செய்திகள் :

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஜகந்நாதபெருமாள்: பித்ருதோஷம் தீரும்... புத்ரபாக்யம் கிடைக்கும்!

post image

ராமநாதபுரம் என்றாலே ஸ்ரீராமபிரான் நினைவு அனைவருக்கும் வரும். அங்கிருந்துதான் ராமபிரான் சமுத்திரத்தில் பாலம் கட்டி இலங்கை சென்றார். திரும்பி வரும்போதும் சேதுக்கரையில் சிவபிரதிஷ்டை செய்து வழிபட்டார். எனவேதான் அந்த ஊர் ஸ்ரீராமரின் பெயரைத் தன்னோடு தாங்கியிருக்கிறது. அதற்கு மற்றுமொரு காரணமும் உண்டு. ஸ்ரீராமரின் அவதாரம் நிகழ முக்கிய காரணமாகவும் திகழ்வது இந்தத் தலம் தான் என்கிறது தலபுராணம். வாருங்கள் ராமநாதபுரத்துக்கு அருகில் இருக்கும் திருப்புல்லாணி திவ்ய தேசம் குறித்த அற்புதத் தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

அயோத்தியின் சக்கரவர்த்தி தசரத மகாராஜா தனக்கு வாரிசு இல்லை என்று வருந்தித் தனக்குப் பரிகாரம் கூறுமாறு பண்டிதர்களைக் கேட்க அவர்கள் தென்பகுதியில் தர்ப்பை வனமாக இருக்கும் இடத்தில் யுகம்யுகமாக நிற்கும் ஓர் அரசமரம் உள்ளது என்றும் அது ஆதி ஜகந்நாதப் பெருமாளே என்றும் கூறினர். அந்த பெருமாளை வழிபட்டால் நிச்சயம் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்றனர். அதன்படி தசரதன் தென்கரைக்கு வந்து அரசமரமாக நின்ற ஆதிஜெகந்நாதப் பெருமாளை தரிசித்து, குழந்தைப் பேறு இல்லையே என்று வேண்டினார். அவரின் கடின முயற்சியால் மகிழ்ந்த பெருமாள் காட்சி கொடுத்து ஒரு மந்திரத்தையும் உபதேசித்தார். அதை உச்சரித்தபடியே தனது தோஷங்கள் நீங்க தசரதன் இங்கு ஒரு நாகப் பிரதிஷ்டை செய்தார். பின்னர் புத்ர காமேஷ்டி யாகம் செய்து பிரசாதமாக பாயசம் பெற்றார் என்கிறது திருப்புல்லாணி ஜகந்நாதப் பெருமாள் கோயில் தலவரலாறு.

திருப்புலாணி ஜகந்நாதபெருமாள்

ராமாயண காலத்துக்கும் முன்பே கிருத யுகத்தில் புல்லவர், கண்வர், காலவர் என்ற மூன்று மகரிஷிகளும் திருப்புல்லாணி தர்ப்பைக் தவம் இருக்க, அசுரர்களிடம் இருந்து அவர்களைக் காக்க அரசமர ரூபத்தில் தோன்றினார் பெருமாள் என்கிறது புராணம். மகரிஷிகளின் வேண்டுகோளை ஏற்று, சங்கு சக்ரதாரியாக அபய முத்திரையுடன் ஆதிஜெகந்நாதப் பெருமாளாகத் திருக்காட்சியும் தந்தார். அதே திருக்கோலத்தில் வரும் யுகம் தோறும் அங்கேயே கோயில்கொண்டு தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேதனைகள் தீர்த்து வரங்கள் அருள்வதாகவும் உறுதியும் கூறினார் என்கிறது தலவரலாறு.

எனவே இத்தலத்துக்கு 'சரணாகதி க்ஷேத்ரம்' என்ற புகழும் உண்டு. 108 திவ்ய ஸ்தலங்களில் திருப்புல்லாணி மட்டுமே சரணாகதி க்ஷேத்ரமாக உள்ளது சிறப்பு. சமுத்திரராஜன், விபீஷணர், வருணன், புல்லவர், காலவர், கண்வர் எனத் தொடங்கி இங்கு யார் சென்றாலும் அவர்களை தன் பக்தர்களாக சரணடைய வைத்து ஏற்றுக்கொள்பவர் ஆதிஜகந்நாத பெருமாள்.

