மறக்காமல் இந்த வழிபாட்டை செய்தால் உங்கள் கஷ்டங்கள் யாவும் தீரும்! சித்தர்கள் சொன...
ரயிலில் தள்ளி மாணவி கொலை: குற்றவாளியின் தண்டனையை குறைத்த உயர் நீதிமன்றம் - காரணம் என்ன?
தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவங்களில் ஒன்று, பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட வழக்கு. இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட வாலிபருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் கல்லூரி மாணவி சத்ய பிரியா. அதே குடியிருப்பில் வசித்த சதீஷ் என்பவரும் சத்யபிரியாவும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

சத்யபிரியாவின் பெற்றோர் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அவர் சதீஷுடன் பேசுவதைத் தவிர்த்தார். இதனால் சதீஷ் ஆத்திரத்தில் இருந்தார்.
இந்தச் சூழ்நிலையில், 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதற்காக சத்யபிரியா பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ், ரயில் வந்துகொண்டிருந்தபோது சத்யபிரியாவை தண்டவாளத்தில் தள்ளிவிட்டார். இதில் ரயில் மோதி, அவர் உடல் துண்டு துண்டாகச் சிதறியது.
இந்த வழக்கில் சதீஷ் கைது செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்றம், 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி சதீஷுக்குத் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
இந்தத் தண்டனையை உறுதி செய்வதற்காக உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதேசமயம், இந்தத் தீர்ப்பை எதிர்த்து சதீஷும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் என். சதீஷ்குமார், எம். ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பின்வருமாறு தீர்ப்பளித்தனர், ``சதீஷுக்குக் கீழமை நீதிமன்றம் வழங்கிய தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கிறோம்.

எனினும், அவர் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறைவு செய்யும் வரை, எந்தவிதமான தண்டனைக் குறைப்பும் செய்யப்பட்டு முன்கூட்டியே விடுதலை செய்யப்படக் கூடாது. அவரது வயது மற்றும் எதிர்காலத்தில் மனம் மாறி திருந்துவதற்கு வாய்ப்பு இருக்கலாம் என்பதன் அடிப்படையில் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்" என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கின்றனர்.


















