செய்திகள் :

`ரீல்ஸ் போடும் முதல்வருக்கு வேடநத்தத்தின் கதறல் கேட்டிருக்க வேண்டாமா?' - குமுறும் கிராமத்தினர்!

post image

கடந்த 10 ஆம் தேதி மாணவி மர்ம முறையில் கொல்லப்பட்ட அதிர்ச்சியிலும் துயரத்திலும் இருந்து இன்னமும் அந்த விளாத்திகுளத்தின் வேடநத்தம் கிராமம் மீளவில்லை. சம்பவம் நடந்த ஆறாவது நாளில் நாம் அந்த கிராமத்துக்கு நேரில் சென்றிருந்தோம்.

போராடிய வேடநத்தம் மக்கள்
போராடிய வேடநத்தம் மக்கள்

கிராமத்துக்கு உள்ளேயும் வெளியேயும் என 15 இடங்களில் பாய்ன்ட் அமைத்து போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். சில இடங்களில் உள்ளூர் இளைஞர்களிடம் விசாரணை நடத்தி அதை நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர். உளவுத்துறையினரும் ஊருக்குள் சுற்றித் திரிந்து நிலைமையை அசைபோட்டுக் கொண்டிருந்தனர்.

முழுக்க முழுக்க காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்ததால் ஊரே கொஞ்சம் பதைபதைப்பாகத்தான் இருந்தது. 'உள்ளூர் ஆட்கள் யாரையும் தெரியாமல் உள்ளே செல்ல வேண்டாம். மக்கள் கொதிப்போடு இருக்கிறார்கள்' என்கிற செய்தி முன்பே நமக்கு கிடைக்கப் பெற்றதால், உள்ளூர் நபர் ஒருவரை தொடர்புகொண்டு அவரின் வழிகாட்டலின்படிதான் வேடநத்தத்துக்குச் சென்றோம். மாணவியின் உடலை இன்னும் குடும்பத்தினர் வாங்காததால், கிராமம் இயல்புநிலைக்குத் திரும்பாமலேயே இருந்தது.

கொல்லப்பட்ட மாணவியின் வீடு
கொல்லப்பட்ட மாணவியின் வீடு

``இந்த கிராமத்துல மொத்தம் 18 சாதிக்காரங்க இருக்கோம். இறந்த பொண்ணோட சாதிக்காரங்க மொத்தமே 4 குடும்பம்தான் இருக்காங்க. இந்த ஊருக்குள்ள இப்போ வரைக்கு சாதி மதத்தால ஒரு சண்டை நடந்தது இல்ல. அதனாலதான் அந்த புள்ளை கொல்லப்பட்ட சம்பவம் கேள்விப்பட்ட உடனே, எந்த வேற்றுமையும் பார்க்காம எல்லாரும் ஒண்ணா கூடிட்டோம். ஒரு நாள் முழுக்க சுட்டெரிக்குற வெயில்ல குறுக்குச்சாலையில உட்காந்து போராடுன பிறகுதான் அமைச்சர் கீதா ஜீவன் எங்களை பார்க்க வந்தாங்க. ரெண்டு நாள் கழிச்சுதான் கனிமொழி வந்தாங்க. நாங்க மட்டும் இறங்கி போராடலன்னா யாரும் கண்டுக்காம போயிருப்பாங்க. அவங்க வீட்டு புள்ளைக்கு நடந்தது. எங்க வீட்டு புள்ளைங்களுக்கு நடக்காதுன்னு என்ன நிச்சயம்?" என, கொதிக்கின்றனர் கிராமத்தினர்.

கிராமத்தினர் வழிகாட்டவே ஒரு பெருமாள் கோயிலின் தெப்பக்குளத்திலிருந்து சில மீட்டர்கள் தள்ளியிருந்த பலியான அந்த மாணவியின் வீட்டுக்குச் சென்றோம். வீடு முழுக்க வெறுமை சூழ்ந்திருந்தது. மாணவியின் இறப்பை இன்னமும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் இறந்து போன மாணவியின் படத்தை வைத்து விளக்குகூட ஏற்றாமல் இருந்தார்கள். 'எலும்பும் தோலுமாதான் இருப்பா, ஆனா எப்பவுமே சிரிச்ச மூஞ்சியா இருப்பா. தெரியாதவங்ககிட்ட அவ்வளவு லேசுல பேசிடமாட்டா, நல்லா படிக்கக் கூடியவ, பத்தாம் க்ளாஸ்ல ஸ்கூல்லயே ரெண்டாவது இடம் பிடிச்சிருந்தா..' பேத்தியின் நினைவை பகிர்ந்து கொண்டார் அவரின் தாத்தா.