சீதையைப் பிரிந்த துயரில் கடற்கரையில் தம்பி லட்சுமணன் மடியில் தலைசாய்த்துத் தர்ப்பை புல் மீது படுத்தார். மேலும் சமுத்திரத்தைக் கடக்க உபாயம் வேண்டி முறைப்படி தர்ப்பைப் புல் மீது தங்கி மூன்று நாள்கள் உபவாசம் இருந்தார். புல்லணையில் ஸ்ரீராமர் தங்கியதால் இத்தலம் ‘திருப்புல்லாணி’ எனப் பெயர் கொண்டது.

மூலவராகக் கருவறையில் ஆதிஜகந்நாதப் பெருமாள் ஸ்ரீதேவியும் பூதேவியும் இருபுறமும் நிற்க, அமர்ந்த நிலையில் அருட்காட்சி தருகிறார். எத்தனையோ ஜெகந்நாதர் இருந்தாலும் இவரே பழைமையானவர் என்பதால் ஆதிஜெகந்நாதர் எனப்படுகிறார். ‘புல்லாணித் தென்னன் தமிழன்’ என்று திருமங்கை ஆழ்வார் இவரை அழகுத் தமிழில் மங்களாசாசனம் செய்துள்ளார்.

திருப்புலாணி ஜகந்நாதபெருமாள்

கருவறைச் சுவரில் சூரியன், சந்திரன், தேவர்கள் ஆகியோர் சீதாதேவியை மீட்க ஆலோசனை செய்த கோலத்தில் உள்ளனர். ஜகந்நாதப் பெருமாளுக்கு வடகிழக்கே தர்ப்ப சயனப் பெருமாள் எனும் சயன ராமர் சந்நிதி உள்ளது. இங்கே ராமபிரான் இடுப்பில் உடைவாளோடு தர்ப்பைப் புல்லின் மீது படுத்துத் துயில் கொள்ளும் காட்சி வேறு எங்கும் காண முடியாத திருக்காட்சி. ராமரை அடைக்கலம் அடைந்த சமுத்திரராஜனும் அவர் மனைவியும் சரண் அடைந்த கோலத்தில் முன் மண்டபத்தில் உள்ளனர்.

ஆதிஜகந்நாதர் (அமர்ந்த கோலம்), சயன ராமர் (கிடந்த கோலம்), பட்டாபிராமர் (நின்ற கோலம்), அரசமர பெருமாள், சந்தான கோபாலகிருஷ்ணர் என இத்தலத்தில் ஐந்து திவ்ய வடிவங்களில் பெருமாளை தரிசிக்கலாம் என்பது சிறப்பு. இங்கு உற்சவர் கல்யாண ஜெகந்நாதர், தாயார் கல்யாணவல்லி எனும் பத்மாசனித் தாயார், தல விருட்சம் அரசமரம்; ஹேம, சக்ர, ரத்னாகர தீர்த்தங்கள் உண்டு. இங்கு மட்டுமே சேர்த்தி உற்சவம் வெள்ளிதோறும் உண்டு. அன்று ஊஞ்சல் உற்சவமும் நடக்கும்.

தசரதனுக்குப் பிள்ளை வரம் தந்த தலம் என்பதால் இன்றும் பிள்ளை வரம் வேண்டி வருபவர்கள், சேதுக்கரை கடலில் நீராடிவிட்டு, இங்குள்ள நாகர் சிலைக்கு முன்பு வணங்கி உபவாசம் இருந்து, மறுநாள் பிரசாதமாகத் தரப்படும் பால் பாயசத்தை அருந்தினால் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது ஐதிகம்.

திருப்புலாணி ஜகந்நாதபெருமாள்

மகாலட்சுமியை மடியில் வைத்துக்கொண்டு அருளும் நரசிம்மர், இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். இவர் தவிர ஜெகந்நாதர் சந்நிதி கோஷ்டத்தில் லட்சுமி நரசிம்மரும் அருள்கிறார். இவருக்கு சந்தனக் காப்பிட்டு வழிபட்டால் கடன் பிரச்னைகள் தீரும் என்கிறார்கள். நாகத்தின் மீது நடமாடும் சந்தானக் கண்ணன் சிலை இங்கு விசேஷம். ஆற்று நீர், குளத்து நீர், கடல் நீர் என முன்னீர்களாலும் புகழ்பெற்ற தலமிது.

