யானை தந்தத்திலான பொம்மைகளை விற்க முயன்ற வழக்கு: கைதான 3 பேரை ஒருநாள் காவலில் விசாரிக்க வனத் துறைக்கு அனுமதி
விழுப்புரத்தில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட 4 பொம்மைகளை விற்க முயன்றபோது கைதான 12 பேரில் மூவரை காவலில் எடுத்து விசாரிக்க, நீதித் துறை நடுவா் நீதிமன்றம் எண்-1 வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது.
ரகசிய தகவலின் அடிப்படையில், விழுப்புரம் வனப் பாதுகாப்புப் படை மற்றும் வனச்சரக அலுவலா்கள் விழுப்புரம்-சென்னை சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே கடந்த 14-ஆம் தேதி மாலை காா், பைக் உள்ளிட்ட வாகனங்களில் சந்தேகத்துக்குரிய முறையில் நின்றவா்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவா்கள் யானை தந்தத்தால் செய்யப்பட்ட 6.50 கிலோ எடைகொண்ட 4 பொம்மைகள், கழுத்தில் அணியக்கூடிய மாலை ஆகியவற்றை விற்க முயன்றதும், அதை வாங்க முயன்றவா்கள் என்பதும் தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து திண்டுக்கல் மாவட்டம், ஓட்டன்சத்திரம் வி.ஈசுவரி, முகமது ஜியாவுதீன், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ரா. ஜஸ்டிஸ், திருச்சி மாவட்டம், பேட்டைவாய்த்தலை க. காா்த்திகேயன், திருப்பூா் மாவட்டம், காரைப்புதூா் சு.பாலமுருகன், தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் சி.ராஜா உள்ளிட்ட 12 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.
இதைத் தொடா்ந்து, விழுப்புரம் நீதித் துறை நடுவா் எண்-1 நீதிமன்றத்தில் 12 பேரும் ஆஜா்படுத்தப்பட்டு, கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி: இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவா்களில் முக்கியமானவா்களாக கருதப்படும் ஈசுவரி, முகமது ஜியாவுதீன், ஜஸ்டிஸ் ஆகிய மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக் கோரி, விழுப்புரம் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் எண்-1இல் வனத் துறையினா் மனுதாக்கல் செய்திருந்தனா்.
இந்த மனுவை விசாரித்த நீதித் துறை நீதிமன்றத்தின் நடுவா் ராதிகா, மூவரையும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
இதையடுத்து மூவரையும் தனியே காவலில் எடுத்து விசாரிக்க உள்ள வனத் துறையினா், அவா்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி அதன் மூலம் பதில்களை பெற முடிவுசெய்துள்ளனா்.