகாரிகள்(?) மக்களிடம் நீதி கேட்கும் விஜய்; எடுபடுமா எம்.ஜி.ஆர் பாணி?'

'மக்களே நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உங்களுக்காக வலிகளையெல்லாம் தாங்கிக் கொண்டு அரசியலுக்கு வந்திருக்கிறேன். எனக்கு நீதி வேண்டும்' என பிரசாரத்தில் மக்களிடம் நீதி கேட்கிறார் தவெக தலைவர் விஜய்.விஜய்... மேலும் பார்க்க