திருப்புல்லாணியில் இருந்து 4 கி.மீ. தொலைவில் சேதுக்கரை உள்ளது. இங்கிருந்துதான் இலங்கை செல்ல பாலம் அமைக்கப்பட்டது. இங்குள்ள கோயிலில் இருக்கும் அனுமன் இலங்கையைப் பார்த்தபடி காட்சி தருகிறார்.

ஆதிஜகந்நாதரை வேண்டிக்கொண்டால் சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என்கிறார்கள். இதனால் இந்தப் பெருமாளுக்கு `வெற்றி பெருமாள்' என்றே பெயருமுண்டு.

சிவகங்கை மாவட்டம் பரியா மருதுப்பட்டி பறியா மருதீஸ்வரர்: நோய் தீர்க்கும் ஈசனின் சந்நிதி!

பிறவிப்பிணிக்கு மட்டுமல்ல வாழும்போது உண்டாகும் சகல பிணிகளுக்கும் மருந்தாகத்திகழ்பவன் ஈசன். ஈசனை வழிபட்டு நோய் அகன்ற அடியார்கள் பலர். ஈசனும் மருத்துவனாக மருந்தீசனாகக் காட்சிகொடுக்கும் தலங்களும் ஏராளம் ... மேலும் பார்க்க

கும்பகோணம் கரும்பாயிரம் கொண்ட விநாயகர்: வளம் பல தரும் மாசிச் சதுர்த்தி கரும்புச்சாறு அபிஷேகம்!

பகவான் மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து அசுரனை சம்ஹாரம் செய்தபின்பு கும்பகோணத்தில் தீர்த்தம் ஒன்றை உருவாக்கி அதில் நீராடி அதன்பின் அந்தத் தீர்த்தக் கரையில் ஒரு விநாயகர் திருமேனியை பிரதிஷ்டை செய்துவழிபட்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் சின்ன வெண்மணி பீமேஸ்வரர் திருக்கோயில்: பலம் தரும் ராகு - கேது பரிகாரத் தலம்!

மகாபாரதத்தோடு தொடர்புடைய பல ஆன்மிகத் தலங்கள் நம் தேசத்தில் உள்ளன. அதிலும் தமிழகத்தில் பல்வேறு தலங்கள் மகாபாரதக் கதாமாந்தர்களின் பெயரோடே திகழ்கின்றன. அப்படிப்பட்ட தலங்களில் வழிபடுவது மிகவும் விசேஷமானது... மேலும் பார்க்க

திருப்பூர் மாவட்டம், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயில்: சப்த கன்னியருக்கு விரலிமஞ்சள் வழிபாடு!

பஞ்சபூதங்களையும் இறைவனின் வடிவங்களாகப் பார்த்து வழிபடுவது நம் மரபு. அவற்றைப் பாதுகாக்க வழிபாடுகளே பிரதானமானத் திகழ்ந்தன. குறிப்பாக மலைகளில் இறைச்சந்நிதிகளை அமைத்தும் மலையையே இறைவனாக நினைத்தும் வழிபட்ட... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி: மங்கலம் அருளும் மாசி மயானக் கொள்ளை தலம்!

மகாசிவராத்திரியை அடுத்துவரும் அமாவாசை நாளில் நடைபெறும் வைபவம் மயானக்கொள்ளை. தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் ஆலயங்களில் அம்மன் ஆங்காரியாக எழுந்தருளி தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டும் உற்சவம். இந்தத் தி... மேலும் பார்க்க

ஈரோடு மஹிமாலீஸ்வரர் கோயில் : ராவணன் வம்சத்தினர் வழிபட்ட ஈசன்... திருமணக் கோலத்தில் அம்பிகை!

ராவணன் மாபெரும் சிவபக்தன் என்பதை அனைவரும் அறிவோம். அவன் வம்சத்தில் வந்த பலரும் சிவவழிபாட்டைக் கடைப்பிடித்தவர்கள் என்கின்றன புராணங்கள். அவர்களில் மாலி, சுமாலி, மஹிமாலி ஆகிய மூவரும் வழிபட்ட ஈசன் ஒருவர் ... மேலும் பார்க்க