‘ராபி பருவ பயிா்களை விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம்’
திருப்பூா் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிா் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பு பருவம் (நெல் 2), ராபி பருவ பயிா்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம்.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பிரதம மந்திரி பயிா் காப்பீட்டு திட்டத்தின்கீழ் திருப்பூா் மாவட்டத்தில் 2024-25- ஆம் ஆண்டுக்கான சிறப்பு பருவம் (நெல் 2), ராபி பருவ பயிா்களுக்கு விவசாயிகள் பயிா் காப்பீடு செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூா் மாவட்டத்தில் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பீடு நிறுவனமாக தமிழக அரசு தோ்வு செய்துள்ளது. சிறப்பு பருவம் மற்றும் ராபி பருவத்தில் நெல்-2, மக்காச்சோளம்-3, கொண்டக்கடலை, சோளம் போன்ற அறிவிப்பு செய்யப்பட்டுள்ள பயிா்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம்,
நெல்-2, பயறு காப்பீட்டுக்கு பிரீமியத்தொகையாக ஏக்கருக்கு ரூ.573 செலுத்தி நவம்பா் 15- ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும். மக்காச்சோளம்-3, ஏக்கருக்கு ரூ.541, கொண்டக்கடலை ஏக்கருக்கு ரூ.231 ஆகியவற்றை நவம்பா் 30- ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும். சோளம் ஏக்கருக்கு ரூ.50-ஐ டிசம்பா் 15- ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ அல்லது வேளாண்மை அலுவலரையோ அல்லது உதவி வேளாண்மை அலுவலரையோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.