மாணவியின் தந்தை
மாணவியின் தந்தை

மாணவியின் தந்தையின் கரத்தைப் பற்றி ஆறுதல் சொன்னோம், 'இப்போ போயி ஊருக்குள்ள இவ்வளவு போலீஸூ போட்ருக்காங்க. நாங்க புகார் கொடுக்க போனப்போவே விசாரிச்சிருந்தா என் புள்ளைய உசுரோடயாச்சு காப்பாத்திருக்கலாமே. புள்ளையை காணோம்னு நைட்டு பதறியடிச்சு போயி குளத்தூர் ஸ்டேஷன்ல நிக்கோம். அங்க பொண்ணுக்கு 17 வயசுதான் ஆகுது. அதனால நீங்க விளாத்திக்குளம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போங்கணு சொல்லிட்டாங்க. நைட்டு முழுசும் நாங்களே தேடிட்டு காலையில விளாத்திகுளம் ஸ்டேஷனுக்கு போனோம். அங்க 4 மணி நேரம் எங்களை அலையவிட்டு காத்திருக்க வச்சாங்க.

கடைசியில, 'பொண்ணு எவனயாச்சு லவ் பண்ணி ஓடியிருக்கும். போயி நீங்களே ஒழுங்கா தேடிப் பாருங்க'னு அவ்வளவு மோசமா லேடி இன்ஸ்பெக்டர் பேசுச்சு. என் பொண்ணை நான் அப்படியா வளர்த்திருக்கேன். ஒரு போன் கூட அனுமதி இல்லாம பேசாது கொள்ளாது. என் புள்ள மேல பழி போட்டு பேசுனாங்க. கடைசியில நாங்கதான் முள்ளு காட்டுக்கு நடுவுல கிடந்து புள்ளையோட உடம்ப கண்டுபிடிச்சோம். கை, கால், முகம்னு எல்லா பக்கமும் ஒரே காயம். இப்படி தூக்கி கொடுக்குறதுக்கா இத்தனை வருசம் வளர்த்து ஆள் ஆக்குனேன்...2 மாசம் முன்னாடி கூட அப்பா நான் கப்பல்ல வேலைக்கு போகணும். உன்னால படிக்க வைக்க முடியுமான்னு அத்தனை அருமையா கேட்டா...மகராசி...இன்னைக்கு அந்த புள்ள எங்க கூட இல்லையே..' என குமுறுகின்றார் மாணவியின் தந்தை.

குளத்தூர் காவல் நிலையம்
குளத்தூர் காவல் நிலையம்

அவருடைய கண்ணீரெல்லாம் வற்றிப்போய் ஒரு மூலையில் சுருண்டிருந்தார்.

'புள்ளையே போயிருச்சு. முறையா புகார் கொடுக்குறப்போ போலீஸ் ஒண்ணும் செய்யல. வர வேண்டிய அரசியல்வாதிங்க உடனே வரல. இப்போ அவ்வளவு பணம் கொடுக்கறோம், இவ்வளவு கொடுக்குறோம்னு சமாதானம் பேசுறாங்க. ஒரு புள்ள போயிருச்சு இன்னொரு புள்ள இருக்குல்ல. அதுக்காச்சு உதவும் பணத்தை வாங்கிக்கோங்கனு சொல்றாங்க. அப்படி சொல்றவங்க வீட்டில இப்டி ஒரு புள்ளையை தூக்கி கொடுத்துட்டு பணம் வாங்குவாங்களா? எங்களுக்கு பொண்ணை இப்படி சீரழிச்சது யாருன்னு தெரியனும். சனிக்கிழமை காலையில 10 மணிக்குள்ள குற்றவாளியை பிடிக்கிறோம்னு சொன்னாங்க. இப்போ வரை ஒரு துப்பு கூட கிடைக்கல போலீஸூக்கு. இவ்வளவு அலட்சியமான ஒரு போலீஸை பார்த்ததே இல்லை.

Stalin
Tamilnadu CM MK Stalin

மக்கள்தான் எங்க பொண்ணுக்காக குரல் கொடுக்கணும். இன்னைக்கு எங்க வீடு பத்திக்கிட்டு எரியுது. நாளைக்கு இங்க இருந்து ஒரு கொள்ளிய எடுத்து உங்க வீட்டையும் கொளுத்துவாங்க...மக்கள்தான் இதையெல்லாம் தட்டிக் கேட்கணும்" என்கின்றனர் துக்கம் விசாரிக்க வந்திருந்த உறவினர்கள்.

'முறையா புகார் கொடுத்தப்போ உதாசீனப்படுத்திட்டு, இப்போ எதுவுக்கு இவ்வளவு போலீஸூ?' என்கிற கிராமத்தினரின் குமுறலில் அத்தனை நியாயம் இருக்கிறது. ஓர் அரசு இயந்திரத்தின் அலட்சியமும் மெத்தனப்போக்கும் எத்தகைய இழப்பை ஏற்படுத்தும் என்பதற்கு வேடநத்தமே சாட்சி.

'காவல்துறையைக் கையில் வைத்துக் கொண்டு தேர்தலுக்காக ரீல்ஸ் போட்டுக் கொண்டிருந்த முதல்வர், இந்தக் குடும்பத்தின் குமுறலுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?'

சம்பவம் நடந்து ஏழாவது நாள் இன்று. இப்போது வரை காவல்துறை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

பேராவூரணி தொகுதியை கூட்டணிக்கு தரமாட்டார் எடப்பாடி! - அதிமுக வேட்பாளர் ரேஸில் முந்துவது யார்?

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று பேராவூரணி. கடமைடை பகுதியான இத்தொகுதியில் திமுக-வைச் சேர்ந்த அசோக்குமார் சிட்டிங் எம்.எல்.ஏ. திமுக-வை பொறுத்தவரை மீண்டும் அசோக்குமார் போட்... மேலும் பார்க்க

`RSS-க்குத் தடை விதிக்க வேண்டும்' - அமெரிக்க USCIRF அறிக்கை; காங்கிரஸ் விமர்சனமும் அரசின் பதிலும்!

சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (USCIRF), ஆர்.எஸ்.எஸ் (RSS) மற்றும் இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' (R&AW) ஆகியவற்றிற்கு எதிராகத் தடைகளை விதிக்கப் பரிந்துரைத்துள்ள நிலையில், ஆர்.எஸ்.... மேலும் பார்க்க

`மயிலாடுதுறையில் மல்லுக்கட்டும் திமுக, அதிமுக மா.செ.க்கள்; தவெக ஆதரவு?' மாவட்டத்தில் முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?'மாவட்ட கள நிலவரம்!மயிலாடுதுறைமயிலாடுதுறை... மேலும் பார்க்க

தொகுதி மாறி மம்தாவுக்கு `குறி'; எதிர்த்து களமிறங்கும் சுவேந்து அதிகாரி - பரபர மே.வங்க தேர்தல் களம்!

மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த முறை 4 கட்டங்களாக தேர்தல் நடந்த நிலையில், இப்போது ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது.... மேலும் பார்க்க

நாகர்கோவிலை வட்டமிடும் `பொன்னார்' - குமரி மாவட்டத்தின் 6 தொகுதிகள் கள நிலவரம்! முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?' மாவட்ட கள நிலவரம்!கன்னியாகுமரிகேரளாவைப்... மேலும் பார்க்க

TVK : 'மாமல்லபுரத்தில் இஃப்தார் விருந்தில் கலந்துகொள்ளும் விஜய்!' - தவெக அப்டேட்

தவெக சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை மறுநாள் நடக்கவிருக்கும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் பங்கேற்கவிருக்கிறார்.Vijayவிஜய்யின் தவெகவும் NDA வும் கூட்டணி பேச்சுவார்த்தையில் இறங்கியிருப்பத... மேலும் பார்க்க